அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் - தப்பி வந்தவரின் நேரடி அனுபவம்

இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தீப்தி பத்தினி
    • பதவி, பிபிசி தெலுங்கு

"என் பெற்றோர் விவசாயிகள். நான் ஏன் அமெரிக்காவில் இருந்து வந்தேன் என்று அவர்களுக்கு தெரியாது. உண்மை தெரிந்தால், அவர்கள் உயிரை விட்டு விடுவார்கள். நான் விடுப்பில் வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்," என்கிறார் பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய விரீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

போலியான ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் இவரும் ஒருவர். இவர் கைது செய்யப்படவில்லை. இந்தியாவுக்கு பிப்ரவரி 4ஆம் தேதி திரும்பி வந்தார். தற்போது ஹைத்ராபாத்தில் இருக்கும் விரீஷ், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாமல் தொலைப்பேசியில் பேசினார்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 30 வயதான விரீஷ், தன் குடும்பத்தில் அமெரிக்கா சென்ற முதல் நபர் ஆவார். அமெரிக்காவில் நடந்தது குறித்த உண்மையை பெற்றோரிடம் சொல்ல மனம் இல்லாமல், பொய் சொல்லியிருக்கிறார்.

"H1 விசா கிடைத்திருப்பதால் திரும்பி வந்திருக்கிறேன் என்று பொய் சொல்லியுள்ளேன். ஆனால், உண்மை என்னவென்றால் நான் 10 லட்சம் ரூபாய் கடனில் உள்ளேன். நான் மேற்படிப்பு படிப்பதற்காக கடன் வாங்கியிருந்தேன். இப்போது மேற்படிப்பும் இல்லை, எதிர்காலமும் இல்லை. நான் அடுத்த ஆறு மாதத்தில் என் கடனை திருப்பி அடைக்க வேண்டும். என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை" என்கிறார் விரீஷ்.

ஹைத்ராபாத்தில் 2013ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தார் விரீஷ். கலிஃபோர்னியாவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க 2014ல் அமெரிக்கா சென்றார்.

"அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். நான் வீட்டிற்கு ஒரே மகன். விவசாயக் குடும்பம். என் பெற்றோரை பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களிடம் சொந்தமாக நிலமோ வீடோ இல்லை. நான் அமெரிக்கா சென்று சம்பாதித்து இந்தியாவில் வீடு வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்," என அவர் தெரிவித்தார்.

இந்திய மாணவர்கள்

பட மூலாதாரம், UOF

இவர் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் இவர் படித்துவந்த படிப்பிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, ஒரு நண்பர் மூலமாக ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தை பற்றி தெரிந்து கொண்டார். "வேறு வழி இல்லாததால் அங்கு சேர்ந்தேன். வகுப்புகள் குறித்து விசாரித்தபோது எனக்கு எந்த பதிலும் வரவில்லை," என்று விரீஷ் கூறுகிறார்.

அந்த நிலையில் அவர் 2017ஆம் ஆண்டு H1 விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது.

ஜனவரி 30 அன்று நடந்த கைதுகள் குறித்து கேள்விப்பட்டபோது, விரீஷ் கலிஃபோர்னியாவில் தன் வீட்டில் இருந்தார். முதலில் அது வெறும் வதந்தி என்று நினைத்ததாகவும், பின்புதான் உண்மையான தகவல் தெரிய வந்ததாகவும் அவர் கூறுகிறார்.

"என் எதிர்காலம் குறித்து என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ந்து போனேன்," என்று விரீஷ் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தன் நண்பரிடம் இருந்து கொஞ்சம் பணம் கடன் வாங்கி, இந்தியாவுக்குத் திரும்பி வர டிக்கெட் வாங்கியதாக அவர் கூறுகிறார். கடைசி நிமிடத்தில் டிக்கெட் வாங்கியதால் அதன் விலை மிக உயர்வாக இருந்ததாகவும் விரீஷ் தெரிவித்தார்.

15 லட்சம் ரூபாய் கல்விக் கடன் வாங்கி இருக்கிறார் விரீஷ். முதல் பல்கலைக்கழகத்தில் 30,000 அமெரிக்க டாலர்களும், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் 20,000 அமெரிக்க டாலர்களும் கட்டியுள்ளார்.

"ஒன்பது லட்சம் ரூபாய் கடனை எப்படியோ கட்டிவிட்டேன். இன்னும் ஆறு லட்சம் ரூபாயோடு, வட்டி நான்கு லட்சம் ரூபாயும் உள்ளது. அடுத்த ஆறு மாதத்தில் நான் கட்டியாக வேண்டும். நான் இப்போது என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவ்வில்லை. வேலைத் தேடி கொண்டிருக்கிறேன், விரைவில் ஒரு வேலை கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன்," என்கிறார் அவர்.

இந்திய மாணவர்கள்

கடந்த ஒருவார காலத்தில் தன் நண்பர்கள் பலரும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளதாக கூறுகிறார் விரீஷ்.

கைதாகியுள்ள மாணவர்களுக்கு உதவவும், சட்ட ஆலோசனை வழங்கவும் வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பிபிசி தெலுங்குவிடம் பேசிய அமெரிக்க தெலுங்கு அமைப்பின் இயக்குநர் வெங்கட் மந்தேனா.

கைதாகி உள்ள மாணவர்களில் பெரும்பாலனோர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

600 மாணவர்களில் 180 மாணவர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக வெங்கட் தெரிவித்தார். அதில் எட்டு பேரைத்தவிர மற்ற அனைவரும் குடியேற்ற மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சேர்க்கும் வேலையில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேலும்எட்டு பேர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியேற்ற மோசடி வழக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மாணவர்கள், தாங்கள் அமெரிக்காவில் இருந்து புறப்பட விரும்புவதாக சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் விண்ணப்பிக்கலாம். 5,10,15,20 அல்லது அதற்கும் மேலான நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, வெளியேற அனுமதி கிடைத்தால், அவர்கள் இந்தியாவுக்கு செல்லலாம் என்று கூறுகிறார் வெங்கட்.

ஹைதராபாத்தில் வசிக்கும் சுதாராணியின் மகன், மகள் இருவருமே அமெரிக்காவில் உள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில்,"பிள்ளைகளை வெளிநாடு அனுப்புவது சமூக அந்தஸ்தை சார்ந்தது. மேற்படிப்புக்காக கடன் வாங்குகிறோம். மேலும் அது நல்ல எதிர்காலமும் கூட. திருமணம் செய்ய ஆண்/பெண் தேடுவதற்கும் இது உதவும்," என்று கூறுகிறார்.

மீண்டும் அமெரிக்கா செல்ல துடிக்கும் விரீஷின் ஆர்வம் தற்போது விளங்குகிறது.

"சொந்த வீடு வாங்கவும், என் பெற்றோரை பார்த்துக் கொள்ளவும் என் கனவுகளை நிறைவேற்றவும் சில ஆண்டுகளுக்கு நான் அமெரிக்கா செல்ல வேண்டும். எனக்கு அங்கு குடியேறும் விருப்பம் ஏதுமில்லை. அடுத்தாண்டு ஏதேனும் செய்து நான் அமெரிக்கா செல்ல முடியுமா என்று முயற்சி செய்து வருகிறேன்," என்கிறார் விரீஷ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :