பாஜகவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்

பட மூலாதாரம், Getty Images

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டணி விட்டுக்கொடுத்துள்ளது. மீதமுள்ள இரு தொகுதிகளும், கூட்டணிக்கு வரும் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உத்தரபிரதேசத்தில் இவ்விரு கட்சிகளும் எதிரெதிர் களத்தில் நின்று தேர்தலை எதிர்கொண்டவை.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வசம் இருந்த கோரக்பூர், மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா வசம் இருந்த புல்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு 2018இல் நடந்த இடைத் தேர்தலை இவ்விரு கட்சிகளும் ஒன்றாக எதிர்கொண்டன.

இவ்விரு தொகுதிகளையும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது.

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்

பட மூலாதாரம், Getty Images

அப்போது முதலே இக்கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

2014 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின.

அந்த மாநிலத்தில் பதிவான 22.35% வாக்குகளை பெற்ற சமாஜ்வாதி கட்சி வெறும் ஐந்து இடங்கைளையே வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி சுமார் 20% வாக்குகளை பெற்றாலும் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.

"இது வெற்றிக்கூட்டணி," என்கிறார் பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் நவீன் ஜோஷி. பாபர் மசூதி பிரச்சனை நிலவிய சமயத்தில் 1993 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து பாஜகவை இவ்விரு கட்சிகளும் தோற்கடித்ததை அவர் நினைவு கூர்கிறார்.

அப்போது சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் தலைவராக கன்ஷிராமும் இருந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: