ஜெயலலிதா மரணம்: மருத்துவமனையில் நடந்தது என்ன? கால்கள் அகற்றப்பட்டது உண்மையா?

பட மூலாதாரம், Getty Images
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தினத்தந்தி: 'ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ உண்மையானது தான்'
சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு கால்கள் அகற்றப்படவில்லை என்றும், ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று வெளியான வீடியோ உண்மையானது தான் என்றும் அப்பல்லோ மருத்துவர், ஆணையத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு பெரும்பாலான நாட்கள் சிகிச்சை அளித்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் பாபு ஆபிரகாம் மற்றும் மருத்துவர் பாலபிரகாஷ் ஆகியோர் நேற்று விசாரணைக்காக ஆஜராகினர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விசாரணையின் போது, ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ மருத்துவர் பாபு ஆபிரகாமிற்கு போட்டு காண்பிக்கப்பட்டது. முடிவில் அவர், 'இந்த வீடியோ உண்மையானது. அப்பல்லோ மருத்துவமனையில் எடுக்கப்பட்டது தான்' என்று தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.
மேலும் அவர் தனது வாக்குமூலத்தில், 'சிகிச்சையின் போது ஜெயலலிதாவுக்கு 2 கால்களும் நன்றாகவே இருந்தது. அவரது கால்கள் அகற்றப்படவில்லை. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது தொடர்பான விவகாரத்தில் சசிகலாவால் எந்த தடையும் ஏற்படவில்லை. சிகிச்சையின் போது ஒரு நாள் சுமார் 1 மணி நேரம் ஜெயலலிதா என்னிடம் பேசினார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மீண்டும் கூவத்தூர் அரசியல் ?'

பட மூலாதாரம், Getty Images
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருப்பதால், தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றலாத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் முகாமிட்டுள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். சென்னையில் உள்ள தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் , "அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒரே இடத்தில் தங்க சொல்லி எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை, சில சட்டமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். நான் சென்னையிலேயெ இருக்க முடிவு செய்துவிட்டேன்" என்று தெரிவித்தார் என விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.



பட மூலாதாரம், இந்து தமிழ்

இந்து தமிழ்: "டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 13 பேர் மரணம்"
"தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு வேக மாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 7 வயது இரட்டை குழந்தைகள் நேற்று உயிரிழந்தன. தாம்பரத்தைச் சேர்ந்த ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை பருவமழைக் காலங்களில் அதிகளவில் இருக்கும். குறிப்பாக கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு பன்மடங்கு குறைவாக இருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் சென்னை மாதவரம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூரில் எல்லை பகுதிகளில் டெங்கு தாக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இதுமட்டுமின்றி மாநிலத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில், டெங்கு கொசு ஒழிப்பில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்தப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'நிர்வாகிகளுடன் ரஜினி திடீர் ஆலோசனை'
அரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பரில் ரஜினிகாந்த் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் திங்கள்கிழமை திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத் தலைமை அலுவலகத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் திங்கள்கிழமை திடீர் ஆலோசனை மேற்கொண்டார். நீண்ட நாள்களுக்குப் பிறகு மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டிருப்பது, அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதும், மன்ற செயல்பாடுகள் குறித்த பொதுவான விஷயங்களே இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












