கஜ புயலிலும் கர்ப்பிணிகளை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - நெகிழ்வூட்டும் சம்பவம்

பட மூலாதாரம், இந்து தமிழ்
இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'அமைச்சர்களை மக்கள் முற்றுகை; மறியலால் பதற்றம்'
"கஜ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 4 நாட்களாக மின்சாரம் இல்லாதது, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் அதிகாரிகள் புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்யாமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் ஒரத்தநாடு, தஞ்சாவூர் பகுதி கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான வீடுகள் தரைமட்டமாயின. தென்னை, தேக்கு, மரங்கள் விழுந்து வீடுகளின் ஓடுகள் நொறுங்கியும், சுவர்கள் இடிந்தும் சேதமடைந்தன. வீட்டை விட்டு வெளியே வர இயலாத அளவுக்கு வீட்டின் முன்பும், உட்பிரிவு சாலைகளிலும், மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன.
புயல் தாக்கிய 4-ம் நாளான நேற்றும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு கோரியும், புயல் நிவாரணம், சீரமைப்புப் பணிகளில் அரசு மெத்தனம் காட்டுவதாக கூறியும் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், Facebook
மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, வேலுமணி, துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நேற்று ஒரத்த நாடு உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்களில் சென்று பார்வையிட்டனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
இந்த நாளிதழின் மற்றொரு செய்தி கனமழைக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விகடர் ஜான்பால் இரு கர்ப்பிணிகளை பத்திரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது குறித்து விவரிக்கிறது.
காரைக்கால் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எஸ்.விக்டர் ஜான்பால் (33). தற்காலிகமாக நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற் றுகிறார். இவர் கடந்த 15-ம் தேதி இரவு 11 மணி அளவில் சூறைக் காற்றுடன் கனமழை கொட்டிய நேரத்தில், தன் உயிரை பணயம் வைத்து இரு கர்ப்பிணிகளை பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார் என்கிறது அந்த செய்தி.
"அன்றைய தினம் நெடுங்காடு சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ள தமிழகப் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியை சிரமப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துவிட்டு நெடுங்காடு திரும்பினேன்.
அடுத்த விநாடியே நெடுங்காடு குரும்பகரம் மத்தளங்குடி பகுதியில் வலியால் துடிக்கும் ஒரு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என போன் வந்தது. உடனே புறப்பட்டேன். பல இடங்களில் மரங்கள் விழுந்து கிடந்ததால் மாறி மாறி வெவ்வேறு வழிகளில் அவரது வீட்டுக்கு சென்றேன். அவரை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டேன். அவரது உறவினர்கள் 2 பேரையும் வாகனத்தின் பின்னால் வருமாறு கூறினேன்.
காற்று வீசிக்கொண்டிருந்தது, வழிநெடுகிலும் மரங்கள் விழுந்து கிடந்தன. ஊருக்குள் உள்ள மாற்று வழிகளில் எல்லாம் புகுந்து சென்றேன். ஆங்காங்கே கிடந்த மரங்களை பின்னால் வந்த உறவினர்கள் வந்து அகற்றி பாதை அமைத்துக் கொடுத்தனர். பாதை சரியில்லாமல் நீண்ட நேரம் சுற்றிச் சுற்றி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துவிட்டேன். அவர்கள் இருவருக்கும் நல்லபடியாக குழந்தை பிறந்த தகவலை கேட்டதும், நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்து போய்விட்டது." என்று ஜான் விக்டர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தினமணி: எண்ணெய்க் கசிவை அகற்ற வந்த 'சமுத்ரா பகரேதார்'
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதற்காக, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான மாசுக்கட்டுப்பாட்டுக் கப்பல் "சமுத்ரா பகரேதார்' விசாகப்பட்டினத்தில் இருந்து திங்கள்கிழமை வந்தது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், தினமணி
"எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் "டேங்க் டெர்மினல் லிமிடெட்' என்ற தனியார் கடல்சார் திரவ முனையம் செயல்படுகிறது. இந்த முனையத்துக்கு கடந்த சனிக்கிழமை இரவு எம்.டி. கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பல் சுமார் 15 ஆயிரம் டன் பர்னஸ் ஆயிலை (உலை எண்ணெய்) ஏற்றிக்கொண்டு வந்தடைந்தது.
இந்தக் கப்பலில் இருந்து பர்னஸ் ஆயிலை இறக்குமதி செய்யும் பணி அன்று தொடங்கியது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கிடங்குக்கு அனுப்பும் பணி நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணியளவில் இணைப்புக் குழாய் ஒன்று கழன்று பர்னஸ் ஆயில் கடலுக்குள் கொட்டத் தொடங்கியது. இதனையடுத்து உடனடியாக ஆயில் இறக்குமதி செய்யும் பணி நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் 2 ஆயிரம் கிலோ அளவிற்கு பர்னஸ் ஆயில் கடலில் கொட்டி துறைமுக கடல் பகுதி முழுவதும் பரவியது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


பட மூலாதாரம், இந்து தமிழ்
தினத்தந்தி: '3 பேரை விடுதலை செய்தது வருத்தம் அளிக்கிறது'
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார் என்கிறது தினத்தந்தி.

பட மூலாதாரம், Facebook
பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன், "தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்ததது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார்களோ? தெரியவில்லை.
அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.
எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை." என்று அவர் கூறியதாக சொல்கிறது அந்நாளிதழ்.
"இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் 'உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்' என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.
தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்." என்று மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கடுமையாக தாக்கிக் கொலை; தனி பட்டியல்'
இந்தியாவில் நடக்கும் குற்றங்கள், போராட்டங்கள், தற்கொலை சம்பவங்களை ஆவணப்படுத்தி வருகிறது தேசிய குற்ற ஆவண காப்பகம். இனி அவர்கள் கடுமையாக தாக்கிக் கொலை செய்யப்படும் சம்பவங்களையும் ஆவணப்படுத்த இருக்கிறார்கள். பசு காவலர்கள் என்ற பெயரில் படுகொலை செய்வது தொடர்பான சம்வங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள சூழ்நிலையில் அது தொடர்பான விஷயங்களை ஆவணப்படுத்த இருக்கிறது தேசிய ஆவண குற்ற காப்பகம். இது தொடர்பான செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












