‘கொள்ளைக்கு உதவிய லுங்கி’ - ரயில் கொள்ளை நடந்தது எப்படி?: சுவாரஸ்ய தகவல்கள்

ரயில் கொள்ளை

சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்டு , 9 ஆம் தேதி அதிகாலை 03.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றடைந்தது. 9ஆம் தேதி அன்று காலை 10.55 மணியளவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியை திறந்து பார்த்த போது ரூ.5.78 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

'கொள்ளைக்கு உதவிய லுங்கி' - ரயில் கொள்ளை நடந்தது எப்படி?

அந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டதன் மூலமாக மேற்படி கொள்ளை சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசாரால் 09.08.2016-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, அடுத்த இரு தினங்களில் வழக்கின் புலன்விசாரணை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பான மத்திய பிரதேசம் ரட்லத்தை சேர்ந்த தினேஷ் , ரோகன் பார்தி ஆகியோரை சென்னையில் சிபிசியிடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

லுங்கியில் வைத்து கொள்ளை

விசாரணையின் போது குற்றவாளிகள் தினேஷ் மற்றும் ரோஹன் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் தாங்கள் ஈடுபட்டதை ஒப்பு கொண்டதாக கூறுகிறது காவல்துறை.

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடந்திய தொடர் விசாரணையில் 2016-ம் வருடம் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு நேரத்தில் இக்குற்றத்தில் ஈடுப்பட்ட குழுவினை சேர்ந்த ஐந்து நபர்கள் ஓடும் ரயிலின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு ரயிலானது சின்னசேலத்திலிருந்து விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்த சமயம் பணம் வைக்கப்பட்டிருந்த இரயில் பெட்டியின் மேற்கூரையின் மீது துளையிட்டதாகவும், அவர்களுள் இருவர் அந்த துளையின் வழியே இறங்கி மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்து அவற்றை லுங்கியில் சுற்றி வைத்து கொண்டதாகவும், ரயிலானது விருதாச்சலம் ரயில் நிலையத்தை வந்தடையும் போது அங்கே தண்டவாளம் அருகே காத்துக் கொண்டிருந்த இக்கொள்ளையர்கள் ஐவரின் மற்ற கூட்டாளிகளிடம் லுங்கியால் சுற்றப்பட்டிருந்த பணக்கட்டுகளை கொடுத்துவிட்டு அங்கிருந்து அனைவரும் தப்பித்துவிட்டதாகவும் தங்களிடம் தெரிவித்ததாக விவரிக்கிறது காவல்துறை.

'கொள்ளைக்கு உதவிய லுங்கி' - ரயில் கொள்ளை நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Express Photo

 இது தொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் இக்கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவர் மோஹர்சிங் மற்றும் மற்ற கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை வழக்கோடு தொடர்புடைய அக்குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பல்வேறு குற்றசம்பவங்கள்

'கொள்ளைக்கு உதவிய லுங்கி' - ரயில் கொள்ளை நடந்தது எப்படி?

ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங் தலைமையிலான குழு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் என்று புலன்விசாரணையில் தெரியவருவதாகவும் , இக்கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது இரயில் நிலையம் , தண்டவாளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வார்கள் என்றும் இவர்கள் கட்டிட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும், வேலை செய்வது போல் அப்பகுதியில் சுற்றித்திரிந்து குற்ற செயலுக்கு ஏதுவான இலக்கினை தேர்ந்தெடுப்பர்கள் என்றும் தமிழகத்தில் இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மற்ற குற்றங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: