You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண்ணை உண்ட பன்றிகள் - ரஷ்யாவில் பரிதாபம் மற்றும் பிற செய்திகள்
தங்களின் இருப்பிடத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட ஒரு 56 வயதான பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உட்மர்ட்டியா என்ற மத்திய ரஷ்யப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த விவசாயியான அப்பெண்ணுக்கு, வலிப்பு நோய் வந்திருக்கலாம் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறந்த பெண்ணின் உடலை அவரது கணவர் பின்னர் கண்டறிந்துள்ளார். அதிக அளவிலான ரத்த இழப்பினால் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இப்பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாளில் வெகு முன்னதாகவே உறங்கியுள்ளார்.
பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணவில்லை என்பதால் தேடியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு: கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
திருச்செந்தூர் அருகே கல்லாமொழி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் நிலக்கரி இறங்குதளத்தை கண்டித்தும், தூண்டில் பாலம் அமைத்து தர வலியுறுத்தியும், ஆலந்தலை மீனவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கடலுக்கு செல்லாமல் படகில் கறுப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர்
அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வருவதற்கு கல்லாமொழி அருகே கடலில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ மீட்டர் தொலைவு பாலம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பாலம் கட்டப்படுவதால் ஆலந்தலை மீனவ கிராமத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை ஆலந்தலையை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், சுமார் 200 நாட்டுப்படகுகளில் கறுப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர். கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க: கறுப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி போராடிய மீனவர்கள்
"நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன்" - நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரில் நரேந்திர மோதி உரை
வியாழக்கிழமையன்று பதினாறாவது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் உரையாற்றினார்.
தமது அரசு ஏழைகள் பிரச்சனைகள் மீது அக்கறை கொண்டுள்ள அரசு என்றும், நேர்மை மற்றும் வளர்ச்சிக்காக அறியப்பட்ட அரசு என்றும் மோதி அப்போது குறிப்பிட்டார்.
இந்திய மக்களுக்குப் பதில் சொல்ல தாங்கள் கடமைப்பட்டிருப்பதாகவும், தமது ஆட்சிக்காலத்தில் ஊழலற்ற ஆட்சியை வழங்கியதாகவும் நரேந்திர மோதி கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமது சாதனைகளுக்காக அறியப்பட்டது என்று கூறிய மோதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இளம் தலைமுறை தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று கூறினார்.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க:எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய நரேந்திர மோதி
அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் - தப்பி வந்தவரின் நேரடி அனுபவம்
அண்மையில் போலி அமெரிக்க பல்கலைக்கழக பிரச்சனை தொடரபாக கைது செய்யப்பட்ட மாணவர்களில் பெரும்பாலனோர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 600 மாணவர்களில் 180 மாணவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
போலியான ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் பிபிசியிடம் பேசினார். இவர் கைது செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி திரும்பி வந்தார். தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் விரீஷ், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தொலைப்பேசியில் பேசினார்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான விரீஷ், தன் குடும்பத்தில் அமெரிக்கா சென்ற முதல் நபர் ஆவார். அமெரிக்காவில் நடந்தது குறித்த உண்மையை பெற்றோரிடம் சொல்ல மனம் இல்லாமல், பொய் சொல்லியிருக்கிறார்.
"H1 விசா கிடைத்திருப்பதால் திரும்பி வந்திருக்கிறேன் என்று பொய் சொல்லியுள்ளேன். ஆனால், உண்மை என்னவென்றால் நான் 10 லட்சம் ரூபாய் கடனில் உள்ளேன். நான் மேற்படிப்பு படிப்பதற்காக கடன் வாங்கியிருந்தேன். இப்போது மேற்படிப்பும் இல்லை, எதிர்காலமும் இல்லை. நான் அடுத்த ஆறு மாதத்தில் என் கடனை திருப்பி அடைக்க வேண்டும். என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை" என்கிறார் விரீஷ்.
மேலும் இவர் தனது அனுபங்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவிலேயே அதிக வயதான 'பாட்டி யானை' மரணம்
இந்தியாவில் வளர்ப்பு யானைகளிலேயே மிகவும் வயது முதிர்ந்ததாக கருதப்படும் தாக்ஷாயணி எனும் பெண் யானை அதன் 88-ம் வயதில் இறந்துள்ளது.
செல்லமாக 'கஜ முதாசி' அல்லது 'பாட்டி யானை' என்று அழைக்கப்பட்ட தாக்ஷயணி, இந்தியாவின் தெற்கிலுள்ள கேரள மாநிலத்தின் செங்கலூர் மகாதேவன் கோயில் சடங்குகளிலும், ஊர்வலங்களிலும் பங்கேற்றுள்ளது.
ஆனால், திடீரென உணவு உட்கொள்வதை நிறுத்திய தாக்ஷாயணி செவ்வாய்கிழமை இறந்து விட்டதாக அதன் பாகன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் இந்த யானை பங்கேற்கவில்லை.
இந்த யானை வாழ்ந்து வந்த கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு, இந்த யானைக்கு 88 வயது என்ற மதிப்பிடப்படுவதால் வளர்ப்பு யானையாக அதிக வயதான யானை இதுவாகும் என்று தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை விரிவாக வாசிக்க:இந்தியாவிலேயே அதிக வயதான 'பாட்டி யானை' மரணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்