தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். இளங்கோவன் விடுவிப்பு ஏன்?

பட மூலாதாரம், Twitter
தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்த டி.கே.எஸ். இளங்கோவன் அதிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டிருக்கிறார்.
தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராக நீண்ட காலமாக செயல்பட்டுவரும் அவர், திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டில் வட சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இளங்கோவன், 2014ல் தென் சென்னைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
தி.மு.க. சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிப்பது என செயல்பட்டுவந்தார் இளங்கோவன். தி.மு.க. சார்பில் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளிப்பதற்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 7 பேரைக் கொண்ட அந்தப் பட்டியலில் டி.கே.எஸ். இளங்கோவன் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில்தான் செய்தித் தொடர்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த இளங்கோவன், வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அதில், கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டதோடு அந்த விழாவிற்கு ஆளும் அ.தி.மு.கவினர் அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். அவரது அந்தப் பேட்டியே தற்போதைய நடவடிக்கைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு செப்டம்பரில் ஊடகங்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 170 இடங்களில் போட்டியிடும் என அறிவித்தார். இது குறித்து கருணாநிதி கண்டித்த பிறகு, அவரிடம் மன்னிப்புக் கோரினார் டி.கே.எஸ்.
மேலும், உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்துக்களை வைத்து, தி.மு.கவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சாடியபோது, கருணாநிதி வெளிப்படையாகவே டி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்தார். டி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.கழகத்தின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியா என்றும் கேள்வியெழுப்பினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












