2019 தேர்தல் ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டருக்கு ஏன் சவாலாக இருக்கும்?#BeyondFakeNews

காணொளிக் குறிப்பு, நீங்கள் பகிர்வது போலி செய்தியா? - வழிகாட்டும் பிபிசியின் முன்னெடுப்பு

பிபிசியின் Beyond fake news நிகழ்ச்சிக்காக ஃபேஸ்புக், கூகுள், மற்றும் ட்விட்டரில் இருந்து வந்த பிரதிநிதிகள், இந்தியாவில் போலிச் செய்திகள் ஒரு தீவிரமான பிரச்சனையாக உள்ளது என்றும் தங்களின் நிறுவனம் அதனை சரி செய்ய முயற்சித்து வருகிறது என்றும் தெரிவித்தனர்.

ஐஐடி டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஃபேஸ்புக்கின் சார்பாக மனிஷ் காந்துரியும், கூகுளின் சார்பாக எரியென் ஜே லியூவும், ட்விட்டரின் சார்பாக விஜய கடாவும் பங்குபெற்று, போலிச் செய்திகளை தடுப்பதில் உள்ள சவால்கள் குறித்து விவாதித்தனர்.

"இது எங்கள் நிறுவனத்துக்கு ஒரு அச்சுறுத்தல்தான். எனவே அதனை நாங்கள் தீவிரமாக கருத்தில் கொள்கிறோம். ஒரு சமூக ஊடகமாக செய்திகளின் தரத்தின் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் சமூகத்தில் அர்த்தமுள்ள வகையில் செயல்பட விரும்புகிறோம். போலிச் செய்திகள் அதற்கு எதிரானவை" என்று ஃபேஸ்புக்கை சார்ந்த மனிஷ் கந்தூரி தெரிவித்தார்.

கூகுளின் தெற்கு ஆசியாவின் நியூஸ்லேப் தலைவரான எரின் ஜே லியூ, "இது ஒரு தீவிரமான பிரச்சனையாக கூகுள் ஒப்புக் கொள்கிறது. இதற்கான தீர்வை கண்டுபிடிப்பது எங்களின் பொறுப்பு. கூகுளிற்கு வரும் மக்கள் விடைகளை தேடி வருகின்றனர். பத்திரிகையாளர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தொழில்நுட்பத்தின் உதவியோடு உயர்தர கருத்துக்களை வழங்க எங்களால் முடியும்" என்று தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற #BeyondFakeNews கருத்தரங்கம்
படக்குறிப்பு, டெல்லியில் நடைபெற்ற #BeyondFakeNews கருத்தரங்கம்

ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் விஜய கட்டே, "ட்விட்டரின் நோக்கம் மக்களுக்கிடையே தொடர்பை அதிகரிப்பது. உலகில் என்ன நடக்கிறது என்பதையும், தங்களுக்கு தெரிந்தவற்றை உலகிற்கு சொல்லவும் பயனர்கள் ட்விட்டருக்கு வருகின்றனர். அவர்களுக்கு உயர்தர கருத்துக்களை கொடுக்கவில்லை என்றால் மக்கள் எங்களை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவர். எனவே இம்மாதிரியான செய்திகளின் விளைவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

அமெரிக்க தேர்தலில்போது நடைபெற்ற தவறுகள் குறித்து ஒப்புக் கொண்ட ஃபேஸ்புக்கின் மனிஷ் காந்தூரி, "நாங்கள் எங்களின் தவறுகளை ஒப்புக் கொண்டோம். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தல் பொறுத்த வரையில், அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்.. ஃபேஸ்புக் போலிச் செய்திகளுக்கான தீர்வின் அங்கமாக இருக்க விரும்புகிறது. எங்கள் தளத்தில் உண்மையான செய்திகள் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்" என்றார்

சமூக ஊடகத்திடம் உள்ள எதிர்பார்ப்புகள்

"அமெரிக்க செனட்டில், அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக்கின் தலையீடு குறித்து பதிலளித்த மார்க் சக்கர்பெர்க், இந்தியாவில் நடைபெறும் கும்பல் கொலை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் இந்தியாவில் நடைபெறும் அந்த சம்பவம் தொடர்பாக மார்க் சக்கர்பெர்க் கவலையுடன் உள்ளார். மேலும் இந்த பிரச்சனையை சரி செய்ய அவர் பெரிய குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். தேர்தல்களை மனதில் வைத்துக் கொண்டு, வாஷிங்டன் டிசியில் தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார் மனிஷ் காந்தூரி.

இது தொடர்பாக வாட்சப் நடவடிக்கை குறித்து பேசிய காந்தூரி, "இந்த வலைதளத்தின் மூலம் நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதாக நாங்கள் அறிகிறோம். மேலும் பல தகவல்களும் இதில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்தியாவில் நாங்கள் மாறி வருகிறோம். இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். இந்த பிரச்சனையை நோக்கிய தீர்வுக்காக நாங்கள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தார்.

2019 தேர்தல்

தேர்தலின் போது போலிச் செய்திகளை தடுக்க நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த மனிஷ் காந்தூரி, "ஃபேஸ்புக்கில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் அதிகமான பணத்தை செலவழித்து வருகிறோம். இது குறித்து பயிற்சி அளிக்கும் திட்டங்களையும் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம்" என்றார்.

யூ டியூப் தளத்தில், பகிரப்படும் போலி காணொளிகள் குறித்து எரின் ஜே. லியூவிடம் கேள்வி எழுப்பிய போது, "இந்தியாவில் பலர் தற்போது செய்திகளை காணவும் யூ ட்யூப் தளத்திற்கு வருவதை நாங்கள் புரிந்து கொண்டோம். தேவையான மாற்றங்களை நாங்கள் செய்து வருகிறோம்" என்று பதிலளித்தார்.

"பிரேக்கிங் செய்திகளுக்காக யூ ட்யூப் தளத்திற்கு வருபவர்களுக்கு நம்பத்தகுந்த செய்தி ஆதாரங்கள் மூலம் செய்திகளை வழங்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

"போலி கணக்குகளை அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். போலி கணக்குகள் எங்களின் கொள்கைக்கு எதிரானது. ஆட்சேபணைக்குரிய தகவல்கள் குறித்து புகார் செய்யவும் நாங்கள் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம்" என்று டிவிட்டரின் சார்பில் பேசிய விஜய கட்டா தெரிவித்தார்.

தேர்தலுக்கான தயாரிப்புகள்

2019 தேர்தலை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மனிஷ் காந்தூரியிடம் கேட்டபோது, ஃபேஸ்புக்கில் செய்திகளின் உண்மைத்தன்மையை கடைபிடிக்க பல முயற்சிகளை எடுத்து அதற்காக பெரும் பணத்தையும் செலவழித்து வருகிறோம் என்று தெரிவித்தார். போலிச் செய்திகளை ஒடுக்க உள்ளூர் நிர்வாகத்திடமும் பணியாற்றி வருகிறோம் என்றார்.

அதே கேள்விக்கு கூகுளை சேர்ந்த எரின் ஜே லியூ, "போலிச் செய்திகளுக்கு எதிராக போராட வலிமையான குழு ஒன்றை உருவாக்கி வருகிறோம் மேலும் இந்தியாவில் உள்ள 8000 பத்திரிகையாளர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம். ஏழு வெவ்வேறு மொழிகளில் இருந்து அவர்கள் வருகை தந்துள்ளனர்." என்று தெரிவித்தார்.

Presentational grey line
Presentational grey line

"அமெரிக்க தேர்தலில் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். போலி கணக்குகள் குறித்து நாங்கள் தீவிரமாக இருக்கிறோம். அரசியல் விளம்பரங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளோம்" என்று டிவிட்டரின் விஜய கடா தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் தளத்தில் அரசியல் கட்சிகளை விளம்பரப்படுத்துவது குறித்து மனிஷ் கந்தூரியிடம் கேட்டபோது, "அரசியல் கட்சிகளுடன் எங்களின் உறவானது இருதரப்பட்டது. ஃபேஸ்புக் ஒரு பயனுள்ள தளமாக மாறியுள்ளதை நாங்கள் தற்போது புரிந்து கொண்டோம்" என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு போலி செய்திகள் குறித்து செயலாற்ற எத்தனை அவகாசம் தரப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த மனிஷ் கந்தூரி, "நாங்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொள்கிறோம். இது ஒரு நாளில் தீர்க கூடிய பிரச்சனையல்ல. ஏன் ஆறு மாதங்களில் கூட முடியாது ஆனால் இதற்கான தீர்வை நோக்கி நாங்கள் பணிபுரிகிறோம்."

இதற்காக வகுக்கப்பட்டுள்ள தந்திரம் என்ன?

தேர்தல்கள் வரவிருக்கும் நிலையில், உருவாக்கப்படும் ஃபேஸ்புக் பக்கங்கள் குறித்து எடுக்கப்பட உள்ள நடவடிக்கை என்ன என்று கருத்தரங்கில் பங்கேற்ற நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

2019 தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

"போலி பக்கங்களை அடையாளம் கண்டுபிடிக்க முறையாக வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால், எது போலிச் செய்தி என்பதை அடையாளம் காண, சில கட்டுப்பாடுகள் உள்ளன. எது போலி, எது போலியல்ல என்ற முடிவை நாங்கள் எடுக்க விரும்பவில்லை. தவறான செய்திகள் சில விதிகளினை அடிப்படையாக கொண்டிருக்காத பட்சத்தில் அது போலிச் செய்தி என்று முடிவெடுக்கப்படும். இதனை உறுதி செய்யும் பணியை மூன்றாம் தரப்பு முகவர்களிடம் ஒப்படைக்கிறோம்" என்று மனிஷ் தெரிவித்தார்.

போலிச் செய்திகளை நீக்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "எது தவறான செய்தி, எது இல்லை என்பது எங்கள் முடிவில்லை. ஆனால், அது எங்கள் சமூக தரங்களுக்கு எதிராக இருந்தால், அதனை நாங்கள் நீக்கிவிடுவோம். உதாரணமாக, வன்முறை, பாலியல் வன்முறை, ஆபாச படங்கள் குறித்த எங்களின் கொள்கை மிகவும் கடினமானது. அப்படி ஒன்று இருந்தால், நாங்கள் அதனை உடனடியாக நீக்கிவிடுவோம். ஆனால், அரசியல் பிரசாரம் செய்வதாக குற்றஞ்சாட்டப்பட்டால், கருத்துகள் மற்றும் ஊகங்கள் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். இதனை ஃபேஸ்புக் அனுமதிக்காது" என்றார்.

அரசியல் விளம்பரம்

ஒரு செய்தியை யார் விளம்பரப்படுத்தி உள்ளார்கள் என்பதை பயனர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய திட்டம் விரைவில் செயல்பாட்டில் வர உள்ளதாக மனிஷ் கூறினார்.

2019ஆம் ஆண்டு, போலிச் செய்திகளை எவ்வாறு தடுப்பது என்ற கேள்விக்கு பதிலளித்த கூகுளின் எரின், "உள்ளூர் மொழிகளில் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். போலிச் செய்திகள் ஆங்கிலத்தில் மட்டும் பரப்பப்படுவதில்லை. உள்ளூர் மொழிகளிலும்தான். போலிச் செய்திகளை எப்படி அடையாளம் காண்பது என்று அந்தந்த மொழியில் உள்ள செய்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.

2019 தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

அதே வேளையில், "தேர்தல் நேரத்தில் போலிச் செய்தி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும். நாங்கள் அது தொடர்பாக பணிபுரிந்து வருகிறாம்" என மனிஷ் குறிப்பிட்டார்.

வாட்சப்பில் போலிச் செய்திகள் பரவுவது குறித்த கேளிவிக்கு பதிலளித்த அவர், "வாட்சப் என்பது தனிப்பட்ட தொடர்புக்கான தளம். அதுதான் வாட்சப்பின் அடிப்படை. அதனை மாற்றினால், மொத்தமாக அனைத்தையும் மாற்றிய மாதிரி இருக்கும். வாட்சப்பில் 80 முதல் 90 சதவீத கருத்து பரிமாற்றம் தனிப்பட்ட நபர்களை சார்ந்தது" என்றார்.

வாட்சப்பினால் ஏற்பட்ட வன்முறை குறித்து பேசிய அவர், "நாங்கள் இதற்கான தீர்வுகளை கண்டு வருகிறோம். எங்கள் சேவையிவ் பல மாற்றங்களையும் கொண்டு வருகிறோம். ஒரு செய்தி எப்படி வைரலாகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :