சிவகாசி பட்டாசு தொழில்: உற்பத்தியும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்

"பட்டாசு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்"

பட மூலாதாரம், The India Today Group

பட்டாசு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுற்றுச்சூழல் நலன் கருதி பலரும் வரவேற்றுனர். இந்நிலையில் இது பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை விளக்குகிறார் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ராதாகிருஷ்ணன்.

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் மற்றும் இணையம் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற பல அம்சங்கள் இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன.

அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது இரண்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட நிபந்தனைகள் பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பை எவ்வாறு பாதிக்கும் என்பது போன்ற பல விஷயங்கள் குறித்து இந்திய பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''இந்த தீர்ப்பு ஓரளவு எதிர்பார்க்கபட்டதே. காலை முதல் இரவு வரை யாரும் பட்டாசு வெடிக்கப் போவதில்லை. சில சமயங்களில் மட்டுமே வெடி வெடிப்பர். தீர்ப்பில் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்க வேண்டியது மக்கள்தான்'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

''இந்த வழக்கு தொடர்பாக தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்புக்கு முன்பு வழக்கமாக வரும் அளவு எங்களுக்கு ஆர்டர் வரவில்லை. தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் வட இந்தியாவில் வழக்கமாக அதிகளவு பட்டாசு வாங்கும் வணிகர்கள் இம்முறை வாங்கவில்லை'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

இதனால் பட்டாசு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், பட்டாசு தடை வந்தால் பட்டாசு தயாரிப்புக்கு தொடர்புடைய பல வகையான தொழில்கள் பாதிக்கப்படும் என்று கூறினார். "பட்டாசு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்"

"பட்டாசு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படும்"

பட மூலாதாரம், Sophie Elbaz

''பட்டாசு தயாரிப்பில் 8 முதல் 10 லட்சம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளதாக சிலர் கூறுகின்றார். ஆனால், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பில் மற்றும் அதன் தொடர்பான நேரடி மற்றும் மறைமுக பணிகளில் கோடிக்கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை நினைவில் கொள்ளவேண்டும்'' என்றார்.

பட்டாசு பயன்பாட்டினால் உண்டாகும் காற்று மாசு குறித்து கேட்டபோது, ''பண்டிகை காலங்களில் ஓரிரு நாட்களும், மற்ற சமயங்களில் சில மணி நேரங்களும் மட்டும் பயன்படுத்தப்படும் பட்டாசு உண்டாக்கும் புகையைவிட வாகனங்களில் வெளியாகும் புகை அதிகம் என்று நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கொன்றில் ஒரு வழக்கறிஞர் முன்பு வாதிட்டார். அதேபோல் இதனால் உண்டாகும் புகையினால் ஏற்படும் பாதிப்பு குறைந்த நேரமே நீடிக்கிறது'' என்று தெரிவித்தார்.

பெரும்பாலான நாடுகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், ''அதேவேளையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் சில இடங்களில் மட்டுமே வெடிக்க வேண்டும், சில வேளைகளில் மட்டும் வெடிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் வரவேற்கப்பட வேண்டியதே'' என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :