You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராணுவ தளபதி பிபின் ராவத்: "ஓரினச்சேர்க்கையை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம்"
தினத்தந்தி: "ஓரினச்சேர்க்கையை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம் - பிபின் ராவத்"
ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ள உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம் என பிபின் ராவத் கூறியுள்ள செய்தி தினத்தந்தியில் வெளியாகியுள்ளது.
"ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ளஉறவு குற்றம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து இருக்கிறது. ஆனால் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல. ராணுவம், சட்டத்தை விட மேலானது அல்ல என்றாலும், ஓரினச்சேர்க்கை மற்றும் கள்ள உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம். ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது" என்று அவர் கூறிய செய்தி, தினத்தந்தியிலும் வெளியாகியுள்ளது.
தி ஹிண்டு: மத்திய-மாநில உறவினை தேர்தல் கூட்டணியாக பார்க்கவேண்டாம் - தம்பிதுரை
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள மத்திய மாநில உறவினை தேர்தல் கூட்டணியாகப் பார்க்கவேண்டியதில்லை என்று தெரிவித்தார் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக தலைவர்களில் ஒருவருமான எம்.தம்பிதுரை.
கோயம்புத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக-பாஜக தேர்தல் கூட்டணிக்கான சாத்தியம் குறித்து கேட்டபோது இவ்வாறு கூறினார் என்கிறது தி ஹிண்டு ஆங்கில நாளிதழ்.
அத்துடன் அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, பொருளாதார அடிப்படையில் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தேர்தலை மனதில் வைத்து பாஜக எடுத்த நடவடிக்கை என்று குற்றம்சாட்டியிருக்கிறார் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை.
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் கண்டிக்கப்படவேண்டியது என்று அவர் கூறினார். இந்த திட்டத்தால் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறுவார்கள் என்றும், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்டவர்கள் இட ஒதுக்கீட்டினை பொருளாதார அடிப்படையில் தருவதை ஆதரிக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதிமுக எம்.பி.க்களை மக்களவை சபாநாயகர் இடைநீக்கம் செய்யாமல் இருந்திருந்தால், இந்த மசோதா விவாதத்துக்கு வரும்போது விவகாரம் வேறுமாதிரி இருந்திருக்கும் என்று தம்பிதுரையை மேற்கோள்காட்டுகிறது அந்நாளிதழ்.
தமிழ் இந்து: தேசிய தலைவர்களிடம் ஆதரவு தேடும் பிரகாஷ்ராஜ்
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தேர்தல் வெற்றிக்காக தேசிய அரசியல் கட்சி தலைவர்களிடம் ஆதரவு தேடத் துவங்கி உள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
"கர்நாடக மாநில மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட துவங்கியுள்ளார் இந்த வரிசையில் முதல் தலைவராக டெல்லி முதலமைச்சர ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று சந்தித்தார்
இதுகுறித்து கெஜ்ரிவால் மற்றும் பிரகாஷ்ராஜ் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இதுபோல் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர்கள் வெற்றி பெறுவது மிகவும் சிரமம். இந்தப் பிரச்சனையை தவிர்க்க பிரகாஷ்ராஜ் புதிய உத்தியை கையாண்டு உள்ளதாக கருதப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி: "இந்திய சாதனைப் புத்தகத்தில் 111 அடி உயர சிவலிங்கம்"
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு) இடம்பிடித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"நாட்டின் பல்வேறு இடங்களில் உயரமான சிவன் சிலைகள் உள்ளன. ஆனால் உயரமான சிவலிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்குள்ள சிவலிங்கமே இந்திய அளவில் அதிக உயரமான சிவலிங்கம் ஆகும். நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, பின்னர் சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி கூறினார்.
இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளை (8 மாடி) கொண்டுள்ளது. உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தியானம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கிய சிவலிங்கம் அமைக்கும் பணி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என, கோயில் மடாதிபதி தெரிவித்தார்" என்று அந்த செய்தி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்