"வீட்டில் கழிவறை இல்லை" - தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; கணவர் தற்கொலை

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

"வீட்டில் கழிவறை இல்லை" - தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; கணவர் தற்கொலை

பட மூலாதாரம், dennisjim

தினமணி - "வீட்டில் கழிவறை இல்லை" - தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; கணவர் தற்கொலை

சேலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மனைவி தனது வீட்டில் கழிவறை இல்லாததால் அவரது தாய் வீட்டிற்கு திரும்பியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சேலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செல்லத்துரை என்பவரும், தீபா என்பவரும் சென்ற திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தனது வீட்டுக்கு தீபாவை செல்லத்துரை அழைத்து சென்றுள்ளார். அப்போது, கணவரின் வீட்டில் கழிவறை இல்லை என்பதை அறிந்த தீபா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதையடுத்து, 'கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது' என்று கூறிவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தீபாவை சமாதானம் செய்து திரும்ப அழைத்து வரும் தனது முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் கடந்த மூன்று நாட்களாக சோகமான இருந்த செல்லத்துரை புதன்கிழமை நள்ளிரவு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் - "சென்னை: தொழிலதிபரின் வீட்டிலிருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 89 புராதன சிலைகள் பறிமுதல்"

சென்னையிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான 89 புராதன சிலைகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளதாக இந்து தமிழ் செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடப்பட்ட இந்த சிலைகள் 100 ஆண்டுக்கு மேல் பழமையானவை என்று தெரியவந்துள்ளது.

(கோப்புப்படம்)
படக்குறிப்பு, (கோப்புப்படம்)

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தொழிலதிபர் தீனதயாளனின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிரு 49 ஐம்பொன் சிலைகள், 236 கற்சிலைகள், 96 ஓவியங்களை கைப்பற்றினர். இவை அனைத்தும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானவை. வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக இந்த சிலைகளை பதுக்கி வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நகர் காலனியில் உள்ள ரன்வீர்ஷாவின் பங்களா வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான 15 போலீஸார் நேற்று காலை திடீர் சோதனை நடத்தினர். இதில், 56 கற்சிலைகள், ஒரு பார்வதி மற்றும் ஒரு விநாயகர் என 2 உலோக சிலைகள், 10 உலோக கவசங்கள், சிற்பங்களுடன் கூடிய கற்தூண்கள் உட்பட மொத்தம் 89 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி - "ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராட்டம்"

ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மீண்டும் போராடுவோம் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Getty Images

"எங்கள் பகுதியில் 35 பெண்களுக்கு கர்ப்ப பை இல்லை. இதுபோல் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம். இந்நிலையில், சென்னையில் பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி ஒரே நேரத்தில் 45 ஆயிரம் பேர் மனு அளித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அதை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்? ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால், நாங்கள் மீண்டும் போராடுவோம். இனி அரசிடம் கோரிக்கை வைக்கமாட்டோம். கேள்வி தான் கேட்போம்" என்று சுரலி என்பவர் சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார்.

மேலும், விஜயபாஸ்கர் என்ற மற்றொருவர் பேசும்போது, "என்னுடைய வீட்டில் 2 பேருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று பொய் சொல்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பணம், வேலை கொடுத்து சரிகட்டிவிடுகிறார்கள். என்னையும் அப்படி அழைத்தார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டமுறைப்படி எதையும் செய்ய முடியவில்லை. மீண்டும் ஸ்டெர்லைட் வரக்கூடாது. அப்படி வந்தால் தற்கொலைக்குதான் போவோம்," என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்"

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த ஐந்து மீனவர்களை இலங்கையை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடியக்கரையிலிருந்து 19 நாட்டிகல் மைல் தொலைவில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சாதாரண உடையணிந்த இலங்கையை சேர்ந்த மூன்று பேர் தங்களது படகிற்கு அருகே வந்ததாகவும், மேலும் அவர்கள் தங்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை மிரட்டி தாக்குதல் நடத்தியதுடன், தங்களிடமிருந்த வலைகள், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, டார்ச் மற்றும் கைப்பேசிகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :