ஆதார் தீர்ப்பு : 'ஆதாரின் அபாயங்கள் இன்னும் குறையவில்லை என்பதே உண்மை'

பட மூலாதாரம், AFP
உலகில் மிக சர்ச்சைக்குரிய அடையாள அட்டை திட்டத்திற்கு வழிவகுத்த ஆதார் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் அமர்வு அளித்த இத்தீர்ப்பில் ஒரே ஒரு நீதிபதியின் கருத்து வேறுபாட்டையும் நாம் கவனிக்க வேண்டும் என்று விவாதிக்கின்றனர் ஆதார் அறிக்கை 2017-18 சஞ்சிகையின் இணை ஆசிரியர்கள்ரொனால்ட் அப்ரஹாம் மற்றும் எலிசபெத் எஸ் பென்னட்.
1.2 பில்லியனுக்கும் மேலான இந்தியர்களிடம் ஆதார் எண் உள்ளது. இங்குள்ள பல சேவைகளுக்கு ஆதார் அவசியம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
சட்டப்பூர்வ, தனிமனித உரிமை, தரவு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகிய முக்கிய காரணங்களுக்காக இந்திய சிவில் சமூகம் ஆதார் திட்டத்தை எதிர்த்து வந்தது.
ஆதார் சட்டப்பூர்வமானதா?
ஆதார் திட்டம் கொண்டுவரப்பட்டு கோடிக்கணக்கான மக்களிடம் கை ரேகை மற்றும் கண் ரேகைகள் பெறப்பட்டு ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2016ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ஆதார் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பட மூலாதாரம், AFP
ஆதார் தொடர்புடைய இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒரு குறிப்பிட்ட பிரிவு சட்டப்பூர்வமாக்கியது.
முக்கிய நிதி விஷயங்களுடன் இந்த சிறப்பு பிரிவு இணைக்கப்பட்டு இச்சட்டம் இயற்றப்பட்டது. தற்போது இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமல், இது கொண்டுவரப்பட்டது.
இந்த காரணங்களால், இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், ஆதார் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியுரிமை பாதுகாக்கப்படுகிறதா?
ஆதார் திட்டத்தை எதிர்க்க முக்கியமான ஒரு காரணம் தனியுரிமை பாதுகாப்பு.
பயோ மெட்ரிக் மூலம் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதால், ஒருவரின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. தனிப்பட்ட ஆதார் எண்ணால், ஒருவரை அரசு கண்காணிப்பில் வைத்திருக்க முடியும் என்ற கவலையும் எழுந்தது.

பட மூலாதாரம், MANSI THAPLIYAL
ஆனால், பெரும்பான்மையான நீதிபதிகள் இதனை புறந்தள்ளி, தற்போதுள்ள பாதுகாப்பு முறைகளில் நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால், நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில், ஆதார் திட்டத்தால் வரும் அபாயங்களை கவனமாக சுட்டிக்காட்டுகிறார்.
தரவுகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளன?
ஆதார் தரவுத்தளத்தில் இருந்து தரவுகள் கசிவதாகவும், சரியாக பாதுகாக்கப்படவில்லை என்றும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. பயோ மெட்ரிக் தரவுகள் இதுவரை திருடப்படவில்லை என்றாலும், அது சம்மந்தமான தரவுகளும், மென்பொருள்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முறையும் தகவல் திருடப்படுவதாக செய்திகள் வெளியாகும் போதும் அரசு அதனை மறுத்து வருகிறது.
ஆதாரின் நலன்கள் அதிகமா?

பட மூலாதாரம், RONNY SEN
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில், பெரும்பான்மையான நீதிபதிகளின் தீர்ப்பின்படி, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு அபாயங்கள் கேள்விக்கு உள்ளானது அல்ல என்று கூறுகிறது.
பொதுவெளியில் கிடைக்கப்பெறும் தரவுகள் மற்றும் இந்திய கிராமப்புறங்களில் நடத்திய கணக்கெடுப்புகளை வைத்து ஆதாரின் பலன்கள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த கணக்கெடுப்பு மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது.
ஆதார் பெரும்பாலான மக்களை சென்றடைந்தாலும், மக்கள் தொகை தரவுகளின் தரத்தை மேலும் உயர்திருக்கலாம்.
ஆதார் அட்டையில் உள்ள அடிப்படை தகவல்களில் 8.8 சதவீத பிழை விகிதம் இருப்பது இந்த ஆய்வில் தெரிய வருகிறது. இது பயனாளர்களை விலக்குவதற்கான அபாயத்தில் வைப்பதோடு, தரவுத்தளத்தின் பயன்பாட்டை குறைமதிப்பிடும் வகையில் உள்ளது.


சமீபத்தில் வங்கி கணக்குகள் திறக்க, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் ஆதார் அட்டையின் நகலை வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டிஜிட்டல் அடையாளத்தின் பங்கு இதில் மிகவும் குறைவானதே. 2014ஆம் ஆண்டிற்கு பிறகு, வங்கி கணக்கு திறந்தவர்களில் ஐந்தில் ஒருவரே ஆதாரின் மின் அடையாளத்தை பயன்படுத்தியுள்ளனர்.
இறுதியாக, உணவு பொருட்களுக்கான மானியத்திற்கு ஆதார் அட்டையிலிருந்து விலக்கு அளிப்பது முக்கியமானது என்றும் கண்டுபிடித்தோம்.
நாங்கள் கணக்கெடுப்பு எடுத்த 3 மாநிலங்களிலும், ஒவ்வொரு மாதமும் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்கு ஆதார் சர்ச்சையால் மானியத்தில் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக பெரும்பான்மை தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.கே. சிக்ரி கூறுகையில், இந்த ஒரு காரணத்திற்காக ஆதார் திட்டத்தை கைவிட முடியாது என்று கூறியுள்ளார். மிக குறைந்த சதவீத மக்களே இதில் விலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறுபட்ட தீர்ப்பின் கருத்து ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், MANSI THAPLIYAL
நீதிபதி சந்திரசூட்டின் மாறுபட்ட தீர்ப்பு பல அபாயங்களை சுட்டிகாட்டுகிறது. எதிர்காலத்தில் இத்திட்டம் சரியாகவும் வெளிப்படையாகவும் செயல்பட, இந்த அபாயங்களை சுட்டுக்காட்டுவது அவசியமாகிறது.
ஒவ்வொரு முறை தரவு கசிவு ஏற்படும்போதும், அரசு அதனை மறுத்து வருவதை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை விட்டு, இது மாதிரி நேரங்களில் ஆய்வாளர்களை ஈடுபடுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும்.
மேலும், தரவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை அரசு வெளியிட வேண்டும். ஆதார் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து, வெளிப்படையாக இருப்பதே உதவிகரமானதாக அமையும்.
இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களுக்கு இதனை பயன்படுத்தலாம். இல்லையென்றால், ஆதாரை அடையாளத்துக்காக மட்டுமே வைத்து, இதனை சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் ஆக்குவதில் கவனம் செலுத்தலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












