5 மாநில தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதி ஆதரவு

மாயாவதி

பட மூலாதாரம், Hindustan Times / getty

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சத்தீஸ்கரில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தங்கள் கட்சி ஆதரவளிக்கும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் அவர் கட்சி இரண்டு இடங்களிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆறு இடங்களிலும் வென்றுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Kevin Frayer

ராஜஸ்தானில் தனிப்பெரும்பான்மை இல்லை

ராஜஸ்தான் மாநில தேர்தலில் 199 தொகுதிகளுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் 99 தொகுதிகளை வென்றுள்ளது. தற்போதைய சூழலில் ஆட்சியமைக்க காங்கிரசிற்கு 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக தற்போது 73 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. ராஷ்டிரிய லோக் தளம் ஒரு இடத்தை வென்றுள்ளது. ராஷ்ட்ரிய லோக்தந்ரிக் கட்சி மூன்று இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி இரண்டு இடங்களிலும் வென்றுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி ஆறு இடங்களை வென்று சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்மியூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. 13 இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் 39.3% வாக்குகளையும் பாஜக 38.8% வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 4% வாக்குகளையும் பெற்றுள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மறைவால் ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

பட மூலாதாரம், Hindustan Times

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கொடி

மூன்று முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த ரமன் சிங்கிற்கு இம்முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு இல்லை.

90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்றது 15 இடங்கள் மட்டுமே. ஜனதா காங்கிரஸ் ஐந்து இடங்களையும் பகுஜன் சமாஜ் இரண்டு இடங்களையும் வென்றுள்ளன. காங்கிரஸ் 67 இடங்களில் வென்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு 43% வாக்குகளும் பாஜகவுக்கு 33% வாக்குகளும் ஜனதா காங்கிரசுக்கு 7.6% வாக்குகளும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 3.9% வாக்குகளும் கிடைத்துள்ளன.

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானாவில் ஆட்சியை தக்கவைத்தார் சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களை வென்று அறுதி பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளார்.

சுமார் 46.9% வாக்குகளை சந்திரசேகர் ராவ் வென்றார்.

அரசியலில் எதிரிகளான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. காங்கிரசுக்கு 28.4% வாக்குகள் கிடைத்தன. தெலுங்கு தேசம் 3.5% வாக்குகளை வென்றது.

காங்கிரஸ் 19 இடங்களையும் தெலுங்கு தேசம் இரண்டு இடங்களையும் மட்டுமே வென்றுள்ளன.

பாரதிய ஜனதா கட்சி 7 சதவீத வாக்குகளை பெற்றபோதும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. ஆனால் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ - இட்டீஹாதுல் முஸ்லிமீன் கட்சி 2.7% வாக்குகளுடன் ஏழு இடங்களை வென்றுள்ளது.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.

மிசோரம் தேர்தல்

பட மூலாதாரம், DIPTENDU DUTTA

மிசோரத்தில் காங்கிரசுக்கு பலத்த அடி

பத்து ஆண்டுகளாக மிசோரத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை பெருந்தோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஐந்தில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. சுயேச்சைகள் எட்டு இடங்களில் வென்றுள்ளனர். பாஜகவுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.

மிசோ தேசிய முன்னணி 37.6% வாக்குகளுடன் 26 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 30.2% வாக்குகளும், சுயேச்சைகள் 22.9% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Hindustan Times

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?

மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 தொகுதிகளில் வென்றுள்ளது.

பாஜக 109 இடங்களை வென்றுள்ளது. 2003, 2008,2013 என தொடர்ச்சியாக மூன்று முறை பாஜக ஆட்சியமைத்த நிலையில் இம்முறை ஆட்சியை இழந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி இரண்டு இடங்களையும் சமாஜ்வாதி ஒரு இடத்திலும் வென்றுள்ளன. சுயேச்சைகள் நான்கு இடங்களை வென்றுள்ளன.

தற்போதைய சூழலில் பாஜக 41% வாக்குகளையும் காங்கிரஸ் 40.9% வாக்குகளையும் பகுஜன் சமாஜ் 5% வாக்குகளையும் வென்றுள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

சுயேச்சையாக வென்றுள்ளவர்கள் நால்வரும் தங்களை ஆதரிப்பதாக ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தில் காங்கிரஸ் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: