என் அனுமதியின்றி என்னைப் பெற்ற பெற்றோர் மீது வழக்கு தொடுப்பது ஏன்?

பட மூலாதாரம், RAPHALE SAMUEL/ FACEBOOK
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி
தன் அனுமதி இல்லாமல் தன்னை பெற்றதினால், பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளார் மும்பையை சேர்ந்த 27 வயதான ரஃபேல் சாமுவேல்.
பெற்றோர் பிள்ளைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதால், வாழ்க்கை முழுவதும் தாங்கள்தான் கஷ்டப்பட வேண்டியுள்ளதாக பிபிசியிடம் பேசிய ரஃபேல் தெரிவித்தார்.
இதற்கெல்லாம் அனுமதி பெற முடியாது என்று அவருக்கு புரிந்திருந்தாலும், "பிறக்க வேண்டும் என்பது நம் முடிவல்ல" என்று கூறுகிறார்.
இந்த உலகில் நாம் பிறக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படவில்லை என்பதால், நாம் வாழ நமக்கு வாழ்க்கை முழுவதும் பணம் அளிக்க வேண்டும் என்று வாதாடுகிறார்.
இது போல கூறுவது குடும்பத்தில் பிரச்சனையை உண்டாக்கலாம். ஆனால் தன் பெற்றோர் (இருவருமே வழக்கறிஞர்கள்) இதனை கேலியாக எடுத்துக் கொள்வதாக அவர் கூறுகிறார். இதற்கு ரஃபேலின் தாயும் கருத்து தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், NIHILANAND
"நாங்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிந்தும், எங்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று நினைக்கும் என் மகனின் துணிச்சலை ரசிக்க வேண்டும். அவன் பிறப்பதற்கு முன்னால் எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பதற்கான முறையையும் பகுத்தறிவுடன் அவனே சொன்னால், இது என் தவறு என்று ஒப்புக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
பிறப்பு கோட்பாடுகளுக்கு எதிராக மனநிலை கொண்டிருக்கும் சாமுவேல், வாழ்க்கை முழுவதும் துன்பம் நிறைந்திருப்பதாக கூறுகிறார்.
ஒரு ஆண்டிற்கு முன்பாக நிஹிலானந்த் என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ரஃபேல் தொடங்கினார். அதில் அவர் போலி தாடி வைத்துக் கொண்டு, கண் முகமூடியை அணிந்துக்கொண்டு பிறப்புக் கோட்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
"ஒரு பொம்மை அல்லது ஒரு நாய்க்குட்டிக்கு பதிலாக உங்களை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் பொழுதுபோக்குதான் நீங்கள்," போன்ற வசனங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.
இதுபோன்ற யோசனைகள் அவருக்கு ஐந்து வயதில் இருந்தே தோன்றியதாக கூறுகிறார் ரஃபேல் சாமுவேல்.
"நான் சாதாரண பையனாக தான் இருந்தேன். ஒருநாள் திடீரென மிகவும் விரக்தியடைந்தேன். எனக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்கவில்லை. ஆனால், நான் போக வேண்டும் என்று என் பெற்றோர் வலியுறுத்தினர். அப்போது நான் அவர்களிடம் என்னை ஏன் பெற்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு என் தந்தையிடம் எந்த பதிலும் இல்லை. ஒரு வேலை அவரால் பதில் சொல்ல முடிந்திருந்தால், நான் இவ்வாறெல்லாம் யோசித்திருக்க மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
"நான் பிறப்பதற்கு முன்பாகவே, பிறக்கப்போவது நான்தான் என்று தெரிந்திருந்தால், நிச்சயம் என்னை பெற்றெடுத்திருக்க மாட்டேன்," என்று தன் தாய் தன்னிடம் கூறியதாக சிரித்துக் கொண்டே சொல்கிறார் ரஃபேல்.

பட மூலாதாரம், NIHILANAND
"என்னை இளம் வயதில் பெற்றெடுத்ததாகவும், அப்போது வேறு வழி இருக்கவில்லை" என்றும் தன் தாய் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
மனிதர்கள் இல்லையென்றால் இந்த பூமி சிறந்த இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே, தன் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவெடுத்திருப்பதாக ரஃபேல் கூறுகிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு காலை உணவின்போது, தனது அம்மாவிடம் அவர் மீது வழக்குத் தொடுக்கப் போவதாக ரஃபேல் தெரிவித்துள்ளார். ''அதற்கு அம்மா பரவாயில்லை என்று சொன்னார். ஆனால், நீதிமன்றத்தில் எளிதாக இருக்கும் என்று எண்ணிவிடாதே! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக கடுமையாக நடந்து கொள்வேன்,'' என்றேன்.
தனது வழக்கை எடுத்துக்கொள்ள வழக்கறிஞரை தற்போது ரஃபேல் தேடிக்கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவருக்கு பெரிதாக எந்த வெற்றியும் இதுவரை கிட்டவில்லை.
''இந்த மனு எடுத்துக்கொள்ளப்படாது என்று தெரியும். ஏனெனில், எந்த நீதிபதியும் இந்த வழக்கை விசாரிக்க ஆர்வம் காட்ட மாட்டார்,'' என்றார் அவர்.
இது தொடர்பான அவரது ஃபேஸ்புக் பதிவுகளுக்கு ஏராளமான பதில்களும், எதிர்வினைகளும் வந்துள்ளன. ''சில சாதகமாக வந்துள்ளன. ஆனால் பெரும்பாலானவை எதிர்மறையானவை. சிலர் அவரை தற்கொலை செய்யக்கூட அறிவுரை கூறியுள்ளனர்.''
சில தாய்மார்கள் ரஃபேலை போலவே தங்கள் குழந்தைகளும் வினவினால் என்ன செய்வது என்று திகைக்கின்றனர்.

பட மூலாதாரம், NIHILANAND
''சிலர் ஆக்கபூர்வமாக அர்த்தத்துடன் கருத்து வெளியிடுகின்றார்கள். மற்றவவை என்னை காயப்படுத்துவதாக உள்ளன. என்னை திட்டுபவர்கள் நன்றாக திட்டட்டும். ஆனால், என்னை ஆதரிக்கும் சிலர் தங்களால் வெளிப்படையாக அவ்வாறு கூறமுடியாது என்று கூறுகின்றனர். அவர்களை வெளிப்படையாக பேச நான் அழைக்கிறேன்'' என்று ரஃபேல் குறிப்பிட்டார்.
''விளம்பரம் தேடுவதற்காக இதை நான் செய்யவில்லை'' என்ற ரஃபேல், ''ஆனால், எனது கருத்து அனைவரையும் சென்றடைய நான் விரும்புகிறேன்'' என்றார்.
தான் பிறந்ததற்கு அவர் வருத்தப்படுகிறாரா என்று கேட்டேன்.
''நான் பிறக்காமல் போனால் நன்றாக இருந்திருக்கும். என் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்கு இங்கு இருக்க விருப்பமில்லை. இந்த அறை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எனக்கு பிடிக்கவில்லையே,'' என்று தனது மனநிலை குறித்து அவர் விளக்கமளித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












