5 மாநில தேர்தல் முடிவுகள் : பலவீனம் அடைந்ததா மோதி “அலை”?

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், எம்.ஏ.பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின் எஞ்சிய மாதங்களை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைகளின் தேர்தல் முடிவுகள், தேசிய அளவில் மோதியின் அரசியல் செல்வாக்கை பலவீனம் அடையச் செய்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த தேர்தல்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை (டிசம்பர் 12) அறிவிக்கவுள்ளது.
ஆனால் கடைசியாக செவ்வாய்க்கிழமை வெளியான அலுவல்பூர்வமற்ற தகவல்களின்படி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி பறிகொடுத்துள்ளது.

பட மூலாதாரம், MONEY SHARMA
இதற்கிடையே, மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி, மிஸோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை பறிகொடுத்ததன் மூலம், இந்தியாவின் வடகிழக்கில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி, ஆட்சிக்கட்டிலில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் பரவலாக எதிர்பார்த்தபடி, ஆளும் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதாக அரசியல் ஆய்வாளர்களில் ஒரு தரப்பினர் கூறினார்கள்.
ஆனால், அந்த பார்வை சரியல்ல என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், NurPhoto
"மோதி" அலை இல்லை
"ஐந்து மாநிலங்களும் வெவ்வேறு மாநிலம் சார்ந்த பிரச்னைகளுடன் அவற்றின் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டன.
குறிப்பாக, ராஜஸ்தானில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சிக்கு தலைமை வகித்த வசுந்தரா ராஜேவை பொருத்தவரை, அந்த மாநிலத்தில் பதிவான வாக்குகள், மத்தியில் ஆளும் பிரதமர் மோதிக்கு எதிரான வாக்குகளாக கருத முடியாது" என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.
2014-ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 26இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.
சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 10 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வென்றது. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 23இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வென்றது.
இதேபோல, 2013-இல் மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 165 இடங்களில் பாரதி ஜனதா கட்சியும் 13 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றன.
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 49 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 39 இடங்களில் காங்கிரஸும் வென்றன.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 163 இடங்களிலும், காங்கிரஸ் 21இடங்களிலும் வென்றன.
அப்போதைய தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை மக்கள் விரும்பியதாக அக்கட்சித் தலைமை கோரியது.

பட மூலாதாரம், Hindustan Times
பிரதமரான பிறகு தீவிர தாக்கம்
ஆனால், அடுத்த ஆண்டே அதாவது 2014-இல் நாட்டின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு, நாட்டில் நிலவிய மோதி அலையால்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு அதிகரிப்பதாக அக்கட்சித் தலைவர்கள் கோரினார்கள்.
2014, மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பிறகு, அடுத்து நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பிரதமரான மோதியே பிரசார நாயகனாக முன்னிறுத்தப்பட்டார்.
அதுபோலவே, நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பிரதமர் மோதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
ஆனால், பிரதமரான பிறகு 2016-ஆம் ஆண்டில் மோதி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயிகள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பட மூலாதாரம், NurPhoto
காங்கிரஸின் பிரசார உத்தி
சத்தீஸ்கரில் பல ஆண்டுகளாக விவசாயிகள் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித் தரக் கோரி போராடிய வேளையில், குவிண்டாலுக்கு ரூ. 300 போனஸ் வழங்குவதாக ரமண் சிங் அரசு அறிவித்தது.
அதே சமயம், அந்த மாநிலத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாகவும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித் தருவதாகவும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களாக உற்பத்தி செய்த நெல்லை சந்தையில் விற்காமல் விவசாயிகள் தாமதம் செய்ததாகவும், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால் தங்களின் நிலைமை மாறலாம் என்றும் விவசாயிகள் தரப்பு கருதியதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இது சத்தீஸ்கர் தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "சத்தீஸ்கர் மாநிலத்தை பொருத்தவரை, ஆளும் ரமண் சிங் தலைமையில் நான்கு முறை ஆட்சி நீடித்த நிலையில்,அதற்குண்டான போதிய வளர்ச்சியோ,திட்டங்களோ அங்கு நடைமுறைக்கு வராத காரணத்தால், அந்த மாநிலத்தில் ஆளும் கட்சி மீதான ஒருவித எதிர்ப்புணர்வோ, மாற்று ஆட்சி தேவை என்ற நிலையிலோ வாக்காளர்கள் இருந்திருக்கலாம்" என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
இந்த நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த தோல்வி, அதிர்ச்சிகரமானது என்பதை ஒப்புக் கொள்கிறார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயணன்
ஒப்பீடு கூடாது
மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்த தோல்வியையும் நாடாளுமன்ற தேர்தலையும் ஒப்பீடு செய்வதை ஏற்க முடியாது என்ற வாதத்தையும் நாராயணன் முன்வைத்தார்.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவாலா, "காங்கிரஸ் மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் விதமாக, பொறுப்பை உணர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த வேளையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி,சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளித்தாலும், அது மத்தியில் ஆளும் மோதி அரசு மீதான அதிருப்தியின் வெளிப்பாடு அல்ல என்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், வழக்கம் போல யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியிருந்த "நோட்டா" வாய்ப்பு, சிறிய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"நோட்டா"வால் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு
சத்தீஸ்கரில் 90 தொகுதிகளில் 85இடங்களில் தமது வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி நிறுத்தியிருந்தது. சமாஜ்வாதி கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கணிசமான தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினாலும், நோட்டா வாய்ப்பை பயன்படுத்திய வாக்குகள் 2.1 சதவீதத்தை கடந்திருந்தது. இதனால் இந்த மாநிலத்தில் எத்தனை கட்சிகள் களத்தில் இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இடையிலான நேரடி மோதலையே அங்குள்ள வாக்காளர்கள் பிரதான போட்டியாக கருதியது தெளிவாகிறது.
ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங்கின் தலைமை பல இடங்களை இம்முறை பறிகொடுத்ததை அரசியல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.
"மத்திய பிரதேச மாநிலத்தை பொருத்தவரை, அங்கு ஆட்சியில் நீடித்த சிவராஜ் சிங் செளஹான், இந்திய பிரதமர் மோதியின் வளர்ச்சிக்கு இணையாக முன்னேறி வந்த நிலையில், அங்கு அவரது தலைமை அடைந்த வீழ்ச்சிக்கு பிரதமர் மோதியின் கரம் ஓங்கியிருப்பதாக கருதலாம்" என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலை, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதலாமா என்று கேட்டதற்கு, "2019-இல் இந்திய மக்களவைத் தேர்தல் என்பது நாடு முழுமைக்குமான வாக்குப்பதிவாக இருக்கும் என்பதால் அதையும் தற்போதைய தேர்தல்களையும் ஒப்பிட முடியாது" என்றார் ராதாகிருஷ்ணன்.
நடந்து முடிந்த தேர்தலை ஒரு போர் போல, ஆளும் பாரதிய ஜனதா கட்சி கருதியதாகக் கூறிய அவர், தேர்தலில் வெற்றி பெற எல்லாவித உத்திகளையும் அக்கட்சிய பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
அதே சமயம் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை அமைக்க, காங்கிரஸுக்கு நடந்து முடிந்த தேர்தல்கள் பயன்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி போன்ற சிறிய கட்சிகள், பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள மிகப்பெரிய கட்சிகளுடன் கரம் கோர்த்து சேர கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸுக்கு பலம் கூடுகிறது
இதே கருத்தை டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வுக்கான மையத்தின் ஆய்வாளர் சீமா முஸ்தபாவும் வலியுறுத்தினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக மாநில அளவில் உள்ள பல கட்சிகள், தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸுடன் கைகோர்க்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக சீமா முஸ்தபா தெரிவித்தார்.
இந்த தேர்தல் முடிவுகள் மாநில அரசியல் சார்ந்தவை என்றாலும், மத்தியிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடும் அதன் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒதுக்கி விட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களையொட்டி பிரதமர் நரேந்திர மோதி, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 33இடங்களிலும் அக்கட்சித் தலைவர் அமித் ஷா 54 இடங்களிலும் பிரசாரம் செய்தனர்.
இரு உயர்நிலை தலைவர்களின் பிரசார உத்திகளுக்கு பலன் அளிக்காத வகையில்,தோல்வியைத் தழுவிய பாரதிய ஜனதா கட்சியின் முடிவுகள், அக்கட்சிக்கு ஒருவித பின்னடைவு என்பதை ஒதுக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த தோல்வியின் தாக்கத்தில் இருந்து பாரதிய ஜனதா கட்சி மீள்வதற்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்றாலும், அது மீண்டு வரும்போது, நாடு தழுவிய அளவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அந்தக் கட்சி ஆயத்தமாக வேண்டிய அழுத்தத்தை அக்கட்சித் தலைமை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மொத்தத்தில், 2014-ஆம் ஆண்டில் நிலவிய மோதிக்கு சாதகமான "அரசியல் அலை", அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வீசுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதையே நடந்து முடிந்த தேர்தல்கள் உணர்த்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












