You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல": கி. வீரமணி
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணானது; இந்த அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கொள்கைக்கு எதிரானது என்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.
பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், திராவிடர் கழகத்தின் தலைமையகமான பெரியார் திடலில் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் இது தொடர்பாகப் பேசினார் கி. வீரமணி. பேட்டியிலிருந்து:
கே. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது சரியான முடிவா?
ப. இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே காலகாலமாக கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதி அமைப்புக்கான தத்துவம். இந்தியாவில்தான் ஜாதி அமைப்பு இருக்கிறது. மனு தர்மம்தான் முதலில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது. இந்த ஜாதிக்காரர்கள் இந்த வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கூறியது. பிராமணனுக்கு கல்வியும் சத்திரியனுக்கு படையும் வைசியனுக்கு வியாபாரமும் சூத்திரனுக்கு அடிமைத் தொழிலும் செய்ய வேண்டுமென வகுக்கப்பட்டது. இந்த ஜாதி அமைப்பு காரணமாக மிகப் பெரும்பான்மையான மக்கள் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களானார்கள். இதை சரிசெய்யத்தான் 1928ல் நீதிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது, தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்னால், அரசியல் சட்டத்தில் உள்ள சமத்துவம் என்ற தத்துவத்தைச் சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகியவை இட ஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பை வழங்கின. இதற்குப் பிறகு, தந்தை பெரியார் போன்றவர்கள் போராடியதன் விளைவாக இதற்காக அரசியல் சட்டம் திருத்தப்பட்டது. அப்போது பிரதமராக ஜவஹர்லால் நேருவும் சட்ட அமைச்சராக அம்பேத்கரும் இருந்தனர். முதலில் கல்வியில் முன்னுரிமை அளிக்க அரசியல் சட்டத்தைத் திருத்தி 15-4 என்ற பிரிவை உருவாக்கினார்கள். தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஷெட்யூல்ட் காஸ்ட் என்ற பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்ட மக்களை வரையறுக்க என்ன செய்வது? அரசியல் சாஸனத்தின் 340வது பிரிவில் ஒரு அம்சம் இருக்கிறது. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய சமூகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அதில் உள்ளது. அதே வரையரையை இந்த 15-4லும் வைத்துக்கொள்ளலாம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் 340வது பிரிவை உருவாக்கும்போதும் முதல்முதலாக அரசியல் சட்டத்தைத் திருத்தும்போது ஒரு கேள்வி எழுந்தது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களை இதில் சேர்க்க வேண்டுமா என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்த மக்கள் ஒதுக்கப்பட்ட சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும்தான்; பொருளாதார ரீதியில் இன்று பின்தங்கியவர்கள் நாளை மேம்படலாம். இன்றைய பணக்காரன், நாளை ஏழையாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், இன்றைய கீழ் ஜாதிக்காரன் என்றைக்கும் கீழ் ஜாதிக்காரன்தான் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதனால்தான், சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் என்று மிகத் தெளிவாக 15-4ல் குறிப்பிடப்பட்டது.
இருந்தபோதும் மத்திய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல்தான் இருந்தது. 340வது பிரிவை முன்வைத்து, இந்த விவகாரம் பற்றி ஆராய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதுதான் மண்டல் ஆணையம். அந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்தது. அதிலும் 'சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்கள்' என்பது குறிப்பிடப்பட்டது.
நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி இந்திரா சஹானி தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு விசாரித்தது. இடஒதுக்கீடு என்பது 'சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான்; பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அல்ல' என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; அதற்கு வேறு திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். இது வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிப்பது" என்பதைச் சுட்டிக்காட்டியது.
அதேபோல எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, இடஒதுக்கீட்டைப் பெற 9,000 ரூபாய் ஆண்டு வருவாய் என்பதை ஒரு வரம்பாக அறிமுகப்படுத்தினார். இதனைத் தி.மு.க, தி.க., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் எதிர்த்தன. ஓராண்டு இது அமலில் இருந்தது. இதற்கு அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது. அப்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை எம்.ஜி.ஆர். கூட்டியபோது நான் இது தொடர்பாக அவருக்கு விளக்கமளித்தேன். "பொருளாதார நிலை என்பது மாறக்கூடியது. பலரது வருமானம் நிலையில்லாதது. குறிப்பாக விவசாயிகளின் வருவாய் தொடர்ந்து மாறும். நல்ல மழைக்காலத்தில் நல்ல வருவாயும் வறட்சிக் காலத்தில் மிக மோசமான நஷ்டமும் ஏற்படும். அந்த நிலையில், பொருளாதார நிலையை எப்படி அடிப்படையாக வைக்க முடியுமென" கேட்டேன்.
அதேபோல, அரசு ஊழியராக இருப்பவர் காஞ்சிபுரத்தில் இருக்கும்போது 8,500 ரூபாயைப் பெறுவார். அவர் சென்னைக்கு மாற்றப்பட்டு, சிட்டி அலவன்சை கூடுதலாகப் பெறும்போது 9,000 ரூபாயைப் பெறுவார். உடனே அவர் முற்பட்ட வகுப்பாகிவிடுவார். இது எப்படி சரியாக இருக்கும் என்று கேள்வியெழுப்பினேன். எம்.ஜி.ஆர். விளங்கிக்கொண்டார். அதனை நீக்கினார்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டில், முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகள் என்று குறிப்பிடுகிறார்கள். அது எப்படி சரியாக இருக்கும்? இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. அதற்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன. இரண்டின் நோக்கங்களும் வேறு.
இவர்கள் கொண்டுவரும் மசோதா உச்ச நீதிமன்றத்தில் நிற்காது. அதற்காக இவர்கள் அரசியல் சட்டத்தை திருத்தினாலும் அது செல்லாது. நம்முடைய அரசியல்சட்ட கர்த்தாக்கள் எதை மனதில் வைத்து 'சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும்' என்ற வார்த்தைகளை வைத்தார்களோ, அது அடிபட்டுப் போய்விடும் என்பதால் நீதிமன்றம் அதனை ஏற்காது. இது மத்திய அரசுக்குத் தெரியாமல் இல்லை.
ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விதான் அவர்களை இந்த முடிவை எடுக்கச் சொல்லியிருக்கிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்தி பேசும் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ள பிராமணர்களின் வாக்குகளைப் பெற பா.ஜ.கவினர் விரும்புகிறார்கள். இதுபோக, காயஸ்தர்கள், சத்திரியர்கள் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளையும் பெறுவதற்கான அரசியல் திட்டம் இது.
தவிர, 8 லட்ச ரூபாய் வருவாய் வரம்பு, நில வரம்பு ஆகியவற்றை முன்வைத்திருக்கிறார்கள். இந்த வரம்புகளைப் பார்க்கும்போது இது ஏழைகளுக்குப் பயன்படாது, நடத்தர வர்க்கத்திற்குத்தான் பயன்படும் எனத் தோன்றுகிறது. சமூக நீதியின் அடி வேரையே பறிக்கும் செயல் இது.
கே. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நரசிம்மராவ் கொண்டுவந்தபோது, முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததா?
ப. அவர் முன்னேறிய பிரிவினர் என்றுகூடச் சொல்லவில்லை. The reservation of the 10 percent is in favour of the economically backward section of the people who are not covered by any existing reservations என்றுதான் கொண்டுவந்தார். ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
கே. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மசோதா ஒருவேளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டால்..
ப. நிறைவேறினால், நீதிமன்றத்திற்குச் செல்வோம். நாங்களே போவோம். நீதிமன்றத்தில் நிச்சயம் அடிபடும். குஜராத்தில் 2016ல் இதேபோல முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. அவசரச் சட்டமாகவே கொண்டுவந்தார்கள். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. குஜராத்தில் செய்ததைத்தான் இவர்கள் இப்போது மத்தியில் செய்கிறார்கள். இதுவும் நீதிமன்றத்தில் அடிபட்டால் அவர்களுக்கு ஒரு கவலையும் இருக்காது. 'நாங்கள் செய்ய விரும்பினோம். நீதிமன்றம் தடுத்துவிட்டது' என்று சொல்லிவிடுவார்கள்.
கே. மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், இந்திய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி உடனடியாக எதிர்வினைகள் ஏதும் இல்லையே ஏன்?
ப. இனிமேல்தான் வரும். திருவாரூர் தேர்தல் தள்ளிவைப்பு போன்ற செய்திகளில் இது பெரிதாகத் தெரியாமல் போயிருக்கலாம். எங்களைப் போன்ற சமூக நீதிக்கான இயக்கங்கள் முதலில் பேசுவோம். பிறகு எல்லோரும் சேர்ந்துகொள்வார்கள். வட இந்தியாவில் உள்ள கட்சிகளைப் பொறுத்தவரை இட ஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவமே அவர்களுக்குப் புரியாது. இடஒதுக்கீட்டின் அடிப்படைத் தத்துவத்தை தென்னாட்டில்தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அரசியலுக்குத்தான் முதலிடம். சமூக நீதிக்கு இரண்டாவது இடம்தான். தென்னாட்டிலும்கூட பினராயி விஜயன் போன்றவர்கள் இதை வரவேற்பேன் எனக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். காலத்தில் வருமான வரம்பு கொண்டுவந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருமான வரம்புக்கு ஆதரவாக இருந்தார்கள். ஆனால், சில நாட்கள் கழித்து புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்.
கே. இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டால், மாநிலங்களும் உடனடியாக இதனைப் பின்பற்ற வேண்டியிருக்குமா?
ப. ஆமாம். மாநிலங்களும் இதைச் செய்ய வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் ஒரு சட்டம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமெனவும் இவர்கள்தான் சட்டம் கொண்டுவந்தார்கள். எல்லா மாநிலங்களும் அதை நிறைவேற்றவில்லை. பல மாநிலங்களில் 12 சதவீதம்தான் அதை நிரப்பியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் குறையை அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள்தான் கேட்க வேண்டும்.
கே. முன்னேறிய ஜாதியினரில் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை இந்திய அளவில் எவ்வளவு வலுவாக இருந்தது?
ப. கோரிக்கை இருந்தது. ரஜபுத்திரர்கள், பட்டேல்கள், தாகுர்கள் போன்றவர்கள் தொடர்ந்து கேட்டுவந்தார்கள். இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருக்கிறது. இந்த பத்து சதவீத இட ஒதுக்கீடு அளித்தால் அது 50 சதவீதத்தைத் தாண்டிவிடும். அதனால், இதனை அரசியல் சாஸனத்தின் 9வது ஷெட்யூலில் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால், அதிலும் நீதிமன்றம் தலையிடும் வாய்ப்பு உள்ளது.
கே. தமிழ்நாட்டில் சமீப காலமாக இடஒதுக்கீட்டிற்கு எதிரான மன நிலை உருவாகியிருப்பதாகத் தோன்றுகிறது. என்ன காரணம்?
ப. இந்தியாவில் 69 சதவீத இடஒதுக்கீடு இங்கேதான் இருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. அண்ணா மேம்பாலத்தின் மீது வேகமாகச் செல்பவர்களுக்கு, அந்தப் பாலம் கட்டுவதற்கு முன்பாக இருந்த போக்குவரத்து நெரிசல் பற்றித் தெரியாது. ஏனென்றால், அவர்கள் வசதியாகச் செல்ல யாரோ பாடுபட்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியற்றை இட ஒதுக்கீட்டில் பெற்றிருப்பார்கள். ஆனால், அது எப்படி வந்தது எனத் தெரியாது. தொடர்ந்து அவர்களுக்கு விளக்க வேண்டும்.
ஆனால், பொதுவாகப் பார்த்தால் அப்படியான எதிர் மனநிலை இல்லையென்றுதான் சொல்வேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்