தெலங்கானா கௌரவக் கொலை: "என் வாழ்வின் ஒரு பாதி பிரனாய்" - கணவரை இழந்த அம்ருதா

"ஒரு தாயைப் போல என்னை அன்பாக பார்த்துக் கொண்டான் பிரணாய். எனக்காக சமைப்பான், ஊட்டிவிடுவான், எல்லா வேலைகளையும் செய்வான். அவன் என் வாழ்வின் ஒரு பாதி" என்று தனது கணவனைப்பற்றி தொண்டை அடைக்க பேசுகிறார் 21 வயது அம்ருதவர்ஷிணி.
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த பெருமாள பிரனாய், வெள்ளிக்கிழமை மதியம் தனது கர்பிணி மனைவி அம்ருதாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றிருந்தார். மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது, வெட்டிக் கொல்லப்பட்டார்.


மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருத வர்ஷிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் 24 வயது பெருமாள பிரனாய்.
பெருமாள பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருமணத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பலமுறை அம்ருதாவின் தந்தையால் மிரட்டப்பட்ட பிரனாய், இறுதியில், அவர் ஏற்பாடு செய்த அடியாட்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். ஐந்து மாத கர்பிணியான அம்ருதா ஆடிப்போயிருந்தாலும், நிலைமையை தைரியமாக எதிர்கொள்ளும் உறுதியில் இருக்கிறார். ஆனால், சிறுவயது முதலே நண்பராய் இருந்த தனது கணவனைப் பற்றி பேசும்போது அவ்வப்போது உடைந்துப்போய் அழுகிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
பிரனாயின் கொலை தொடர்பாக அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவருக்கு நெருக்கமான அஜர் அலி, பாரி, சுபாஷ் ஷர்மா, சித்தப்பா ஷிவான் மற்றும் டிரைவர் ஒருவர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக நலகொண்டா காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.வி.ரங்கநாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிரனாயை கொலை செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏ.வி.ரங்கநாத், அம்ருதாவின் தந்தையிடம் இருந்து உத்தரவு பெற்ற, (காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியுடன் தொடர்பு கொண்ட) கரீம் அஜர் அலி, பாரி, சுபாஷ் ஷர்மா ஆகியோரை தொடர்பு கொண்டார்.
அஜர் அலியும், மொஹம்மத் பாரியும் நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஹிரன் பாண்ட்யா கொலையில் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் கூறுகிறது.
பிரனாயை கொலை செய்வதற்கான ஒப்பந்தம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியன்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, முதல் முயற்சி ஆகஸ்ட் 14ஆம் தேதியன்றும், பிறகு செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக செப்டம்பர் 15ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு மூன்றாவது முயற்சியில் அவர்கள் பிரனாயை கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
"விசாரணையின்போது, தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரனாய், சரியான படிப்பில்லாதவன், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் என்றும் மாருதி ராவ் தெரிவித்தார்" என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
மிர்யாளகுடாவில் பிரனாயின் பெற்றோரின் வீட்டில் இருந்த அம்ருதாவை பிபிசி செய்தியாளர் தீப்தி பதினி நேரில் சென்று சந்தித்தார்.


தங்களது சிறுவயது புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அம்ருதா, "பால்யகால சிநேகிதனை திருமணம் செய்துகொள்வதை விட பெரிய அதிர்ஷ்டம் ஒன்றும் இல்லை. எப்போதும் ஒன்றாக இருப்பதற்காக பிறந்தவர்கள்" என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரனாயை முதன்முதலில் சந்தித்ததைப் பற்றி கேட்டபோது, முகத்தில் வறண்ட புன்னகையுடன் அதைப்பற்றி பேசுகிறார். 'பள்ளியில் எனக்கு சீனியராக இருந்தான். அப்போதில் இருந்தே எங்களுக்கு பரஸ்பர அன்பு இருந்தது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் பிரனாய் பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தொடங்கிய காதல் அது. நாங்கள் போனில் அடிக்கடி பேசிக் கொள்வோம்' என்கிறார் அம்ருதா.
மேடிட்டிருந்த தனது வயிறை தடவிக்கொண்டே, "குழந்தை மூலமாக பிரனாய் எப்போதும் என்னுடனே இருப்பான்", அதுபோதும் எனக்கு என கண்ணில் நீர் துளிக்க சொல்கிறார் அம்ருதா.
"எப்போது பார்ப்போம் என்று காத்துக் கொண்டிருப்போம்" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், AMRUTHA.PRANAY.3 / FACEBOOK
இவர்கள் காதல் பல தடைகளை கடந்து, பலவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்ப்பையும் தாண்டி தி்ருமணமாய் மலர்ந்திருக்கிறது.
"சிறுநகரம் ஒன்றில் வசித்த எங்களின் காதல் பற்றி பெற்றோருக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. என்னை கண்டித்தார்கள், தண்டித்தார்கள், ஆனால் அவர்களின் கட்டுப்பாடு என்னைத்தான் கட்டுப்படுத்தியதேத் தவிர, என் காதலை கட்டுப்படுத்த முடியவில்லை".
"பெற்றோருக்கு சமூக, பொருளாதார, சாதி நிலைமைகளே பிரதானமாக இருந்தாலும், அது எதுவுமே எனக்கு பெரிதாக தெரியவில்லை. நான் பிரனாயை காதலிக்கிறேன், எங்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்கிறது, நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தால், எங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்" என்கிறார் அம்ருதா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, 2016 ஏப்ரல் மாதம் இருவரும் கோவில் ஒன்றில் திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆனால் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை. மகளின் நடவடிக்கை பிடிக்காமல் அவளை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்தனர்.
"என் சித்தப்பா ஷிவான், பிரானயை மிரட்டினார், என்னை டம்பிள்ஸால் அடித்தனர் (உடற்பயிற்சியின்போது, கைக்கு வலுவூட்டுவதற்காக பயன்படுத்தும் dumbbells). இவை அனைத்தும் என் தாய் உட்பட சுமார் 20 உறவினர்களின் முன்னிலையில் நடந்தது. யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தாழ்ந்த சாதியை சேர்ந்த பிரனாயை மறந்துவிட வேண்டுமென்றே அனைவரும் வற்புறுத்தினார்கள்" என்று சொல்கிறார் அம்ருதா.
"நான் சிறுமியாக இருந்தபோதே, வேற்று சாதியினருடன் நட்புக் கொள்ள வேண்டாம் என்று அம்மா கடிந்துக் கொள்வார். நான் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, சாதமும், ஊறுகாயும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். பிரனாயை சந்திக்காமல் தடுப்பதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார்கள். படிப்பையும் நிறுத்திவிட்டார்கள்" என்று இறுகிப்போன முகத்துடன் சொல்கிறார் அம்ருதா.

அம்ருதா வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பிறகு இருவரும் ஆர்ய சமாஜ் கோவிலில் 2018 ஜனவரி 30ஆம் தேதி மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளும்வரை பார்த்துக் கொள்ளவேயில்லை.
"எனக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்படும்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போது, அங்கிருக்கும் யாருடைய போனையாவது வாங்கி பிரனாயுடன் பேசிவிடுவேன். இறுதியில் எங்கள் திருமணத்தை அதிகாரபூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்து ஆர்ய சமாஜ் கோவிலில் மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள முடிவுசெய்தோம். எங்கள் காதலுக்காக உலகத்தையே எதிர்த்துப் போராடவும் துணிந்தோம்" என்கிறார் அம்ருதா.
பிரனாயின் குடும்பத்தினருக்கும் திருமணம் பற்றி எந்தத் தகவலையும் சொல்லாமல், புதுமணத் தம்பதிகள் ஹைதராபாதுக்கு சென்றுவிட்டார்கள். அங்கு தங்களுக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என்று நம்பினார்கள்.


"ஒன்றரை மாதம் வரையிலும் ஹைதராபாதில் தங்கியிருந்தோம். அப்பா எங்களைத்தேடி ஆட்களை இங்கும் அனுப்பிவிட்டார். சரி, இனிமேல் எங்கு போனாலும் பாதுகாப்பு இல்லை, சொந்த ஊருக்கே திரும்பலாம் என்று முடிவு செய்து மிர்யாளகுடாவுக்கு சென்று பிரனாயின் பெற்றோருடன் தங்கினோம். அது எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.
"மேல் படிப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லலாம் என்ற முடிவில் இருந்த நிலையில், நான் கர்பமானேன். அது எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது.
பிரசவம் முடியும் வரை இங்கேயே இருக்கலாம் என்று முடிவெடுத்தாலும், கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தோம்."
"குழந்தை என்ற புது உறவு எங்கள் இருவருக்கும் இடையில் மலர்வது, என் பெற்றோரை சமாளிக்க உதவும் என்று நான் நம்பினேன்" என்று வருத்தத்துடன் சொல்கிறார் அம்ருதா.

கருவுற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார் அம்ருதா. அதற்கு அவர்களின் எதிர்வினை என்ன தெரியுமா? "விஷயத்தை சொன்னதிலிருந்தே கருவை கலைத்துவிடு என்றுதான் அப்பா சொன்னார். விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்ல போன் செய்தபோதும், கருவை கலைத்துவிடு என்று அப்பா வற்புறுத்தினார். என் குடும்பத்தினரோ, அடியாட்களோ எங்களை தாக்கலாம் என்ற பயம் எப்போதுமே இருந்தது. ஆனால் இந்த அளவு கொடூரமாக தாக்குவார்கள் என்று நினைத்ததேயில்லை" என்று துக்கத்தில் விம்முகிறார் அவர்.
"கன்னா என்று என்னை பிரனாய் செல்லமாக அழைப்பது போல் எனக்கு அவருடைய குரல் கேட்கிறது என்று கூறும் அம்ருதா, அந்த கருப்பு தினத்தை மீண்டும் நினைவுகூர்கிறார்".
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 3
"நான் காலை உணவு அருந்தியிருந்தேன், ஆனால் பிரனாய் சாப்பிடவில்லை, மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற நாங்கள், முதுகுவலியை குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது டாக்டரிடம் போன் செய்து பேசிய என் அப்பா கருக்கலைப்பு பற்றி என்ன முடிவு செய்திருக்கிறீர்கள் என்று கேட்டார்."
"நாங்கள் அங்கு இல்லை என்று அப்பாவிடம் கூறிவிட்டார் டாக்டர். அந்த சமயத்தில் அப்பாவிடம் இருந்து எனக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது. மருத்துவமனையில் இருந்து நாங்கள் வெளியே வரும்போதும் பேசிக்கொண்டே வந்தோம். நான் ஏதோ ஒரு கேள்வி கேட்க, அதற்கு பதில் வரவில்லையே என்று பார்த்தால், பிரனாய் கீழே விழுந்து கிடந்தான், ஒருவன் அவருடைய தொண்டையை அறுத்துக் கொண்டிருந்தான்" என்று அந்த உறைந்துபோன கணத்தை தற்போது உயிர்ப்பித்து சொல்கிறார் அம்ருதா.
"என் மாமியார் தாக்கியவனை தள்ளிவிட்டார், நான் உதவி கோரிக்கொண்டே மருத்துவமனைக்குள் ஓடினேன். சில நிமிடங்களில் அப்பாவுக்கு போன் செய்து கோபத்துடன் கேள்வி கேட்டேன். ஆனால், நான் என்ன செய்ய முடியும்? மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்ற பதில்தான் கிடைத்தது" என்று அந்த இறுதி கணங்களை நினைவுகூர்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு என் அப்பாவுக்கு சிறிய அறுவைசிகிச்சை ஒன்று நடந்தது. அப்பாவை வந்து பார்த்துவிட்டுப்போ என்று அம்மாவும், உறவினர்களும் சொன்னார்கள். ஆனால் நான் பெங்களூருவுக்கு போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டேன். அடுத்த நாள் ஒருவன் எங்கள் வீட்டுக்கு வந்து, வெளியில் நின்றிருந்த வாடகைக் காரைப் பற்றி விசாரித்தான். அவனின் பேச்சுவழக்கே வித்தியாசமாக இருந்தது. என் மாமனார் அவனுக்கு பதில் சொல்லி அனுப்பிவிட்டார். அந்த மனிதன்தான் வெள்ளிக்கிழமையன்று மருத்துவமனைக்கு வெளியில் பிரனாயை கொன்றவன் என்று தோன்றுகிறது" என்கிறார் அம்ருதா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 4
தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவனை காதலித்ததும், திருமணம் செய்ததும்தான் என் அன்புக்குரிய பிரனாயின் உயிரை என் அப்பாவே பறிப்பதற்குக் காரணமாகிவிட்டது. பிரனாய் இறந்தபிறகு என் வீட்டில் இருந்து எனக்கு போனே வரவில்லை. வழக்கமாக என் அம்மா என்னுடன் போனில் பேசுவார். அது என்னுடைய உடல்நலனை விசாரிப்பதற்காக என்று நினைத்தேன், ஆனால் சந்தர்ப்பம் பார்த்து எங்களை பிரிப்பதற்காக என்னிடமிருந்தே தகவலை கறந்த வழி என்றே தெரியாமல் நான் இருந்திருக்கிறேன். நான் அவர்களிடம் போகமாட்டேன். இனிமேல் பிரனாயின் பெற்றோர்கள்தான் என்னுடைய பெற்றோர்கள்" என்று உறுதியுடன் கூறுகிறார் அம்ருதா.
தலித் நலவாழ்வு சங்கத்தினரும், மகளிர் நல குழுக்களும் பிரனாயின் வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறிச்செல்கின்றனர். 'ஜெய் பீம்', 'பிரனாய் வாழ்க' என்று முழக்கங்கள் அவரது வீட்டில் எதிரொலிக்கின்றன.
தனது போராட்டத்திற்கு ஆதரவு கிடைப்பதற்காக மகிழ்ச்சி தெரிவிக்கும் அம்ருதா, 'பிரனாய்க்கு நீதி' ('Justice for Pranay') என்ற பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்றை துவக்கியிருக்கிறார். இதன்மூலம் சாதியில்லாத சமூகத்திற்கான தனது கனவை நனவாக்கும் போராட்டத்தை அம்ருதா முன்னெடுப்பார்.

"சாதியின் அடிப்படையில் காதலர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடாது என்று பிரனாய் எப்போதும் சொல்வார். ஆனால் நாங்கள் சந்தித்த பிரச்சனைகளின் அடிப்படை சாதிதான். எங்கள் ஊரின் மத்தியில் பிரனாயின் சிலை அமைக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான அனுமதிகளை நான் வாங்குவேன்" என்று திடமாக முடிவெடுத்திருக்கிறார் அம்ருதா.
"என் அப்பா, என் கணவனை கொன்றதற்கு காரணம், அவர் வேற்று சாதி என்பதால்தான். என் அப்பா எவ்வளவு முயற்சி செய்திருந்தாலும்கூட பிரனாய் போன்ற ஒரு சிறந்த கணவனை எனக்கு தேடிக் கொடுத்திருக்க முடியாது" என்று மனம் வெதும்பிச் சொல்கிறார்.
"சாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமென்று பாடுபடுவேன்"
பிரனாயின் தாய் ஹேமலதா, தந்தை பாலுசாமி, தம்பி அஜய் என அனைவரும் மனமுடைந்து காணப்படுகின்றனர். தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் அம்ருதா விலகக்கூடாதென்று அறிவுறுத்துகிறார் அஜய்.
"அஜய் இப்போது என் சகோதரன், இது என் வீடு. இன்னும் சில நாட்களில் எனக்கு குழந்தையும் பிறந்துவிடும்" என்று சொல்லிக் கொண்டு விம்மி அழும் அம்ருதாவை தேற்றும் ஹேமலதாவின் கண்ணில் இருந்து நீர் வழிகிறது.
சாதியற்ற சமூகத்திற்காக அம்ருதா பாடுபட்டாலும், அவரது எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் பிரம்மாண்டமாய் முன் நிற்கின்றன. "என் குழந்தை மற்றும் இந்த குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது" என தனது அச்சத்தையும் அம்ருதா வெளிப்படுத்துகிறார்.
ஆனால் அம்ருதா மற்றும் அவரது குழந்தையைப் பற்றிய அச்சப்படுவதற்கான முகாந்திரங்களும் இருக்கின்றன. தங்களது சொந்த மகளைப் போலவே அம்ருதாவை பார்த்துக் கொள்வதாக பிரனாயின் குடும்பம் உறுதி கூறினாலும், அம்ருதா பொருளாதார ரீதியாக சார்ந்திராமல் இருக்கவேண்டியதும் அவசியமாகிறது. தனது காதல் போராட்டத்திற்காக, கல்வியையும் பாதியில் நிறுத்திவிட்ட அம்ருதாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுகிறது.
பிற செய்திகள்:
- கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி: எப்படி சாத்தியமானது?
- வர்த்தக போர்: டிரம்ப் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் சீனா
- "நான் தமிழன்... விடுதலைப் புலிகள் தோற்க வேண்டும் என்று நினைத்தேன்"
- ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது சிரியாதான்: இஸ்ரேல் குற்றச்சாட்டு
- கடும் மின்பற்றாக்குறையை நோக்கிச் செல்கிறதா தமிழ்நாடு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












