You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷா ஃபைசல்: தொடரும் காஷ்மீர் கொலைகளை காரணம் காட்டி காஷ்மீர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவி விலகல்
காஷ்மீரில் கேட்பாரின்றி தொடரும் கொலைகளையும், மத்திய அரசின் பாராமுகத்தையும் கண்டித்து பதவி விலகுவதாகக் கூறியுள்ளார், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி.
இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இந்துத்துவ சக்திகளால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதையும், காணாமல் ஆக்கப்படுவதையும், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அடையாளத்தின் மீதான தாக்குதலையும், இந்தியப் பெருநிலப் பகுதியில் அதி தேசியவாதத்தின் பெயரால் பெருகும் சகிப்பின்மை, வெறுப்புணர்வு ஆகியவற்றையும் கண்டித்தும் தாம் இந்திய ஆட்சிப் பணியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
"இந்திய ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, ஆகிய பொது நிறுவனங்களை சிதைப்பது இந்த நாட்டின் அரசமைப்புச் சட்டக் கட்டுமானத்தை அழிக்கவல்லது எனவே இவற்றை நிறுத்தவேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
"பகுத்தறியும் குரல்களை இந்த நாட்டில் நீண்ட நாள்களுக்கு முடக்கிவைக்க முடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். உண்மையான ஜனநாயகத்தில் நடைபோட விரும்பினால் முற்றுகையிட்டதைப் போன்ற சூழல் முடிவுக்கு வரவேண்டும்.
இந்திய ஆட்சிப் பணியில் எனது சிறப்பான பயணத்துக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியருக்கு நன்றி.
ஐ.ஏ.எஸ். கனவோடு இருப்பவர்களுக்கு பயிற்சி அளித்து வழிகாட்டுவது இதற்கு மேல் என் முக்கியப் பணிகளில் ஒன்று," என்று அவர் கூறினார்.
"என் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதற்காக வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசுகிறேன். இந்தப் புதிய பணியில் உங்கள் ஆதரவையும், ஆசியையும் எதிர்பார்க்கிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். ட்விட்டரிலும் அவர் இது தொடர்பாக அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த பதவி விலகலை வரவேற்றுள்ளார் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா. இது தொடர்பாக வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில், நிர்வாகத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு, அரசியல் துறைக்கான லாபம் என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல்லா. இதற்கடுத்தே ஷா ஃபைசல் அரசியலில் ஈடுபடப் போகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறிதுகாலம் முன்பு ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக இவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு சர்ச்சைக் கருத்து பரபரப்பைத் தோற்றுவித்தது.
சிறிதுகாலம் முன்புவரை இவர் படிப்புக்காக விடுப்பில் அமெரிக்கா சென்றிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்