You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரரா? - உண்மை என்ன? #BBCFactCheck
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் அஸ்வினி உபத்யாயா இரண்டாம் எலிசபத் ராணியைவிட சோனியா காந்தி பணக்காரர் என பிரபலமான நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்த கட்டுரையை பகிர்ந்திருந்தார்.
அவர், "காங்கிரஸின் எலிசபத், பிரிட்டன் ராணியை விட பணக்காரர். காங்கிரஸின் சுல்தான் (இளவரசர்), ஓமன் சுல்தானைவிட வளமானவர். அவர்களின் நூறு சதவிகித முறைகேடான சொத்துகளை பறிமுதல் செய்ய இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்" என்று ட்விட் செய்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோதி அலுவலக ட்விட்டர் கணக்கை அந்த ட்வீட்டில் டேக் செய்திருந்தார்.
டெல்லி பா.ஜ.க சமூக ஊடக தலைவர் புனித் அகர்வாலாவும், இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்விட்டில் புனித், "எத்தனை சேனல்கள் இந்த விஷயத்தில் விவாதம் நடத்தும், முறைகேட்டை தவிர காங்கிரஸுக்கு வேறு எப்படி வருவாய் வந்திருக்க போகிறது?" என்று குறிப்பிட்டு இருந்தார்.
பல வலதுசாரி ட்விட்டர் கணக்குகள் இதனை ரீ-ட்வீட் செய்திருந்தன.
அந்தக் கட்டுரையை வெளியிட்டது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். ஹஃபிங்டன் போஸ்ட் வெளியிட்ட ஒரு செய்தியை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது.
2013 டிசம்பர் 2ஆம் தேதி வெளியான கட்டுரை அது.
அந்த கட்டுரை: சோனியா காந்தி குறித்த கட்டுரை
அந்த கட்டுரையில் என்ன இருக்கிறது?
- பணக்கார அரசியல் தலைவர்கள் வரிசையில் சோனியா காந்தி 12ஆவது இடத்தில் இருக்கிறார்.
- சோனியா காந்திக்கு 200 கோடி டாலர்கள் அளவுக்கு சொத்து இருக்கிறது.
- இரண்டாம் எலிசபெத் ராணி, ஓமன் இளவரசர், சிரியா அதிபரைவிட பணக்காரர்.
2015ஆம் ஆண்டு உபத்யாயா இதே கட்டுரையை பகிர்ந்திருந்தார்.
ஹஃபிங்டன் போஸ்டை மேற்கோள் காட்டி அந்த சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா மட்டும் செய்தி வெளியிடவில்லை. பல ஊடக குழுமங்கள் இந்த கட்டுரையை அப்போது வெளியிட்டிருந்தன.
2014 நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து காங்கிரஸை சிறுமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த கட்டுரை அப்போது அதிகளவில் பகிரப்பட்டது.
உண்மை என்ன?
ஹஃபிங்டன் போஸ்ட் இந்த செய்தியை 2013 நவம்பர் 29ஆம் தேதி வெளியிட்டிருந்தது எங்கள் விசாரணையில் தெரிந்தது.
ஆனால், பின்னர் அந்த கட்டுரையை புதுபித்து வெளியிட்டிருந்தது.
புதுபித்து வெளியிடும் போது ஒரு குறிப்பையும் அதனுடன் சேர்த்திருந்தது.
அந்த குறிப்பு இதுதான்.
"சோனியா காந்தி மற்றும் கத்தார் முன்னாள் அமிர், ஹமீத் பின் கலிஃபா அல்- தானி பெயரை அந்த பட்டியலிலிருந்து நீக்குகிறோம். சோனியாவின் பெயர் மூன்றாம் தரப்பு இணையத்தின் தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த பட்டியலில் இணைக்கப்பட்டது. பின் அந்த தகவல்கள் கேள்விகுள்ளாக்கப்பட்டன. எங்கள் ஆசிரியர்களால் தொகையை உறுதிப்படுத்த முடியாமல் போனதை அடுத்து அந்த இணைப்பை நீக்குகிறோம் மற்றும் இந்த குழப்பங்களுக்கு வருந்துகிறோம்." என்று விவரித்தது அந்த குறிப்பு.
ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா அந்த கட்டுரையை நீக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ இல்லை. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் எந்த கருத்தும் கூறவில்லை.
ஆனால், 2014ஆம் ஆண்டு தேர்தலில் சோனியா காந்தி தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களின்படி அவருக்கு பத்து கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்