இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்: எப்படி சாத்தியமானது இந்திய வெற்றி?

கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் புதன்கிழமை நடந்த லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி இது என்பதால், நேற்றைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த போட்டியில் இந்தியாவின் சிறப்பான வெற்றிக்கு என்னென்ன காரணங்கள் என்பது இக்கட்டுரை விளக்குகிறது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளில் முதல் நிமிடம் முதலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இந்த போட்டியிலும் அப்படித்தான்.

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ஷர்துல் தாகூர், கலீல் அகமது நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா, பூம்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

போட்டி தொடங்கிய முதலே சிறப்பாக ஆடத்தொடங்கிய இந்தியா, பாகிஸ்தானின் இரண்டு விக்கெட்டுகளை அந்த அணி 3 ரன்கள் சேர்ப்பதற்கு முன்பே கைப்பற்றியது. இதன் மூலம் ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்தியாவின் கரம் ஓங்கியது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம்

புதன்கிழமை நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம்தான்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம்

பட மூலாதாரம், AFP

பாபர் அஸாம் மற்றும் சோயீப் மாலிக் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நிலைத்து ஆடாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பல பேட்ஸ்மேன்கள் தேவையற்ற ஷாட்கள் ஆடி தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

அசத்திய கேதர் ஜாதவ்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் 3 விக்கெட்டுகளையும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ஆனால், நேற்றைய போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை கேதர் ஜாதவ் என்று கூறலாம்.

கேதர் ஜாதவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேதர் ஜாதவ்

பகுதிநேர சுழல் பந்துவீச்சாளரான கேதர் ஜாதவ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை எடுத்தார். இதில் பாகிஸ்தான் முக்கிய பேட்ஸ்மேன்களும் அடங்குவர்.

பேட்டிங்கிலும் ஜொலித்த இந்தியா

பந்துவீச்சை போலவே பேட்டிங்கிலும் இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டனர்.

குறிப்பாக ரோகித் சர்மா பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் விளாசி 39 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். தவான் 46 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images

இருவரும் ஆட்டமிழந்த நிலையில், தினேஷ் கார்த்திக் மற்றும் ராயுடு ஆகிய இருவரும் பொறுப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி இலக்குக்கு எடுத்து சென்றனர்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து கிரிக்கெட் வீரர் ரகுராமன் பிபிசி தமிழிடம் உரையாடினார்.

"2017 சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டிக்கு பிறகு நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்ற ரீதியில் இந்த போட்டி அதிக கவனம் பெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா சிறப்பாக விளையாடியது. மாறாக பாகிஸ்தான் ஒரு கத்துக்குட்டி அணி போல விளையாடியது'' என்று தெரிவித்தார்.

''கோலி இல்லாத நிலையில் அணியின் தலைமை பொறுப்பை ஏற்ற ரோகித் சர்மா அணித்தலைமை மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் சிறப்பாக பங்களித்தார். அதேபோல் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசினர்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், Getty Images

''பாகிஸ்தான் அணியினர் தங்களது பேட்டிங்கில் எந்த இலக்கும் இல்லாமல் விளையாடினர். பல பேட்ஸ்மேன்கள் தங்களது தேவையற்ற ஷாட்களால்தான் ஆட்டமிழந்தனர்'' என்று அவர் மேலும் கூறினார்.

2017 சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் தோற்றது குறித்து கேட்டதற்கு, ''அதேபோல் இப்போது நடக்கும் என்று கூறமுடியாது. இங்கிலாந்து ஆடுகளங்களும், இந்த ஆடுகளங்களும் வெவ்வேறானவை. இந்த தொடரை இந்தியா வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்'' என்று ரகுராமன் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :