தமிழ்நாடு பட்ஜெட்: 'ஜெயலலிதா எழுப்பியது உரிமைக் குரல்; பன்னீர் செல்வத்தினுடையது வெறும் புலம்பல்'

தமிழ்நாடு

பட மூலாதாரம், tndipr

இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2019-20ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் நலத் திட்டங்களுக்காக 82,673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பற்றாக்குறை இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இன்று தாக்கல்செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தின் தனி நபர் வருவாய் ஆண்டுக்கு 1,42, 267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

* 2018-19ல் மாநில பொருளாதார வளர்ச்சி, 8.16 சதவீதமாக இருக்கும் (பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்குமென கடந்த பட்ஜெட்டில் கருதப்பட்டது.).

* தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது (கடந்த ஆண்டும் இதே அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது).

* 2019-20ல் மாநில வருவாய் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

* ஜிஎஸ்டி வரியில் மாநிலப் பங்கு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக மத்திய அரசு வழங்க வேண்டிய 5909.16 கோடி ரூபாய் வழங்கப்படாதது, மாநில அரசின் நிதி நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி

பட மூலாதாரம், Getty Images

* தமிழ் வளர்ச்சிக்காக இந்த ஆண்டில் 54.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

* வேளாண்மைத் துறைக்கு ஒட்டுமொத்தமாக 10,550.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்காக வரவு - செலவு மதிப்பீட்டில் ரூ. 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பொது விநியோகத் திட்டத்திற்கென 6,333 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2013-14ஆம் ஆண்டுக்குப் பிறகு, 48.94 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

* பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை மீட்டெடுத்து சுமார் 5200 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்புச் செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அறிவிப்பு.

* பள்ளிக் கல்வித் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்கு ரூ. 4,584.21 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்காக ரூ. 12,563.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தித் துறைக்கு ரூ. 18,560.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாநிலத்தில் வானூர்தி மற்றும் ராணுவத் தளவாட தொழிற்சாலைகளை அமைப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

டாஸ்மாக்

* மது விற்பனை மூலம் மாநிலத்திற்குக் கிடைக்கும் வருவாய் 2019-20ல் 7,262.33 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

* 2019-20ல் மாநில அரசின் சொந்த வரி வருவாய் 1,24,813.06 கோடி ரூபாயாக இருக்குமென்றும் சொந்த வரி அல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக இருக்குமென்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

* 2019-20 ஆம் ஆண்டில் 43,000 கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை
இலங்கை

* ஆகவே 2020ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியன்று மாநிலத்தின் நிகர கடன் தொகை 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 23.02 சதவீதமாக இருக்கும்.

* மாநில அரசு வாங்கிய கடனுக்காக இந்த நிதி ஆண்டில் வட்டியாக ரூ. 33,226.27 கோடி செலுத்தப்படும்.

தமிழக பட்ஜெட் குறித்து மாநில அரசியல் கட்சிகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு வருடா வருடம் நிதி ஒதுக்குவதாகச் சொல்லப்பட்டாலும், அந்தத் திட்டம் துவங்கப்படவேயில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழகத்தின் நிதி நிலைமை திவாலான ஒரு நிறுவனத்தைப் போல ஆகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது எனக் கூறியிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சின் நிறுவனர் ராமதாஸ், மற்ற அம்சங்கள் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

"இந்த பட்ஜெட் மிகச் சாதாரணமான அறிக்கை" என்கிறார் மாநில திட்டக் கமிஷனின் முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன். "இந்த நிதி நிலை அறிக்கை, ஒரு வழக்கமான கணக்கு தாக்கல் செய்யும் அறிக்கையாகத்தான் தென்படுகிறது. நீண்ட கால நோக்கில் ஏதும் இதில் திட்டமிடல் இல்லை. கடந்த நிதி அறிக்கையில் திட்டமிட்டபடி செலவழிக்கப்பட்டதா, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விவரங்கள் இல்லை." என்கிறார் நாகநாதன்.

இலங்கை
இலங்கை

"இந்த பட்ஜெட்டில் கவலையளிக்கக்கூடிய மற்றொரு விஷயம், மாநில அரசு கடன்களுக்குச் செலுத்தும் வட்டியைவிட மூலதனச் செலவு மிகக் குறைவாக இருக்கிறது. இது சரியானதல்ல. மேலும், பள்ளிக் கல்வித் துறைக்கு, சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த பிறகும் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் மாநில அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுபவர்களின் சதவீதம் மிகக் குறைவாக இருப்பது ஏன் என்பதை விளக்கியிருக்க வேண்டும். அதற்கு நீட் தேர்வே காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்" என்று சொல்லும் நாகநாதன், "14வது நிதிக் குழுவாலும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பாலும் தமிழகம் பாதிக்கப்பட்டதை நிதியமைச்சர் சுட்டிக்காட்டினாலும் அவை வெறும் புலம்பலாகவே இருக்கிறது" என்கிறார்.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

"ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உரையை ஜிஎஸ்டி கவுன்சிலில் ஓ. பன்னீர்செல்வம்தான் வாசித்தார். அதில் எங்களைக் கேட்காமல் வரி விகிதங்களை மாற்றக்கூடாது எனக் கூறியிருந்தார் ஜெயலலிதா. ஆனால், அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பேச்சே காணோம். அவர் எழுப்பியது உரிமைக் குரல். ஓ. பன்னீர்செல்வத்தினுடையது வெறும் புலம்பல். இது ஒரு மாநில அரசு தயாரித்த பட்ஜெட்டாக இல்லை. நிதித் துறை செயலரின் கணக்கு வழக்கு அறிக்கையாக மட்டுமே இருக்கிறது" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :