ஜிம்பாப்வே: பெற்றோர்கள் மிரட்டலால் பதவி விலகிய ஒருபாலுறவு ஆசிரியர்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
பதவி விலகிய ஆண் ஒருபாலுறவு ஆசிரியர்

பட மூலாதாரம், NEAL HOVELMEIER
தான் ஆசிரியராக பணிபுரியும் ஆண்கள் பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து வந்த தொடர் மிரட்டல்கள் மற்றும் அழுத்தத்தை அடுத்து ஜிம்பாப்வேயில் ஆண் ஒருபாலுறவினர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.
ஜிம்பாப்வேயிலுள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் துணை தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த நீல் ஹோவெல்மியர், கடந்த வாரம் மாணவர்களிடம் தான் ஓர் ஒருபாலுறவினர் என்பதை வெளிப்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து, சில மாணவர்களின் பெற்றோர்கள் இவருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மிரட்டல் விடுத்திருந்ததை அவர் தற்போது பதவி விலகியுள்ளார். ஜிம்பாப்வேயில் ஒருபாலுறவு குற்றமாக கருதப்படுகிறது.

டெஸ்லா விவகாரம்: எலான் மஸ்க் மீது மோசடி வழக்கு பதிவு

பட மூலாதாரம், SCOTT OLSON/GETTY IMAGES
டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பங்குச் சந்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு அவர் மீது வழக்கு தொடுத்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை திரும்பப்பெற்று, அந்நிறுவனத்தை முழுதும் தனியார் நிறுவனமாக மாற்றும் அளவுக்கு தன்னிடம் போதுமான நிதி உள்ளதாக எலான் மஸ்க் கூறியது "பொய்யானது மற்றும் தவறாக வழிநடத்திய செயல்" என்று அமெரிக்க நிதி கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பங்குகளை வாங்க தம்மிடம் உள்ள நிதி ஆதாரம் உள்ளிட்டவற்றை அவர் தெரிவிக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்

நெதர்லாந்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு பெரியளவிலான தீவிரவாத தாக்குதலை நடந்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ஏழு ஆண்களை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏகே47 ரக துப்பாக்கிகள், எறிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை வாங்குவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 21 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூச்சியின் கௌரவ குடியுரிமையை திரும்ப பெறுகிறது கனடா

பட மூலாதாரம், Reuters
மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையை திரும்பப்பெற கனட நாடாளுமன்றம் ஒருமனதாக வாக்களித்துள்ளது.
மியான்மரில் ரோஹிஞ்சா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த தவறியதால் அவருக்கு எதிராக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












