நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் எதையெல்லாம் பேசாமல் தவிர்த்தார்?

    • எழுதியவர், ஆர்.மணி
    • பதவி, மூத்த பத்திரிகையாளர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகள். இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

இந்திய பிரதமர் நரேந்திர மோதி 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான தன்னுடைய பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

''காங்கிரஸின் 55 ஆண்டு கால பதவி பேராசை பிடித்த ஆட்சியையும் என்னுடைய 55 மாத சேவை ஆட்சியையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியின் (காங்கிரஸ்) ஆணவம்தான் 400 எம்.பி க்கள் கொண்டிருந்த அதனுடைய பலத்தை நான்காகக் குறைத்தது. ஆனால் சேவை மனப்பான்மை கொண்ட ஆளுங்கட்சியின் (பாஜக) பலத்தை இரண்டிலிருந்து 282 ஆக உயர்த்தியிருக்கிறது.

எங்களுடைய அரசு இந்திய மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான, வெளிப்படைத் தன்மை மிகுந்த, ஊழலுக்கு எதிரான, விரைந்த வளர்ச்சியை கொடுக்கும் அரசு எங்களுடைய அரசு.

ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் ஏன் கடுமையாக எதிர்க்கிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். பின்னர் புரிந்து கொண்டேன், முந்தைய காங்கிரஸ் ஆட்சிகளில் பாதுகாப்புத்துறை வர்த்தகங்களில் இடைத்தரகர்கள் இருந்தார்கள்.

யாராவது நேர்மையாக உழைப்பதை பார்த்தால் காங்கிரஸ் கட்சி அவர்களை பார்த்து கோபப்படுகிறது. இன்றைக்கு எதிர்கட்சி சிதைந்து கிடக்கிறது. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று நான் சொல்லும்போது, மகாத்மா காந்தியின் கனவைத்தான் நான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்'' என்று மோதி பேசினார்.

பிரதமரின் இந்த உரை பாஜக-வின் ஓர் அரசியல் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தப்படவில்லை.

வியாழக்கிழமை, நாடாளுமன்ற மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போதுதான் மோதி இப்படி பேசினார்.

காங்கிரஸூக்கு பதில்

மோதியின் உரை 100 நிமிடங்கள் நீடித்தது. பிரதமரின் மிக வலுவான உரைகளில் ஒன்றாகவே இதனை நிச்சயம் நாம் சொல்லலாம். அவரது உடல் மொழியும், ஹிந்தி மொழி பிரவாகமும், மோதிக்கே உரிய ஆக்ரோஷத்தின் உச்சத்தை வியாழக்கிழமை தொட்டது என்றே பிரதமரின் உரைகளை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு உணர்த்தியது.

காங்கிரஸின் பல குற்றச்சாட்டுகளுக்கும் மோதி பதிலளித்து பேசினார். ''அரசியல் சாசன அமைப்புகளான மத்திய திட்டக் குழு (ஏற்கனவே மோதி அரசால் கலைக்கப் பட்டுவிட்டது), நீதித் துறை, தேர்தல் கமிஷன் உள்ளிட்டவற்றை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு சிதைத்தது.

இந்திய ராணுவ தளபதியை 'குண்டா' என்று அழைத்தது. இந்திரா காந்தி மாநில அரசுகளை கலைக்கும் அரசியல் சாசன பிரிவு 356-ஐ 50 முறைகளுக்கும் மேல் பயன்படுத்தினார். அவசர நிலையை பிரகடனம் செய்தார். ஆனால் நான் அரசியல் சாசனம் உருவாக்கிய அமைப்புகளை சிதைப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது''. என்றார் மோதி.

வேலைவாய்ப்பு உருவாக்கம்

ஆனால், மோதியின் உரையில் மிக முக்கியமானது தன்னுடைய கிட்டத்தட்ட ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுவிட்டன என்ற அறிவிப்புதான்.

''என்னுடைய ஆட்சிக் காலத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சி குற்றஞ் சாட்டுகிறது. நம்முடைய நாட்டில் 10 முதல் 15 சதவிகிதம் வரையிலான வேலைவாய்ப்புகள்தான் முறையான, அமைப்பு சார்ந்த துறைகளில் இருக்கின்றன. 85 சதவிகித வேலைகள் அமைப்பு சாரா துறைகளில் தான் இருக்கின்றன.

செப்டம்பர் 2017 முதல் நவம்பர் 2018 வரையில் 1 கோடியே 80 லட்சம் பேர் முதன் முறையாக வருங்கால வைப்பு நிதிக்கு (Provident Fund or PF) பணம் செலுத்த துவங்கியிருக்கின்றனர்.

இந்த 1 கோடியே 80 லட்சம் பேரில் 65 லட்சம் பேர் 28 வயதுக்கு குறைவானவர்கள். ஆண்டுதோறும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை கணக்கிடுவதில் நாம் புதிய சூத்திரத்தை (Formulae) பயன்படுத்த வேண்டும். பழைய சூத்திரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாது'' என்றார் மோதி.

இதுதான் என்னைப் பொறுத்த வரையில் பிரதமரின் உரையில் இருக்கும் மிக முக்கியமான விஷயம் ஏன்றே நான் பார்க்கிறேன்.

வெளியாகாத வேலைவாய்ப்பு புள்ளிவிவரம்

இந்திய புள்ளியியல் ஆணையம் (Stastical Commission) ஆண்டுதோறும் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் உருவாகியிருக்கும் வேலைவாய்ப்புகள் எத்தனை என்பதை பற்றிய புள்ளி விவரத்தை வெளியிடும். இத்துறையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு இந்த புள்ளி விவரத்தை வெளியிடும்.

ஆனால் இந்த புள்ளி விவரம் 2015 முதல் வெளியிடப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓர் ஆங்கில நாளிதழ் “பிரத்யேக” ("Exclusive") செய்தியாக இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டு விட்டது.

அதன்படி இன்றைக்கு நாட்டில் இருக்கும் வேலையில்லா திண்டாட்டம், கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு அபாயகரமானதாக இருப்பதாக குறிப்பிட்டது.

இதற்கு முதலில் ஆளும் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் இந்த புள்ளிவிவரத்தை அரசு அங்கீகரிக்கவில்லை என்று நிதி ஆயோக் அமைப்பின் உயரதிகாரிகள் (மோதியால் கலைக்கப் பட்ட மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப் பட்ட அமைப்பு) டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

இந்த தகவல் வெளியான அடுத்த சில நாட்களில் குறிப்பிட்ட அமைப்பின் தலைவரும், இரண்டு உயரதிகாரிகளும் ராஜினாமா செய்து விட்டனர்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் ஆண்டுதோறும் உருவாகும் வேலைவாய்ப்புகள் பற்றிய புள்ளிவிவரத்தை கணக்கிட நாம் புதிய சூத்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்கின்ற மோதியின் 'புதிய போதனை'-யின் உண்மையான அர்த்தம் நமக்குப் புரியும்.

பாஜக-வின் 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிக்கையில் ஆண்டுதோறும் இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் இந்தியாவில் உருவாக்கப்படும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து, நாட்டில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க நாம் மாதந்தோறும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது.

மோதி அரசு பதவியேற்றது 2014-ம் ஆண்டு. 2015-ம் ஆண்டு முதல் இந்த புள்ளிவிவரமே வெளியிடப் படவில்லை என்பது சுதந்திர இந்தியாவின் வரலாறு காணாத அசாதரண நிகழ்வு.

வேலைவாய்ப்புகள் பற்றி மோதி சொன்ன இன்னோர் தகவலும் சுவாரஸ்யமானது. ''அமைப்பு சாரா வேலை வாய்ப்புகளை பொறுத்த வரையில் வாகனத்துறையில்தான் வேலைவாய்ப்புகள் அதிகம்.

2014-ம் ஆண்டிலிருந்து இன்று வரையில் 36 லட்சம் புதிய டிரக்குகள் மற்றும் வர்த்தகத்துக்கான வாகனங்கள் (Trucks or Commercial vehicles), 1.5 கோடி பயணிகள் வாகனங்கள் (passgenger vehicles) 27 லட்சம் ஆட்டோக்கள் வாங்கப் பட்டிருக்கின்றன.

இவர்கள் எல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லையா? கடந்த நான்கரை ஆண்டுகளில் வாகனத்துறையில் 1.25 கோடி பேர் புதிய வாய்ப்புகளை பெற்றிருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறுது''.

இந்த மதிப்பீட்டை கூறிய மோதி, இந்த புள்ளி விவரத்திற்கான ஆதாரம் எதிலிருந்து வந்தது, எந்த ஆய்வறிக்கையிலிருந்து இது வந்தது (Source of this data) என்பதை சொல்லவில்லை.

மோதி மேலும் கூறுகிறார்; ''வாகனத்துறையை போலவே வேலைவாய்ப்புகளை பெருக்கும் மற்றோர் துறை சுற்றுலாத்துறை. ஹோட்டல்களுக்கான அனுமதி 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. சுற்றுலாத்துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதை இது காட்டுகிறது.

கடந்த 55 மாதங்களில் சுற்றுலாத்துறையில் மட்டும் 1.5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன'', என்றார். ஆனால் இந்த புள்ளி விவரத்துக்கும் எந்த ஆதாரத்தையும் மோதி காட்டவில்லை.

ஒரு தகவலில் மட்டும் புள்ளிவிவரம் இல்லை என்பதை மோதி ஒப்புக் கொண்டார். ''பிரதான் மந்திரி முத்திரா யோஜனா திட்டத்தின் கீழ் 4.25 கோடி புதியவர்களுக்கு முதன்முறையாக வங்கிக் கடன் அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இதிலிருந்து எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டன என்பது பற்றிய புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை'' என்று கூறினார்.

இப்போது புரிகிறதா ஆண்டுதோறும் வெளியாகும் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய புள்ளிவிவரம் ஏன் வெளியிடப்படவில்லை என்பதன் அடிப்படை காரணம்.

பிரதமரின் உரையில் அவர் பேசியதை பார்த்தோம். ஆனால் தன்னுடைய நாலே முக்கால் ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகள் பற்றி மோதி ஏதும் கூறாமல் மெளனம் காத்தது பற்றியும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.

தவிர்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு

இந்திய பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டு, இந்தியாவை வல்லரசாக்கும், கறுப்பு பணத்தை அடியோடு ஒழித்து விடும், தீவிரவாதத்தை ஒழிக்க பெரியளவில் உதவி புரியும் என்றெல்லாம் பெரிய, பெரிய வார்த்தை ஜாலங்களால் மோதியாலும், அவருடைய தொண்டரடி பொடியாழ்வார்களாலும் வர்ணிக்கப் பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonitization), ஜிஎஸ்டி வரி விதிப்பு (இந்த இரண்டினாலும் சில கோடிக்கணக்கான தொழிலாரளர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர்) பற்றி பிரதமர் ஏதும் சொல்லவில்லை.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் குறைந்தது 150 பேர், செல்லாததாக அறிவிக்கப் பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்து, உடல் தளர்ந்து மாண்டு போயினர்.

நவம்பர் 8, 2016 அன்றுதான் மோதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறிவித்தார். நவீன இந்திய வரலாற்றில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது இது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன்பு நாடு விடுதலை அடைவதற்கு ஓராண்டு முன்பு 1946-லும், பின்னர் மொரார்ஜி தேசாய் ஆட்சியில் 1978 ஜனவரியிலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்து வரும் ஆயிரம் ஆண்டு கால இந்திய வரலாறு மோதியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி பேசும்.

ஆரம்பத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி நிரம்ப பேசிய மோதி பின்னர் அது பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் தன்னுடைய இந்த ஆட்சிக் காலத்தின் கடைசி கூட்டத் தொடரில், நேற்றைக்கு மக்களவையில் பேசிய மோதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ஏதும் பேசாதது விவரம் அறிந்தவர்களிடம் ஒரு நமட்டுச் சிரிப்பை வரவழைப்பது இயற்கையானதுதான்.

பண மதிப்பிழப்பு பற்றிசிவ சேனா கட்சி விமர்சனம்

பண மதிப்பிழப்பு பற்றி மோதி பேசவில்லை. ஆனால் மோதியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) அங்கம் வகிக்கும் சிவ சேனா கட்சி நேற்றைக்கு கடுமையாக பண மதிப்பிழப்பு பற்றி விமர்சித்தது.

சிவ சேனா எம்.பி ஆனந்தராவ் அட்சுல் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இப்படி பேசினார்;

''பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பேரழிவு. விவசாயிகள், வியாபாரிகள், நுகர்வோர் என்று எவருக்கும் இது நன்மை பயக்கவில்லை. கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர இது உதவவில்லை. ஆகவே பிரதமர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடந்து முடிந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகள் பற்றி நீங்கள் (பாஜக) சிந்தித்து பார்க்க வேண்டும். நீங்கள் தவறு செய்திருந்தால் அவற்றை நீங்கள் திருத்திக்கொள்ள அவசியம் எழுந்திருக்கிறது'' என்ற சிவ சேனா எம்.பி யின் பேச்சு கூர்ந்து கவனிக்கத் தக்கதுதான்.

தவிர்க்கப்பட்ட ராமர் கோயில் விவகாரம்

இதே போல மற்றோர் முக்கிய பிரச்சனையான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் குறித்தும் மோதி ஏதும் பேசவில்லை.

ஏற்கனவே ராமர் கோயில் விஷயத்தில் உத்திரபிரதேசத்தை ஆளும் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் மோதி நாடாளுமன்றத்தில் தன்னுடைய முதல் ஆட்சிக் காலத்தின் இறுதி உரையில் ஏதும் சொல்லாதது யாருக்கான சமிக்ஞை என்பதை அறிய நாடு காத்திருக்கிறது.

அடுத்து வரும் 12 மாதங்களில் இந்தியா சர்வதேச அளவில் சந்திக்க காத்திருக்கும் சவால்களில் முக்கியமானது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களுடைய உற்பத்தியை எந்தளவுக்கு கட்டுப் படுத்தப் போகின்றன என்பது, அமெரிக்கா - சீனாவுக்கு இடையிலான வர்த்தக போர் (Trade War), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 'பிரெக்ஸிட்' (Brexit), ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் எழ காத்திருக்கும் பிரச்சனைகளும், அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் புதிய அச்சுறுத்தல்களும், இந்தியாவின் எல்லைப் புற நாடுகளில் அதிகரித்து வரும் சீனா-வின் செல்வாக்கு என்று சிலவற்றை குறிப்பிடலாம்.

இவற்றில் எது பற்றியும் மோதி வியாழக்கிழமை தன்னுடைய உரையில் ஏதும் குறிப்பிடவில்லை. மாறாக, மோதியின் உரை 2019 மக்களவை தேர்தல்களுக்கான உரையாகத்தான் 90 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தது. மோதியின் உரை போர்க்களத்தில் அவர் தன்னுடைய பாஞ்ஜஜன்னிய சங்கை ஊதி போருக்கு தயாராகி விட்டார் என்பதைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது. ஆங்கிலத்தில் சொல்லுவார்களே He has sounded the poll bugle அதுதான்.

நிதின் கட்கரிக்கு காங்கிரஸ் பாராட்டு ஏன்?

வியாழக்கிழமை மற்றோர் சுவாரஸ்யமான சம்பவமும் மக்களவையில் நடந்தது. அது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தேசிய தலைவருமான நிதின் கட்கரியை பாராட்டி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தங்களுடைய மேசைகளை தட்டியது.

கடந்த சில நாட்களாகவே நிதின் கட்கரி, மோதிக்கு எதிராக மறைமுகமாக பேசி வருகிறார். மூன்று மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புனே-வில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய நிதின் கட்காரி, பாஜக-வின் தோல்வி பற்றி இப்படி பேசினார்;

''வெற்றிக்குப் பல தந்தைமார்கள் உண்டு, ஆனால் தோல்வி ஓர் அனாதை''. அடுத்த சில நாட்கள் கழித்து, 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக கொடுத்த பல வாக்குறுதிகள் குறிப்பாக வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்பது பற்றிய விஷயம் மற்றும் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்பது பற்றிய விஷயம் தொடர்பாக பேசும்போது நிதின் கட்கரி இப்படி சொன்னார்,

''கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் மக்களால் அடிக்கப்படுகிறார்கள். தங்களால் செயற்படுத்தக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அரசாங்கள் கொடுக்க வேண்டும்''. இது பலரது புருவங்களையும் உயர்த்தியது.

வரும் தேர்தலில் பாஜக 200க்கும் குறைவான இடங்களை வென்று, தனிப் பெரும்பான்மையை பெறாவிட்டால் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரிதான் இருப்பார். மோதி இருக்க மாட்டார் என்ற பேச்சு அரசியல் அரங்கில் தற்போது பரவலாகவே பேசுபடு பொருளாகியிருக்கிறது. நிதின் கட்கரி ஆர்எஸ்எஸூ க்கு நெருக்கமானவர் என்பது கூடுதல் தகவல்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் நேற்றைக்கு நிதின் கட்கரி யை பாராட்டி சோனியா காந்தியும், மல்லிகார்ஜூன கார்கேவும் மேசைகளை தட்டியதன் உண்மையான பொருள் நமக்கு தெளிவாக புரியும்.

இது மோதிக்கும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பதை அறிய ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இறுதியில் சிரிக்கப் போவது மோதியா அல்லது நிதின் கட்கரியா என்பதை அறிய நாம் அடுத்த நூறு நாட்கள் காத்திருக்கத்தான் வேண்டும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :