பிரியங்கா காந்தி: அரசியலில் எத்தகைய பெண்கள் விரும்பப்படுகிறார்கள்?

    • எழுதியவர், திவ்யா ஆர்யா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அழகான முகங்களை பற்றி புகழ்ந்தும், சில சமயம் வியந்தும் பாராட்டும் நாம், அழகாக இல்லை என சிலரை இகழ்ந்தும், இழித்தும் பேசுகிறோம். அதாவது ஒருவரின் படிப்பு, திறமை, குணம் என்பவற்றோடு, அவர் ஓரளவாவது அழகாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அதிலும் இந்த எதிர்பார்ப்புகள் பெண்களைப் பற்றியது என்பதால் அதை பற்றி அதிகம் விளக்க தேவையில்லை.

தோற்றத்திற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றாலும், நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமாக இருக்கிறது. அழகே சுமையாக மாறுவதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன். பார்ப்பதற்கு நன்றாக இருந்தால், மூளை இருக்காது என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன்.

பார்ப்பதற்கு நன்றாக இருப்பதால்தான் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று சொல்லி, சம்பந்தப்பட்டவர்களின் திறமையை அழகு என்ற போர்வையில் மறைப்பதையும் என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டபோதும், இந்த இரட்டை அளவுகோல் கொண்டு அவர் மதிப்பிடப்படுவதை காண முடிந்தது.

பிரியங்காவின் நியமனம் குறித்து சில பாஜக தலைவர்களின் கருத்துக்கள் இவை:

"மக்களவை தேர்தலில் சாக்லேட் போன்ற முகத்தை முன்னிறுத்துகிறது காங்கிரஸ்."

"இதனால் உத்தரப் பிரதேச தேர்தல் கூட்டங்களில் இருக்கைகள் காலி இருக்காது என்ற நன்மை ஏற்படும்"

"அழகான முகத்தால், வாக்குகளை வாங்க முடியாது"

ஆனால், ஒரு பெண் தலைவர் 'அழகு' என்ற வரையறைக்குள் அடங்கவில்லை என்றால் அவருக்கு மரியாதை கிடையாது என்று பொருள் கிடையாது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியைப் பற்றி பேசிய முலாயம் சிங் யாதவ், "ஒருவர் பாலியல் வல்லுறவு கொள்ள விரும்பும் அளவுக்கு மாயாவதி என்ன பேரழகியா?" என்று ஒரு முறை கேள்வி எழுப்பியிருந்தார்.

ராஜஸ்தானில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சரத் யாதவ், முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா குண்டாகி விட்டார், அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதாவது, எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், அரசியலில் பெண்கள், ஆண்களைவிடக் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கும் ஆண்களின் எண்ணிக்கையும் குறைவல்ல.

ஓரிடத்தில் நீங்கள் அவமதிக்கப்பட்டால், உங்களுடைய உடலைப் பற்றி விமர்சித்தால், உங்கள் வேலையை குறைவாக மதிப்பிட முயற்சி செய்தால், உங்களால் அங்கு இருக்கமுடியுமா?

உங்கள் பதில் இல்லை என்பதாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெண்களைப் பாருங்கள், இவர்கள் அந்த சிக்கலான பாதையில் இருந்து விலகவில்லை, தோல் சிவப்போ, கறுப்போ, குண்டோ, ஒல்லியோ தங்கள் இடத்தில் நிலையாக நிற்கிறார்கள்.

இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால், நம் நாட்டின் முதல் மக்களவையில் நான்கு சதவிகிதமாக இருந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை, 16வது மக்களவையில் 12 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

இருந்தபோதிலும், நமது அண்டை நாடானா நேபாளத்தில் 38 சதவிகிதம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் 20 சதவிகிதம் என்ற அளவில் மக்களவையில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது.

இதுமட்டுமா? ஆப்பிரிக்க நாடான ரவாண்டாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 63 சதவிகித பெண்கள் என்ற தகவல் வியப்பளிக்கலாம்.

இந்தியா விடுதலையடைந்தபோதே பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்துவிட்டது. ஆனால், அரசியலில் வலுவான பதவிகளில் அமர்வதற்கு, தேர்தல்களில் வாக்களிப்பது என்ற ஜனநாயக கடமை மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அரசியல் கட்சிகள் ஆண்களின் அதிகார மையமாக இருக்கிறது, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ பெண்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்குகூட அவர்களுக்கு மனம் வருவதில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் 7,500 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினால், அதில் எட்டு சதவிகிதம் அதாவது 500 வேட்பாளர்கள் மட்டுமே பெண்கள்.

இந்த எட்டு சதவிகித பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் எந்தவொரு கட்சியின் சார்பிலும் போட்டியிடவில்லை, அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர் என்று 'ஜனநாயக சீர்திருத்த சங்கம்' என்ற ஆராய்ச்சி அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஆம் ஆத்மி கட்சி 59 வேட்பாளர்கள், காங்கிரஸ் 60 மற்றும் பிஜேபி 38 பெண்களை தங்கள் வேட்பாளர்களாக களம் இறக்கினார்கள்.

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே, போட்டியிட்ட வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள் பெண்கள் என்ற நிலை இருந்தது.

ஒரு கட்சி, தனது வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, அவரது வெற்றி வாய்ப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்ற அடிப்படை உண்மையை மறுக்க முடியாது.

பொதுவாக, ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்ற பொதுக்கருத்து நிலவுவதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

அரசு அளித்த தகவல்களின்படி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் களம் இறங்கிய வேட்பாளர்களில் பெண்களே அதிக வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளனர். அதாவது, போட்டியிட்டவர்களில் 9 சதவிகித பெண்கள் வெற்றி பெற்றால், ஆண்களின் வெற்றியோ ஆறு சதவிகிதமாக இருந்தது.

நிலைமை இப்படியிருந்தாலும், அரசியலில் ஆண்களின் ஆதிக்கம், பெண் வேட்பாளர்களுக்கு சவாலாக இருக்கிறது. எனவே மாற்றம் தேவை என்றால், கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறாது. ஒருவேளை மசோதா நிறைவேறினாலும் அது அமல்படுத்தப்படாது.

இந்த சமயத்தில் எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால், இட ஒதுக்கீடுதான் சரியான வழியா?

பஞ்சாயத்து நிலையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு என்றும், பிறகு 50 சதவிகித ஒதுக்கீடு என்றும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்பிறகு பஞ்சாயத்து நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்தது.

ஆனால், அடிப்படை கொள்கைகளிலோ அல்லது சமூகத்தில் மாற்றமோ ஏற்படாத நிலையில், பெரும்பாலான பெண்கள் பெயரளவில் தான் பதவி வகிக்கின்றனர். செயலளவில், அவர்களின் கணவர், தந்தை, மாமனார் அல்லது குடும்பத்தின் பிற அதிகாரம் வாய்ந்த உறுப்பினரே பதவியை நிர்வகிக்கிறார்.

இதற்கு காரணம், பெண்களின் திறமையை குறைவாக மதிப்பிடுவதும், அவர்களது திறனை புறக்கணிப்பதும்தான். கற்பதற்கும், முன்னேறுவதற்குமான வாய்ப்பை கொடுக்காமல் அவற்றில் இருந்து பெண்களை விலக்கி வைப்பதுதான் காரணம்.

ஆனால் சில பெண்கள் இதுபோன்ற தடைகளையும் மீது, தங்கள் ஆளுமைத்தன்மையை நிலை நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் அழகானவர்கள், கருப்பானவர்கள், குண்டானவர்கள். பழங்குடியின சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும், ஏழையோ அல்லது நடுத்தர வர்க்கமோ, அவர்கள் பெண் என்பதையும் தாண்டி சாதித்து காட்டியிருக்கின்றனர்.

தலைமை பொறுப்புக்கு வரவேண்டும், அச்சமற்று இருக்க வேண்டும் என்ற தெரிவை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

நேர்மையற்ற கருத்துக்களை கூறுவது தங்களை குறைத்து காட்டாது, அவற்றை வெளிப்படுத்துபவர்களின் தரத்தை காட்டுகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தால் நிதர்சனத்தை மாற்ற முடியாது; மாற்றத்திற்கான குரலை எழுப்பவேண்டும், உரத்த குரலில் வலியுறுத்தவேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :