You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை கிழக்கு மாகாணம்: "தமிழ் மக்களுக்கு இனி அநியாயங்கள் நடக்கக்கூடாது" - சம்பந்தன்
மாகாண நிர்வாகத்தில் தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் அநியாயங்கள் இடம்பெற்றதாகவும், அவ்வாறான அநியாயங்களும் எதிர்காலத்தில் நடந்துவிடக் கூடாது எனவும் இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை, இன்று வியாழக்கிழமை ஹிஸ்புல்லா கொழும்பில் சந்தித்தார்.
இதன்போது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நீதியாகவும், நேர்மையாகவும் தனது பணிகளை முன்னெடுக்கப் போவதாக, சம்பந்தனிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக செயற்படுவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக ஹிஸ்புல்லாவிடம் இந்த சந்திப்பின்போது உறுதியளித்த சம்பந்தன்; "தமிழ் மக்கள் பல்வேறு துன்பங்களைத் தாங்கி நின்கிறார்கள். கடந்த காலங்களில் அரச நியமனங்களிலும், பாடசாலைகளிலும் மாகாண நிர்வாகத்தில் அவர்களுக்கு அநியாயங்கள் இடம்பெற்றிருக்கிறன. எதிர்காலத்தில் அவ்வாறு நடந்துவிடக்கூடாது" என வேண்டிக் கொண்டார்.
"தமிழ் மக்கள் யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எந்த அரசாங்கத்தோடும் இணைந்து அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளாமல் தமது உரிமைககளைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று வரை போராடி வருகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் தமிழ் பேசும் ஒருவர். நேற்று ஆளுநர் செயலகத்தில் சகல இன மக்களையும் சந்தித்து பிரச்சனைகளை கேட்டறிந்தீர்கள். இது சந்தோசமான வரவேற்கத்தக்க விடயம்" என்றும் சம்பந்தன் கூறினார்.
"தமிழ் - முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்கும் அதேவேளை, தமிழ் மக்களின் காணிப்பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, கல்வி, நிர்வாகம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நீங்கள் அதிகளவு அக்கறை செலுத்த வேண்டும்" என்றும், ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர்; "எனது பணிகளை நீதியாகவும், நேர்மையாகவும் எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் முன்னெடுப்பேன்" என உறுதியளித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமை தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்