மலைப்பாம்பை பாடாய்படுத்திய ஒட்டுண்ணிகள் - உயிர்பிழைத்ததே ஆச்சர்யம்

மலைப்பாம்பு

பட மூலாதாரம், GOLD COAST AND BRISBANE SNAKE CATCHER/FACEBOOK

ஆஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்றினை பாம்பு பிடிப்பவர்கள் மீட்டுள்ளனர்.

குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகள் நிறைந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியானது.

சிலந்திப்பேன் வகையைச் சார்ந்த உண்ணிகள் என்று அறியப்படும் சிறு பூச்சிகள் அதன் உடலின் மேல்தோலில் ஒட்டியிருந்தன.

உண்ணிகள்

பட மூலாதாரம், Gold coast and brisbane snake catcher/facebook

பாம்பை மீட்ட பாம்பு பிடிக்கும் நபர் அதனை காட்டுயிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை நீக்கினர் என்றும் அதன் உடல்நிலை சீராகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதனை மீட்ட டோனி ஹாரிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

'கற்களை போல இருந்த உண்ணிகள்'

தன் தோலில் இருந்த பூச்சிகளால், அப்பாம்பு நீச்சல் குளத்தில் இறங்கியிருக்கும் என்று ஹாரிஸ் நம்புகிறார்.

"அந்த மலைப்பாம்பு மிகவும் அசௌகரியமாக உணர்ந்திருக்கிறது. அதன் மீது வளர்ந்து கொண்டிருந்த உண்ணிகளால் அதன் முகம் வீங்கி இருந்தது" என்றார் அவர்.

அப்பாம்பினை தூக்கும்போது, கற்கள் நிறைந்த பையை தூக்குவது போல இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

மலைப்பாம்பு

பட மூலாதாரம், GOLD COAST AND BRISBANE SNAKE CATCHER/FACEBOOK

பாம்புகள் உடலில் அவ்வப்போது உண்ணிகள் வருவது வழக்கம்தான் என குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் பிரயான் ஃப்ரை தெரிவித்தார்.

மலைப்பாம்பு

பட மூலாதாரம், Getty Images

எனினும், இவ்வளவு அதிக அளவிலான உண்ணிகள் இருப்பது அப்பாம்பிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது அல்லது அதிக வெப்பத்தால் ஏற்பட்டது போல தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

"அந்த பாம்பின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கக்கூடும். மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் உயிர் பிழைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்," என்றும் ஃப்ரை கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: