ஸ்வீடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: பதவி இழக்கிறார் பிரதமர் ஸ்டேஃபான் லொவேன்

பட மூலாதாரம், AFP
ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து இடது மையவாத பிரதமர் ஸ்டேஃபான் லொவேன் பதவியை இழக்கிறார்.
குடியேற்ற எதிர்ப்புக் கொள்கை உடைய ஸ்வீடன் டெமாக்ரெட்ஸ் கட்சி இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்தது.
2014-ம் ஆண்டு முதலில் பிரதமரானார் லொவேன். தற்போது சில வாரங்கள் முன்பு நடந்து முடிந்த தேர்தலில் எந்த தரப்புக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றமே அமைந்தது.
லொவேனின் சமூக ஜனநாயகக் கட்சிக்கு 144 இடங்கள் கிடைத்தன. உல்ஃப் கிறிஸ்டர்சனின் வலது மையவாத அணிக்கு இதைவிட ஓர் இடம்தான் குறைவாகக் கிடைத்தது.
லொவேனுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 எம்.பி.க்களும் எதிராக 142 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
லொவேன் பதவி இழக்கும் தற்போதைய நிலையில், நாடாளுமன்ற அவைத்தலைவர் புதிய பிரமர் பெயரை முன்மொழிவார். கிறிஸ்டர்சனே புதிய பிரதமராக முன்மொழியப்பட வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.
புதிய பிரதமர் பதவியேற்கும் வரையில், சில வாரங்களுக்கு, லொவேன் காபந்து பிரதமராகத் தொடர்வார்.
அடுத்து என்ன நடக்கும்...
புதிய நாடாளுமன்றத்தில் 62 இடங்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள ஸ்வீடன் டெமாக்ரெட்சுடன் இணைந்து ஆட்சி நடத்த இரண்டு பெரிய அணிகளும் தயாராக இல்லை.

பட மூலாதாரம், NurPhoto/NurPhoto via Getty Images
கிறிஸ்டர்சனின் மிதவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆண்டிரியே நோர்லன் ஸ்வீடன் டெமாக்ரெட்ஸ் ஆதரவுடன் நாடாளுமன்ற அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தொங்கு நாடாளுமன்றம் அமைந்திருப்பதால், நிலையான அரசை அமைப்பது சிக்கலாக மாறியுள்ளது. அதற்கான முக்கியக் காரணங்கள்:
- வலது மையவாதக் கட்சி தலைமையிலான மைனாரிட்டி அரசை ஆதரிக்க ஸ்டேஃபான் லொவேனின் கட்சி மறுத்துவிட்டது.
- வலது மையவாதக் கட்சி ஸ்வீடன் டெமாக்ரேட்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் வலது மையவாத அணியின் நான்கு உறுப்பினர்களில் இருவர் வெளியேறப்போவதாக எச்சரித்துள்ளனர்.
- நான்கு முறை அரசு அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்தால் புதிய தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். இதுவரை ஸ்வீடன் வரலாற்றில் அப்படி நடந்ததில்லை.
- நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியின் தலைவரான லொவேன் அரசியல் பிரிவினைகளைக் கடந்து மீண்டுமொரு புதிய அரசை அமைக்க முயற்சிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தாம் பிரதமராகத் தொடர்வதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
- மக்கள் புதிய தேர்தல்களை தற்போது விரும்பவில்லை என்று கூறிய லொவேன், அதே நேரம் ஸ்வீன்டன் டெமாக்ட்ஸ் ஆதரவுடன் இயங்கும் அரசுக்குத் தம்மால் ஆதரவு அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
- பரந்த அரசியல் ஆதரவுடன் புதிய அரசு அமையவேண்டும் என்று கிறிஸ்டர்சனும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












