கேரள கன்னியாஸ்திரீயின் பாலியல் குற்றச்சாட்டு - யார் இந்த பஞ்சாப் ஆயர்?

- எழுதியவர், அரவிந்த் சப்ரா மற்றும் சரப்ஜித் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
கேரள கன்னியாஸ்திரீ ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால், தன் நிர்வாக பொறுப்பை தற்காலிகமாக அம்ரிட்ஸரின் பாதிரியார் மேத்யூவுக்கு வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆயர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தான் இல்லாதபோது, பாதிரியார் மேத்யூ கொக்கன்டம் வழக்கமான பணிகளை செய்வார் என்று கூறியுள்ளார்.
ஜலந்தர் மறை மாவட்ட ஆயர் பிரான்கோ முலக்கால் செப்டம்பர் 19ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று கேரள காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே நாளில் சுற்றறிக்கை அனுப்பியுள்ள ஆயர் பிரான்கோ, "ஊடக செய்திகளின்படி நான் கேரளா செல்ல வேண்டியிருப்பதால், ஜலந்தர் மாவட்ட நிர்வாகத்தை பாதிரியார் மேத்யூ எடுத்துக் கொள்வார்" என்று எழுதியுள்ளார்.
ஜலந்தர் மறை மாவட்ட மூத்த பாதிரியார் ஒருவர் கூறுகையில், ஆயர் பிரான்கோ ராஜினாமா செய்யவில்லை என்றும் பாதிரியார் மேத்யூ ஆயராக பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆயர்கள் இல்லாதபோது இதுபோன்ற சுற்றறிக்கைகள் அனுப்புவது வழக்கமான ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார்.
ஆயரின் இல்லம்
இது தொடர்பாக ஆயர் பிரான்கோவை சந்திக்க ஜலந்தரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றது பிபிசி குழு. சிவில் பகுதிக்கு சென்றால் அங்கு ஒரு பெரிய தேவாயலம் இருக்கும். அதுதான் ஆயரின் இல்லம்.
பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களுக்கு எல்லாம் தலைமையிடமாக இருக்கிறது ஆயரின் இல்லம். ஆயரின் பதவி உயர்வானது மற்றும் செல்வாக்கானது.

தெரிந்தவர்களை மட்டும்தான் உள்ளே செல்ல அனுமதி அளிக்கிறார் அங்குள்ள காவலாளி. அதுவும், இந்த சர்ச்சைக்கு பிறகு அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கொடுக்கப்படுவதில்லை.
பிபிசி பஞ்சாபி குழு தேவாலயத்தை அடைந்த போது, ஒரு அறையில் காத்திருக்க சொன்னார்கள். அந்த அறையில் மாட்டி வைக்கப்பட்ட படங்கள், ஆயர் பிரான்கோவின் செல்வாக்கை சித்தரித்தது.
சில நேர காத்திருப்புக்கு பிறகு, ஆயர் பிரான்கோ இருந்த முதல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு அமைதி நிறைந்து அமர்ந்திருந்த ஆயர், எங்கள் கேள்விகளுக்கு தயாராகி இருந்தார்.
ஆயரின் பஞ்சாப் தொடர்பு
முதலில் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தாம் கேரளாவில் பிறந்ததாக கூறினார். பல ஆண்டுகள் பஞ்சாபில் இருந்ததால் அந்த மொழியும் நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.
'கத்தோலிக்க பார்வையில் இருந்து சீக்கிய குருவான குருநானக் தேவின் போதனைகள்' என்ற தலைப்பில் பி.எச்டி முடித்துள்ளார் ஆயர் பிரான்கோ. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து ஜலந்தர் மறைமாவட்ட ஆயராக அவர் இருந்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் கிறிஸ்துவ சமூகம் என்பது ஒரு சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருக்கும்.
அதுவும் பஞ்சாபில் உள்ள தலித் சமூகத்தினர் கிறிஸ்துவ வழக்கத்திற்கு மாறியதால்தான் என்கிறார் ஜலந்தரின் தொழிலாளர் அமைப்பின் தலைவரான தர்செம்.
இவருக்கு முன் இருந்த ஆயர்களை விட இவர் பணி செய்யும் விதம் முற்றிலும் வேறானது என்றும் அவர் கூறினார். மதத்தை பற்றி மட்டும் பேசாமல், பிரச்சனை என்று வரும் மக்களை கேட்டு, அதற்கு தீர்வு கொடுக்கவும் முயற்சிப்பார் என்றார் தர்செம்.
மற்றொரு பக்தர் கூறுகையில், ஆயர் பிரான்கோ ஜலந்தருக்கு வந்த பிறகு சங்கத் தர்ஷன் என்ற திட்டத்தை தொடங்கியதாக கூறுகிறார். தலித் பிரிவில் இருந்து கிறிஸ்துவ வழக்கத்திற்கு மாறியவர்களின் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சுகாதார பிரச்சனைகள் அல்லது பணப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் கூறி தீர்வு பெறுவதற்கு ஒரு இடமாக இது அமைந்துள்ளதாக அவர் கூறுகிறார். இவர்கள் அனைவருக்கும் ஆயர் உதவி செய்ய முயற்சிக்கிறார்.

அதே மாதிரி தங்கள் குழந்தைகளை அம்மாநிலத்தில் உள்ள கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்க ஆயர் பிரான்கோவை மக்கள் பலரும் தொடர்பு கொள்வார்கள்.
தேவாலயத்தை விட்டு வெளியே வரும்போது, ஆயர் குற்றமற்றவர் என துண்டு பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தார் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் சூரஜ் மசிஹ்.
"நாங்கள் நீண்ட காலமாக ஆயரை பார்த்து வருகிறோம். இது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதி. அவர் ஏழைகளுக்கு உதவுகிறார் என மக்களுக்கு போறாமை" என்று அவர் தெரிவித்தார்.
தேவாலயத்திற்கு சற்று தொலைவில் மக்கள் சிலர் போராட்டம் நடத்தி ஆயருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். ஆயரை கைது செய்ய வலியுறுத்தி அப்போரட்டம் நடைபெற்றது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












