மம்தா - சிபிஐ விவகாரம்: கொல்கத்தா காவல்துறை அடுத்த அதிரடி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: முன்னாள் தற்காலிக சிபிஐ தலைவர் தொடர்புடைய நிறுவனத்தில் தேடுதல் வேட்டை

மேற்கு வங்க மாநிலத்திற்கும், இந்திய மத்திய அரசுக்கு இடையிலான சண்டையின் ஒரு பகுதியாக முன்னாள் தற்காலிக சிபிஐ தலைவர் எம். நாகேஷ்வர் ராவுடன் தொடர்புடைய நிறுவனத்தில் மாநில காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாகேஷ்வர் ராவின் உத்தரவின் பேரில்தான் போன்சி திட்ட மோசடி தொடர்பாக கொல்கத்தாவில் காவல்துறை ஆணையாளர் ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ வந்தது.

நாகேஷ்வர ராவின் மனைவியும், மகளும் ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிதியை முறையற்ற வகையில் கையாண்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதாக இந்த ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர்: மோதியின் லோக்சபா உரையில் நாகரிகம் இல்லை - சரத் பவார்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், இந்திய பிரதமர் நரேந்திர மோதி லோக்சபாவில் ஆற்றிய உரையில் நாகரிகம் இல்லை என பேசி உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சரத் பவார் வெள்ளிக்கிழமை மாநில அளவிலான தன்னுடைய கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

கட்சியின் மூத்த தலைவர்களின் முடிவுக்கு மதிப்பளித்தே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக சரத் பவார் தெரிவித்தார்.

தொடர்ந்து, லோக்சபாவில் பிரதமர் மோதி சமீபத்தில் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், மன்மோகன் சிங், நரசிம்மராவ் உள்ளிட்ட பல முந்தைய பிரதமர்களின் உரைகள் நாடாளுமன்றத்திற்கு மரியாதை கொடுப்பதாகவும், நாகரிகமானதாகவும் இருந்துள்ளன. ஆனால் மோதியின் பேச்சு நாகரிகம் அற்றதாகவும், கலாசாரத்திற்கு எதிரானதாகவும் இருந்தது என்று கூறியதாக தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி: அப்துல் கலாம் பெயரில் புதிய கலைக்கல்லூரி

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்

ராமேஸ்வரத்தில் 2019-20ம் கல்வியாண்டில், முன்னாள் குடியரசு தலைவர், மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், உயர் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுதல், தொழில் கல்லூரிகளை சர்வதேச தரத்துக்கு உயர்த்துதல் போன்ற திட்டங்களுக்காக ரூ. 4,584.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை விவரித்து தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :