ராஜீவ் கொலை வழக்கு: 4 இலங்கையர்கள் விடுதலையானால் எங்கே செல்வார்கள்?

ராஜீவ் காந்தி

பட மூலாதாரம், Sharad Saxena/The India Today Group/Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. ஆனால், இவர்களில் நான்கு பேர் இலங்கை குடிமக்களாக இருக்கும் நிலையில் விடுதலைக்குப் பிறகு அவர்கள் எங்கு செல்வார்கள்?

ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தத் தீர்மானம் தற்போது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்த ஏழு பேரில் நளினியின் கணவர் ஸ்ரீஹரன் என்ற முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சாந்தன் இலங்கைக் கடவுச் சீட்டின் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் கடவுச் சீட்டு உண்டு. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்துகொண்டவர்கள்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, அனைவரும் விடுதலை செய்யப்படும் நிலையில் சட்ட ரீதியாகப் பார்த்தால் இவர்கள் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், இந்த நால்வரில் எத்தனை பேர் இலங்கைக்குத் திரும்ப விரும்புவார்கள் என்பது கேள்விக்குறிதான்.

தமிழக ஆளுநர்

பட மூலாதாரம், HTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN/

இந்த நால்வரில் ஸ்ரீஹரன் என்ற முருகனும் ராபர்ட் பயசும் ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களின் மூலம் அந்த நாடுகளுக்குச் சென்றுவிடக்கூடும்.

சாந்தனைப் பொறுத்தவரை, தன் மீதான வழக்கு அடையாள மாறுபாட்டால் தொடுக்கப்பட்டது எனக் கருதுகிறார். ஆகவே தான் இலங்கை திரும்பினால், தனக்கு பிரச்சனை இருக்காது என அவர் கருதினால், தன் கடவுச் சீட்டைப் புதுப்பித்துக்கொண்டு இலங்கைக்கே அவர் செல்லலாம்.

மீதமிருக்கும் ஜெயக்குமாரின் குடும்பத்தினர் தமிழகத்தில்தான் வசிக்கின்றனர். அவருடைய மனைவி 80களின் இறுதியிலேயே இந்தியா வந்தவர். அதனால், அவர் தன் குடும்பத்தினரோடு இணைந்து வாழ விரும்பலாம்.

ஆனால், இலங்கை திரும்புவதைத் தவிர்த்த பிற வாய்ப்புகள் எல்லாமே மிக சிக்கலானவை என்கிறார்கள் சர்வதேச குடியேற்றச் சட்டங்களை அறிந்தவர்கள்.

ராஜீவ் கொலை

பட மூலாதாரம், Getty Images

"வெளிநாட்டினர் ஏதாவது குற்றங்களுக்காக இந்தியாவில் தண்டிக்கப்பட்டால், தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதே இந்தியாவில் நடைமுறை. ஆகவே, இந்த நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவே இந்தியா முயற்சிசெய்யும்" என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரான க்ளாட்ஸன் சேவியர்.

இலங்கை
இலங்கை

சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு இந்த நான்கு பேரும் இலங்கைக்குத் திரும்ப விரும்பாவிட்டால், இங்கேயே அரசியல் அடைக்கலம் கோருவதோ, அகதிகளாக இருக்க விரும்புவதோ முடியாது.

காரணம், இந்தியாவில் அடைக்கலம் கோருவதற்கென எந்தச் சட்டமும் கிடையாது. 2013ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஆவணங்களின்றி வருபவர்களை அகதிகளுக்கான முகாமிலோ, பதிவுசெய்துகொண்டு வெளியிலோ தங்குவதற்கோ அனுமதி அளிப்பதில்லை.

ராஜீவ் கொலை

பட மூலாதாரம், Getty Images

இந்த நால்வரைப் பொறுத்தவரை அவர்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு வந்துவிட்டவர்கள் என்றாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்தை அளிக்க மத்திய அரசு விரும்புமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

தாங்கள் இலங்கைக்குத் திரும்புவதால் இனம், பால், அரசியல் நிலைப்பாடு சார்ந்து தாங்கள் தண்டிக்கப்படலாம் என்று அவர்கள் கருதினால், விடுதலையானவுடன் வேறு நாட்டில் அடைக்கலம் கோரலாம்.

இலங்கை
இலங்கை

"இவர்களில் யாருடைய ரத்த உறவினராவது வெளிநாடுகளில் இருந்தால், அவர்கள் 'ஸ்பான்ஸர்ஷிப்' அளிக்கும்பட்சத்தில், அந்த நாட்டிற்கு இவர்கள் குடியேறிவிட முடியும். அதற்காக இலங்கை அரசு பாஸ்போர்ட் அளிக்க வேண்டிய அவசியம்கூட இல்லை. சமீபத்தில் ஈழ நேரு என்பவர் அப்படித்தான் வெளியேறினார்" என்கிறார் அகதிகள் மத்தியில் செயல்பட்டுவரும் சர்வதேச அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இம்மாதிரி ஒரு மூன்றாவது நாட்டில் அடைக்கலம் கிடைக்கும்வரை, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பான யுஎன்எச்சிஆரில் பதிவுசெய்து, மற்றொரு நாட்டில் அகதி நிலையோ, அடைக்கல நிலையோ உறுதிப்படும்வரை இங்கே இருக்கலாம். இவைதான் இவர்களுக்கு முன்பாக இருக்கும் வாய்ப்புகள் என்கிறார் க்ளாட்ஸன்.

ராஜீவ் காந்தி

பட மூலாதாரம், Getty Images

ஜெயக்குமாரின் குடும்பத்தினர் இங்கு இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட நிலையை வைத்தே அவர் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவாரா, இல்லையா என்பதும் தீர்மானிக்கப்படும் என்கிறார் க்ளாட்ஸன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது இந்த ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் கடவுச் சீட்டு வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :