ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22-ந்தேதி நடந்தது என்ன?
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: 'ஜெயலலிதா வீட்டில் 2016 செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன?'

பட மூலாதாரம், Getty Images
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நடந்தது என்ன? என்ற மர்மங்களை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"ஆணையத்தில் நான் ஏற்கனவே அளித்த சாட்சியத்தின் தொடர்ச்சியாக சில சந்தேகங்களை எழுப்பினேன். போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்தார் என்பது சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது யார்? ஆம்புலன்சுக்கு போன் செய்தது யார்? என்ற மர்மம் நீங்கவில்லை.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா கீழே விழுந்த போது, வீட்டின் உள்ளே சசிகலாவுடன் 2 பணிப்பெண்கள் இருந்துள்ளனர். அந்த பணிப்பெண்கள் எங்கே? அவர்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் யாரையும் அனுமதிக்கவில்லை என்பதை எடுத்துரைத்துள்ளேன்.

பட மூலாதாரம், Getty Images
ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா மயங்கிய நிலையில் எடுத்து சென்றதாக சாட்சியங்கள் கூறி உள்ளனர். இது சசிகலா சொன்ன வாக்குமூலத்துக்கு எதிராக உள்ளது. சசிகலாவின் பிரமாண பத்திரத்தில், ஆம்புலன்சில் சென்றபோது, ஜெயலலிதா "நான் எங்கே போகிறேன்" என்று கேட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மயக்க நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி வரை கொண்டு செல்லப்பட்டதாக மற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்." என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகிய பின் செய்தியாளர்களிடம் மனோஜ் பாண்டியன் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

'பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை'
பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்கிறது மற்றொரு செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"சத்தியமங்கலம் கோர்ட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கு மாஜிஸ்திரேட்டு ராஜவேலு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் ஒருநாள் ராஜவேலு செல்போனில் பாலியல் ரீதியாக பேசியதை பெண் வக்கீல் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர் அந்த பேச்சு பதிவையும், நடந்தவைகளையும் மனுவாக எழுதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் அளித்தார். இதுபற்றி ராஜவேலுவிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ் - 'கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து'
கருணாஸின் எம்எல்ஏ பதவிக்கு ஆபத்து இருப்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Youtube
"சட்டத்தின் முன் அனைவரும் சமம். கருணாஸைப் பொறுத்தவரை ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருந் தது. இதை ஆரம்ப நிலையிலேயே களையெடுக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மொழி, ஜாதி, மதப் பிரச்சினை இல்லை. சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பு மிகப்பெரியது. அரசியலமைப்பு சட்டப்படி பதவி யேற்றவர்கள் அதை மதிக்க வேண் டும். பதவியேற்கும்போது ஜாதி மதத் துக்கு அப்பாற்பட்டவனாக இருப்பேன் என்றுதான் பதவி ஏற்கின்றனர். அதை அவர் கடைபிடிக்கவில்லை.
இந்த போக்கால் அவரது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியே கேள்விக்குறியாகி உள்ளது. அவர் ஏன் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க வேண்டும் என்று மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பால்தாக்கரே ஒருமுறை இதுபோன்ற கருத்தை கூறியபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பால்தாக்கரேவின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டது." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'குட்கா ஊழல்: தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைது'
குட்கா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் திங்கட்கிழமை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி இ சிவக்குமாரை கைது செய்துள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. இந்த வழக்கில் இது ஆறாவது கைதாகும். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவகுமாருக்கு அக்டோபர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'மூச்சுத் திணறுகிறது!'
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு பெண் உட்பட 10 துப்புரவுத் தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டிகளையும், கழிவுநீர் வடிகால்களையும் துப்புரவு செய்யும்போது விஷவாயு தாக்கி இறந்திருக்கிறார்கள். எந்தவிதப் பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியதால்தான் அவர்கள் மரணமடைய நேரிட்டது என்கிறது தினமணி நாளிதழ் தலையங்கம்.
"நம்மால் செவ்வாய் கிரகத்துக்கும் சந்திரனுக்கும் விண்வெளிக்கலங்களை செலுத்தும் அளவுக்குத் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைய முடிந்திருக்கிறது என்பது பெருமைக்குரிய சாதனைதான். ஆனால், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விஷவாயு தாக்காமல் இருப்பதற்கான அடிப்படைப் பாதுகாப்புக் கவசங்களைக்கூட வழங்க முடியாத நிலைமை காணப்படுவது எத்தகைய நகைமுரண்? எந்தவித பாதுகாப்புக் கவசமும் இல்லாமல் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் தொடரும் வரை, தூய்மை இந்தியா திட்டமும், கழிப்பறைகள் கட்டும் திட்டமும் நடைமுறைப்படுவதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது? இந்தியா எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம்தான். இது தொடரும் வரை மானுட சமுதாயத்தின் முன்னால் நமக்குத் தலைகுனிவுதான்." என்கிறது அந்த தலையங்கம்.
பிற செய்திகள்:
- ஐ.நா.வில் டிரம்ப்: "லட்சக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது இந்தியா"
- கடலில் 49 நாள்கள் திக்குதெரியாமல் தவித்து உயிர்பிழைத்த 19 வயது இளைஞரின் கதை
- ஸ்வீடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: பதவி இழக்கிறார் பிரதமர்
- நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












