'ஆதார் கட்டாயமில்லாமல் இருந்திருந்தால்... என் மகள் இறந்திருக்க மாட்டாள்'

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC
- எழுதியவர், ரவி பிரகாஷ்
- பதவி, பிபிசி, ஜார்க்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகா மாவட்டத்தில் கரிமடி பகுதியில் உள்ள கொயலி தேவியின் இல்லத்திற்கு நான் சென்றபோது, தன் 3 வயது மகனுக்கு கீரை சாதத்தை ஊட்டி முடித்திருந்தார்.
செப்டம்பர் 28, 2017, அவரது 11 வயது மகளான சந்தோஷி குமாரி பட்டினியால் இறந்து போனார். இன்று அவர் உயிரிழந்து ஒரு வருடம் ஆகிறது. பட்டினியால் அழுது தன் மகள் இறந்ததை கொயலியால் மறக்க முடியவில்லை.
வீட்டில் போதிய ரேஷன் பொருட்கள் இல்லாததால் சந்தோஷிக்கு உணவு அளிக்க இயலவில்லை. தனது ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைக்கப்படாததால் எட்டு மாதங்களுக்கு அவர்களால் ரேஷன் பொருட்கள் பெற முடியவில்லை. அப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளை ஜார்கண்ட் அரசாங்கம் ரத்து செய்திருந்தது.

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC
25 மரணங்களுக்கு பொறுப்பாகும் ஆதார் திட்டம்
ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பட்டினியால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த விவாதம் சூடுபிடித்திருந்தது. சமூக செயற்பாட்டாளர்கள் தயாரித்த புள்ளி விவரங்களின்படி, கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் 56 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
2017 - 2018ல் மட்டும் 42 மரணங்கள். இதில் குறைந்தது 25 மரணங்களுக்கு நேரடியாகவோ, இல்லாமலோ ஆதார் அட்டை காரணமாகியது. நேரடியாக ஆதார் திட்டத்தால் 18 மரணங்கள் நேர்ந்துள்ளன. இந்த விவரங்கள், புகழ்பெற்ற சமூக செயற்பாட்டாளர்கள் ரிதிகா கீடா மற்றும் சிராஜ் தட்டா ஆகியோரால் ஸ்வாதி நாராயணின் உதவியோடு தயாரிக்கப்பட்டது.
புள்ளி விவரங்களின்படி, ஜார்கண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பட்டினியால் அதிகளவிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த அறிக்கையின் முழு பட்டியல் பிபிசியிடம் உள்ளது.

பட மூலாதாரம், RAVI PRAKASH/BBC
இந்த தரவுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன?
தரவுகளை தயாரித்த குழுவின் உறுப்பினரான சிராஜ் தட்டா பிபிசியிடம் கூறுகையில், "இந்தியாவில் பட்டினியால் ஏற்படும் மரணங்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக வந்துவிடக்கூடாது என்ற கவலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 26 பேர் பட்டினியால் இறந்துள்ளதை அரசாங்கங்கள் அலட்சியப்படுத்துகின்றன. இந்த தரவுகளை, ஊடக செய்திகளோடு நாங்கள் சேகரித்த உண்மைகளையும் வைத்து தயாரித்துள்ளோம். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பின்தங்கிய சமூகங்களை (பழங்குடியினர்கள், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள்) சேர்ந்தவர்கள் ஆவர். இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த மரணங்களை அரசாங்கங்கள் ஒப்புக் கொள்வதில்லை. சந்தோஷியின் மரணம் உள்ளிட்ட பல வழக்குகளில் அரசாங்கம் இதனை திசை திருப்பவே முயற்சித்துள்ளது. பட்டினிச்சாவை ஒப்புக்கொண்டு அதனை ஒழிக்க அரசு முன்வர வேண்டும். ஆதார் கார்டு கட்டாயம் என்று கூறியதால் ஏற்பட்ட மரணங்களுக்கு யார் பொறுப்பு?" என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
தன் மகள் பட்டினியால் இறந்ததற்கு கொயலி தேவிக்கு அரசாங்கம் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கியுள்ளது. இது கொயலியின் வலியை மேலும் அதிகரிக்கிறது.
இப்போதும் கூட 3 வாரங்களுக்கு மட்டுமே அவரது வீட்டில் அரிசி இருக்கும். காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் பால் எல்லாம் ஏதோ 'சிறப்பு விருந்தினர்' போல எப்போதாவது இருக்கும். கோழி இறைச்சி போன்ற இறைச்சிகளுக்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே.
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய கொயலி தேவி, "ஆதார் அட்டை கட்டாயமில்லாமல் இருந்திருந்தால் என் மகள் இன்று உயிரோடு இருந்திருப்பார். சந்தோஷி இறந்தது ஆதார் அட்டையால்தான். அரசாங்கம் கொடுத்த 50,000 ரூபாயில், 500 ரூபாய் மட்டுமே மிச்சம் இருக்கிறது. எனது சிகிச்சைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவானது. ரேஷன் பொருட்களை நிறுத்திவிட்டால், நாங்கள் பட்டினியால் இறந்து விடுவோம்" என்றார்.

பட மூலாதாரம், DHIRAJ
மேலும் அவர் கூறுகையில், "என் கணவர் தடயா நாயக் நலமுடன் இல்லை. என் மாமியார் தேவகிக்கு 80 வயது ஆகிறது. காதல் திருமணம் செய்து கொண்டு என் மூத்த மகள் போய்விட்டார். நான் இப்போது என் 9 வயது மகளான சந்தோ மற்றும் 3 வயது மகனான பிரகாஷ் ஆகியோரை பார்த்துக் கொள்கிறேன். ஒரு கட்டு குச்சிகளை விற்றால் ஐந்து ரூபாய் கிடைக்கும். பால், பருப்பு எல்லாம் எப்படி வாங்குவது? அதெல்லாம் இல்லாமல்தான் என் பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்கள். ஆதார் அட்டை பற்றி எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. அது எப்படி பயன்தரும் என்பதும் தெரியாது. ஆனால், நான் என் மகளை இழந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.
சந்தோஷி மரணத்துக்குப் பிறகு என்ன ஆனது?
கொயலி தேவி ஒரு குடிசையில் வாழ்ந்து வருகிறார். அதன் அருகில் ஒரு புளிய மரம் உள்ளது. அதற்கு அடியில் ஒரு பாயை விரித்து அமர்ந்து எங்களிடம் பேசினார் கொயலி. ஆனால், அந்த புளியமரம் அவருடையது அல்ல. அவரது கணவர் பாஜா இசைத்து கொண்டிருந்தபோது மஹாஜன் அவருக்கு இந்த மரத்தை பரிசாக அளித்தார். தற்போது அவர் பாஜா இசைப்பதை நிறுத்திவிட்டதால், புளியமரத்தில் இருக்கும் பழங்கள் அதன் உரிமையாளருக்கு செல்கிறது.
கொயலியின் குடிசைக்கு அடுத்து அவரது மைத்துனரின் குடிசை உள்ளது. மிகவும் மோசமான நிலையில் அந்த குடிசை இருக்கிறது. அவருக்கு 6 குழந்தைகள். அதில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
ஆதார் அட்டையினால் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பிறகு, இந்த குடும்பத்திற்கு ஒரு சிறிய கழிப்பறையை அரசாங்கம் கட்டித்தந்தது. சுகாதார பிரசாரத்தின் சின்னமாக அது அங்கு நிற்கிறது.
சந்தோஷியின் மரணத்திற்கு பிறகு, இங்குள்ள மக்களை ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் ரகுவர் தாசை சந்திக்க நிர்வாகத்தினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது கிராம மக்களிடம், அவர்களுக்கு ஊதுபத்திகள் மற்றும் மெழுகுவர்த்திகள் தயாரிக்க கற்றுத்தரப்படும் என்றும் அது விற்பனை செய்யப்படும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். ஆடு மற்றும் பன்றி பண்ணைகள் அமைக்க திட்டம் வகுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஒரு வருடம் ஆகியும், அக்கிராம மக்களுக்கு சொன்னது எதுவுமே செய்துத்தரப்படவில்லை. ஊதுபத்தி மெழுகுவர்த்தி ஒப்பந்ததாரர் ஓடிவிட்டதாக பெயர் குறிப்பிடாத பெண் ஒருவர் தெரிவித்தார். அதற்காக ஒதுக்கப்பட்ட இடம் பூட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் தங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
கிராம மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒரு டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சந்தோஷி மரணத்திற்கு பிறகு இங்கு ஏற்பட்ட மாற்றங்கள் இவை மட்டும்தான்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












