You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேட்ட - சினிமா விமர்சனம்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஏப்ரலுக்குள் ரஜினி நடித்து வெளிவரும் மூன்றாவது திரைப்படம் இது. 90களின் ரஜினியை மீண்டும் ரசிகர்களுக்குக் காட்ட நினைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். பழைய பகையை நாயகன் நீண்டகாலத்திற்குப் பிறகு ஒழித்துக்கட்டுவதுதான் படத்தின் 'ஒன் - லைன்'.
ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் கல்லூரியின் வார்டனாக வருகிறார் காளி (ரஜினி). அந்தக் கல்லூரி விடுதியில் நடக்கும் அநியாயங்களை சரிசெய்வதோடு, அங்கே ரவுடித்தனம் செய்பவர்களையும் அடக்குகிறார் மனிதர். அதே கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு காதல் ஜோடியை பிரிக்க மூன்றாமாண்டு மாணவன் ஒருவன் முயற்சி செய்ய காதல் ஜோடியை பாதுகாக்க ஆரம்பிக்கிறார் காளி. ஆனால், திடீரென வடநாட்டு கும்பல் ஒன்று காளியையும் அந்த இளைஞனையும் கொல்ல முயல்கிறது. சம்பந்தமில்லாமல் வடநாட்டிலிருந்து வரும் கும்பல் ஏன் காளியைக் கொல்ல முயல்கிறது, காளிக்கும் அந்த கல்லூரி இளைஞனுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.
சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் படம்தான். சீரியஸாக ஏதோ செய்யப்போகும் எந்த பாவனையுமின்றி தன் ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ, அதைச் செய்திருக்கிறார் ரஜினி. படத்தின் துவக்ககாட்சியிலிருந்து படத்தின் க்ளைமாக்ஸ் வரை அவரது நடிப்பும் மேனரிசமும் ரசிகர்களை வெகுவாகக் கவரக்கூடும்.
கதாநாயகிகளாகவரும் சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கும் அதிக காட்சிகள் இல்லை. இதில் சிம்ரன், தான் வரும் ஒரே காட்சியில் ஜொலிக்கிறார்.
பிரதான வில்லனாக வரும் நவாஸுதீன் சித்திக் மிகப் பிரமாதமான நடிகர். ஆனால், இந்தப் படத்தில் ஒரு வழக்கமான ரஜினி பட வில்லன். அதிலும், "என்னடா இன்னும் அவனை கொல்லலையா?" என்று கேட்கும் பழைய பாணி வில்லன். பல படங்களில் சிறிய பாத்திரங்களில்கூட அசரவைத்திருக்கும் நவாஸுதீன் இதில் சற்று ஏமாற்றமளிக்கிறார்.
படத்தின் முற்பாதியில் அதிகம் தலைகாட்டும் பாபி சிம்ஹாவும் பிற்பாதியில் அதிக நேரம் வரும் விஜய் சேதுபதியும் கொடுத்த பாத்திரத்திற்கேற்றபடி நடித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை எல்லாப் பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் படத்தில் அப்படியில்லை.
இந்தப் படத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதியைவிட சிறப்பானது. படத்தின் துவக்கத்தில் கதவைத் திறந்துகொண்டு நுழையும் ரஜினி, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதிரடியாகப் பாய்கிறார். இடைவேளைவரை இந்தப் பாய்ச்சல் தொடர்கிறது. ரஜினி நடித்து சமீபத்தில் வந்த திரைப்படங்களில் இந்த அதிரடியும் பாய்ச்சலும் 'மிஸ்' ஆகியிருந்த நிலையில், இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்திற்குள்ளாக்கக்கூடும். ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையிலான காட்சியில், இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மனம் கவர்கிறார்கள்.
ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் கதை ஃப்ளாஷ்பேக், உத்தரப்பிரதேசம் என்று நகர்ந்ததும் சற்று தொய்வடைய ஆரம்பிக்கிறது. க்ளைமேக்ஸ் நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கிறது திரைக்கதை. முடிவில் வரும் சிறிய திருப்பமும் நல்ல சர்ப்ரைஸ்.
இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க படம். பாடல்கள் ஏற்கனவே பிரபலமாகிவிட்டன. ஆனால், பின்னணி இசையிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு கவனத்தை ஈர்த்திருக்கிறார் அனிருத். தவிர, படம் நெடுக பழைய பாடல்களை ஒலிக்கவிடுவதும் சிறப்பு.
திருவின் ஒலிப்பதிவும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்களும் படத்திற்கு கூடுதல் அழகைக் கொடுக்கின்றன.
இரண்டாம் பாதியில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் இந்தப் படத்தின் மூலம் பழைய பாணிக்கு திரும்பியிருக்கிறார் ரஜினி. வரவேற்கத்தக்க திருப்பம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்