ரஷ்ய விமான ஊழியர் சாவுக்கு சிரியா மீது குற்றம் சுமத்தும் இஸ்ரேல்

ரஷ்ய இராணுவ விமானம்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய விமான ஊழியர்கள் 15 பேர் உயிரிழப்புக்கு சிரியா படையினரின் தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

லடாகியா நகரின் மீது இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்திய நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ரஷ்ய ஊழியர்களின் உயிரிழப்பு குறித்து கவலை வெளியிட்டுள்ள இஸ்ரேல், சிரியாவின் விமான எதிர்ப்பு பீரங்கிகளின் உக்கிரமான மற்றும் இலக்கில்லாத தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

ரஷ்ய விமனம் II-20, திங்கள்கிழமை மாலை, மத்திய தரைக்கடல் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

முதலில், இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கையே காரணம் என ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது. பின்னர், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், செவ்வாய்க்கிழமை இதுபற்றிப் பேசும்போது, துக்ககரமான விபத்துக்குரிய தொடர் சூழ்நிலைகள் காரணமாக இது நடந்ததாக தெரிவித்தார்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், அதிபர் பசார் அல் - அசத் அரசுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

இஸ்ரேல் சொன்னது என்ன?

ரஷ்ய விமான ஊழியர்களின் உயிரிழப்பு கவலையளிப்பதாகக் கூறியுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மிகவும் அரிதான அறிக்கை ஒன்றில், ரஷ்ய விமானத்தின் மீதான தாக்குதலுக்கு அசாத் அரசே பொறுப்பு என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில், ரஷ்ய விமானங்களை தாக்குதலுக்கான கவசமாக இஸ்ரேல் பயன்படுத்திக் கொண்டது என்ற ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

லடாகியாவில் குறிப்பிட்ட இலக்கின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தாக்குதல் இலக்கில் ரஷ்ய விமானம் இல்லை. சிரியா ஏவுகணை தாக்குல் நடத்தி, எந்த ரஷ்ய விமானத்தின் தாக்குதலுக்கு காரணமாக இருந்ததோ, அந்த நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் இஸ்ரேலிய எல்லைக்குள் வந்து சேர்ந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உண்மையில்என்ன நடந்தது?

கடந்த திங்கட்கிழமையன்று, இல்யூஷின் Il-20 விமானம், வட மேற்கு நகரமான லடாக்கியாவிற்கு அருகில் உள்ள ரஷ்யாவின் ஹிமேமீம் விமான தளத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கையில் சிரியா கடற்கரையிலிருந்து சுமார் 35 கிமீ (22 மைல்) தொலைவில் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

ரஷ்ய இராணுவ விமானம்

Il-20 விமானம், லடாக்கியா மாகாணத்தில் உள்ள சிரியாவின் இடங்களில் நான்கு இஸ்ரேலிய எஃப் -16 ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது காணாமல் போனதாக ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

''கடலில் இருந்து லடாக்கியா நகரத்திற்கு வருகிற எதிரி ஏவுகணைகளை தடுத்துள்ளதாக சிரிய ராணுவம் தெரிவித்துள்ளது'' என்று சானா செய்தி நிறுவனம் கூறுகிறது.

உள்ளூர் நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு முன்பு லடாக்கியாவில் வான் தாக்குதல்கள் நடந்ததாக சிரிய தொலைக்காட்சி பதிவு செய்தது.

அரை மணி நேரத்திற்கு பிறகு, சிரியாவின் விமான பாதுகாப்பு படைகள், எதிரிகளின் ஏவுகணைகளுக்கு பதிலளித்ததாக சனா தொலைக்காட்சியின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

திங்களன்று லடாக்கியா பகுதியில் சில இடங்களை இலக்கு வைத்தது பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து இஸ்ரேலிய ராணுவம், "நாங்கள் வெளிநாட்டு அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம்" என்றது.

ஆரம்பத்தில் விமானம் காணாமல் போனது குறித்து பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது; ஆனால் செவ்வாயன்று, விமானம் தற்செயலாக சிரியாவால் சுடப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

இஸ்ரேலின் எந்த செயலுக்கு ரஷ்யா குற்றம் சாட்டுகிறது?

இஸ்ரேலின் "பொறுப்பற்ற செயல்கள்" தவறானவை என்றும், தாக்குதல்கள் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடப்பட்டதனால், ராணுவகண்காணிப்பு விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்றும் அறிக்கை ஒன்றில் ரஷ்யா கூறியுள்ளது

ரஷ்ய இராணுவ விமானம்

பட மூலாதாரம், Reuters

"இஸ்ரேலிய விமானங்கள் வேண்டுமென்றே அந்த பகுதியில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்," என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பின்னர் ரஷ்யா அதன் வெளியுறவு அமைச்சகத்திற்கு இஸ்ரேலிய தூதரை வரவழைத்தது.

விமான பயணிகளின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :