அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு: மோதல் நிறைந்த கடந்த காலத்துக்கு மீண்டும் திரும்புகிறதா பஞ்சாப்?

பட மூலாதாரம், Hindustan Times / getty
- எழுதியவர், அர்விந்த் சாப்ரா
- பதவி, சண்டிகர்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே நிரன்காரி பவன் வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு 1980களிலும் 1990களின் தொடக்கத்திலும் பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதப் போராட்டத்துடன் நிலவிய தீவிரவாதம் மிகுந்திருந்த நாட்களை நினைவூட்டுகிறது.
மூன்று பேர் கொல்லப்பட்ட ஞாயிறு குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என காவல்துறை கூறியுள்ளபோதிலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சீக்கியர்கள் - நிரன்காரி பிரிவினரின் இடையே நடந்த மோதல் சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.
யார் இந்த நிரன்காரி பிரிவினர்?
உலகெங்கும் பல லட்சம் பேர் பின்பற்றுவதாக கூறப்படும் நிரன்காரி பிரிவு 1929இல் சீக்கியத்தில் ஓர் பிரிவாக நிறுவப்பட்டது.
நிரன்காரி எனப்படுவது ஒரு மதப்பிரிவாகும். இவர்களுக்கும் பாரம்பரிய சீக்கியர்களுக்கும் இடையே வெளிப்டையாகத் தெரியாவிட்டாலும், பல ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பட மூலாதாரம், RAVINDER SINGH ROBIN / BBC
அவர்கள் எந்த மதத்துடனும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ளாமல், ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களாக மட்டுமே தங்களை அடையாளப் படுத்திக்கொள்கின்றனர்.
சீக்கியர்களுடன் இவர்கள் வேறுபடுவது எப்படி?
அவர்களுக்கு வழக்கமான சீக்கியர்களைப் போல் அல்லாமல் உயிருடன் இருக்கும் குருக்களின் மீது நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கும் சீக்கியப் புனித நூலான குரு கிராந்த் சாகிப் மீது பெரும் பற்று உள்ளது. சீக்கியர்கள் வாழும் மனிதர்களை தங்கள் குருவாக ஏற்றுக்கொள்வதில்லை.
"புனித நூலான குரு கிராந்த் சாகிப் போதிக்கும் கருத்துகளைத் தங்களுக்கு எடுத்துரைக்க ஒருவர் தேவை என நிரன்காரி பிரிவை பின்பற்றுவோர் கருதுகின்றனர், " என்கிறார் சர்வதேச பஞ்சாபி மையத்தின் இயக்குநர் முனைவர் பல்கார் சிங்.
"சீக்கிய மதத்தின் ஐந்து அரியாசனக் கோட்பாடுகளில் ஒன்றான 'அகால ஆசனத்தை' (அகால் தக்த்) அவர்கள் பின்பற்றுவதில்லை. இதனால் பாரம்பரிய சீக்கியர்களுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி மோதல் உண்டாகிறது, " என்கிறார் அவர்.
சீக்கியர்கள் மற்றும் நிரன்காரிகளின் உறவு எப்படி உள்ளது?
1978ஆம் ஆண்டு நிரன்காரிகளுக்கும் பாரம்பரிய சீக்கியர்களுக்கும் இடையேயான மோதலில் இரு தரப்பிலும் 16 பேர் (13 சீக்கியர்கள், 3 நிரன்காரிகள்) கொல்லப்பட்டனர். இது பஞ்சாபில் தீவிரவாத ஆயுதப் போராட்டங்களின் தொடக்கம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஏப்ரல் 1980இல் நிரன்காரி பிரிவின் அப்போதைய அப்போதைய குருவாக இருந்த குருபச்சன் சிங் என்பவரை, டெல்லியில் வைத்து சீக்கிய நம்பிக்கையை பின்பற்றும் ரஞ்சித் சிங் என்பவர் கொலை செய்தார். சிறையில் இருந்தபோதே அகால் தக்த்-இன் தலைவராக அவர் 1990இல் நியமிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், DAMDAMI TAKSAL
1997இல் அகாலி தளத்தைச் சேர்ந்த முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் தலைவர் ஜி.எஸ்.தோரா ஆகியோர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தது உள்ளிட்ட முயற்சிகளால் விடுவிக்கப்பட்ட அவர் அகால் தக்த்-இன் தலைவராக பொறுப்பேற்றார்.
2016இல் நிரன்காரி பிரிவின் தலைவர் பாபா ஹர்தேவ் சிங் கனடாவில் ஒரு சாலை விபத்தில் இறந்தபின், அவரது மனைவி சவிந்தர் கௌர் தலைமை பொறுப்பேற்ற முதல் பெண் ஆனார்.
பஞ்சாபில் வன்முறை அதிகரிக்கிறதா?
பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஜெய்ஷ்-ஈ-முகமத் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளதாக கடந்த வாரமே உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த 5-6 பேர் பெரோஸ்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல ஒரு குண்டுவெடிப்பு, ஜலந்தரில் உள்ள காவல் சோதனைச் சாவடி மீது சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.
2015இல் பதான்கோட் விமானப் படைத் தளத்திலும், 2015இல் தினாநகர் காவல் நிலையத்திலும் மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன.
ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் சில ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களும் கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு முகமை (National Investigating Agency) காலிஸ்தான் விடுதலைப் படை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகக் கூடும்.
அவர் கடந்த காலங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்தவராக அறியப்படுகிறார்.
குரு கிரந்த் சாகிப் பக்கங்கள் கிழிக்கப்பட்ட சர்ச்சை சமீப ஆண்டுகளில் பெரும் சமூக மற்றும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












