தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு !

நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்?

royal python

பட மூலாதாரம், Getty Images

மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது.

கடந்த திங்களன்று அப்பெண் கண்விழித்துப் பார்த்தபோது, அவரது படுக்கையில் சுமார் மூன்று அடி நீளம் உள்ள அந்த ராயல் வகை மலைப்பாம்பு சுருண்டு படுத்திருந்தது.

உடனே அந்தப் பெண் உள்ளூர் விலங்குகள் நல அமைப்பு ஒன்றுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பாம்பு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டது.

அதே பகுதியில் வசிக்கும் யார் வீட்டிலாவது செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் அந்த மலைப்பாம்பு, அப்பெண் வசிக்கும் அதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் செவ்வாய் இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜில் சேண்டர்ஸ் எனும் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

"அந்தப் பெண் தன் வாழ்க்கையின் அதிகபட்ச அச்சத்தை அப்போது அனுபவித்திருப்பார்," என்று ஜில் சேண்டர்ஸ் கூறியுள்ளார்.

மலைப்பாம்பு

பட மூலாதாரம், RSPCA/PA

படக்குறிப்பு, மீட்கப்பட்ட மலைப்பாம்பை இப்போது விலங்குகள் நல அமைப்பினர் பராமரித்து வருகின்றனர்.

'ராயல்' மலைப்பாம்புகள் பற்றிய சில தகவல்கள்:

  • கானா, டோகோ, பெனின் போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை பூர்வீகமாகக் கொண்டவை இந்த மலைப்பாம்புகள்.
  • சுருண்டு இருக்கும்போது பந்து போல காட்சியளிப்பதால் 'பால் பைத்தான்' (Ball Python) என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
  • நான்கு அடி ஒன்பது அங்குலம் நீளம் வரை வளரக்கூடிய இந்தப் பாம்புகள் 20 ஆண்டுகள் வரை வாழும்.
  • அமைதியாக இருக்கும் இயல்பைக் கொண்டுள்ள இந்தப் பாம்புகள், பெரும்பாலும் எலிகளை உணவாக உண்பவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: