இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியவர் பாகிஸ்தானியர் என சந்தேகம்

பட மூலாதாரம், Getty Images
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - உளவு பார்த்த சிப்பாய்
இந்திய ராணுவத்தின் முக்கியத் தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உண்டு என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராணுவத்தில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் அவரது பெயரை ராணுவம் வெளியிடவில்லை. அவர் அடிக்கடி பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசியதால் ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவு அவர் மீது சந்தேகம் கொண்டு கண்காணிக்கத் தொடங்கியது.

தினத்தந்தி - கூரியரில் வந்த வெடிகுண்டு

பட மூலாதாரம், Reuters
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் ஸ்விட்சை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை, கூரியர் மூலம் தனியார் பள்ளி உரிமையாளருக்கு அனுப்பிய முன்னாள் மாணவரை நான்கு தனிப்படைகள் தேடி வருகின்றன.
அந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளதாக தினத்தந்தி செய்தி கூறுகிறது.

தினமணி - குறைந்த விபத்து மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 25% குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
நாடு முழுவதும் நாளொன்றுக்கு சாராசரியாக 400 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர்.

தி இந்து - மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வல்லுறவு

பட மூலாதாரம், Getty Images
பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு ராணுவத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் ஒரு ராணுவ சிப்பாய் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதை, மருத்துவமனையில் பணியாற்றும் ராணுவ மருத்துவ ஊழியரிடம் குறுஞ்செய்தி மூலம் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் வேறு இருவருடன் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டி தொடர்ந்து வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளார் என்று காவல் துறை உதவி ஆணையர் கல்யாண்ராவ் விதாதே கூறியுள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












