கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிக்க முடியாது - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு தற்போது வீட்டுக்காவலில் உள்ள ஐந்து செயற்பாட்டாளர்களை விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஐந்து செயற்பாட்டாளர்களின் வீட்டுக்காவல் மேலும் நான்கு வாரங்களுக்கு தொடரும் என்றும், அவர்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறப்பு விசாரணை மற்றும் பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கையும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை தொடர்புடையதாக கூறப்படும் கடிதங்களை புனே காவல்துறையினர் வழக்கு விசாரணைக்கு முன்னரே செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டது தேவையில்லாத செயல் என்று தங்களது தீர்ப்பின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு வேறு புதிய நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமென்றும், அங்கு மனுதாரர்கள் தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்து தீர்வு பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர காவல்துறையினரின் பொதுப்படையான குற்றச்சாட்டுகளை நம்ப முடியாது என்றும், மேலும் செயற்பாட்டாளர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்புடையதாக கூறும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டுமென்ற மனுதாரர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும், கன்வில்கரும் நிராகரித்திருந்த நிலையில், இந்த அமர்வின் மற்றொரு நீதிபதியான சந்திரசூட் அதற்கு அனுமதி அளித்துள்ளார்.

பிரதமரை கொலைசெய்வதற்கு ஒருவர் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்தால் தெளிவற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து அதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடும் பின்னடைவை அளித்துள்ளதாக இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சுதா பரத்வாஜ்

பட மூலாதாரம், BBC / ALOK PUTUL

படக்குறிப்பு, சுதா பரத்வாஜ்

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான சுதா பரத்வாஜின் மகள் மாயஷா, "எனது தாயார் மற்றும் கைதுசெய்யப்பட்ட மற்றனைவர் மீதும் குற்றச்சாட்டப்படுவதற்கான எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் அவர்களது வீட்டுக்காவலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்தது மிகவும் எரிச்சல் அளிக்கிறது. எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, அடுத்த கட்டமாக தகுந்த நீதிமன்றத்தை அணுகுவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

இந்த தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய வரவர ராவின் மனைவி ஹேமலதா, "இதுபோன்ற தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக முடித்து வைக்கும் என்று நினைத்தோம். இருந்தபோதிலும், எங்களது கோரிக்கைகள் தொடர்பாக தகுந்த நீதிமன்றத்தை நாடுங்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எங்களுக்கு எதிராக நிரூபிப்பதற்கென்று இந்த வழக்கில் எதுவுமில்லை. கடந்த நாற்பதாண்டுகளில் என் கணவர் மீது 20-30 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், அதில் ஒன்றுக்கூட சட்டத்தின் முன் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று இந்த வழக்கிலிருந்தும் எனது கணவர் விடுவிக்கப்படுவார் என்று நம்புகிறேன்"

வரவர ராவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரவர ராவ்

கைதுசெய்யப்பட்ட செயற்பாட்டாளர்களான வரவர ராவ், அருண் ஃபெரேரா, வெர்னன் கொன்சால்வஸ், சுதா பரத்வாஜ், கெளதம் நவ்லாகா ஆகிய ஐந்து பேரும் கடந்த ஆகஸ்டு 29ஆம் தேதியிலிருந்து அவர்களது வீடுகளில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதுதொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடந்த விசாரணையில் புனே காவல்துறையினர், மத்திய அரசு, மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.

செயற்பாட்டாளர்

பட மூலாதாரம், Getty Images

எப்போது கைது செய்யப்பட்டனர்?

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி பல சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனைகள் நடத்தினர்.

குறிப்பாக ஹைதராபாத்தில் வரவர ராவையும், அருண் ஃபெரேரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோரை மும்பையிலும், சிவில் உரிமைகளுக்கான மக்கள் யூனியனை (பியூடிஆர்) சேர்ந்த சுதா பரத்வாஜை ஹரியானாவிலும், டெல்லியில் பியூடிஆரை சேர்ந்த கெளதம் நவ்லாகாவையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

ஹைதராபாத், மும்பை, டெல்லி, ராஞ்சி ஆகிய பல இடங்களில் இந்த சோதனைகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

இந்த கைது நடவடிக்கைகளுக்கு பிறகு அப்போது பேசிய புனே காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவின் இணை ஆணையரான சிவாஜி போடாக்கே, ''இவர்கள் மாவோயிஸ்ட் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு முக்கிய பின்புலம் இவர்கள்தான்" என்று பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

ஏன் இந்த கைது?

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் நடந்த கலவரம் தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வரவர ராவைப் பொருத்தவரை, பிரதமர் நரேந்திர மோதியை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

பீமா கோரேகான்

பட மூலாதாரம், MAYURESH

எல்கார் பரிஷத் அமைப்பின் பெயரில் தலித் அறிவுஜீவிகள் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் நடத்திய ஒரு கூட்டத்தில் ஆத்திரமூட்டும் உரைகளை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டி போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

பீமா கோரேகான் சண்டையின் 200வது ஆண்டை நினைவுகூர்வதற்கு புனே நகரில் தலித் குழுக்கள் கூடியிருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் சண்டையாக பிரிட்டிஷ் காலனியாதிக்க படைப்பிரிவுகேளோடு சேர்ந்து உயர் சாதி ஆட்சியாளருக்கு எதிராக தலித்துக்கள் சண்டையிட்டதுதான் கோரேகான் மோதல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :