அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

பட மூலாதாரம், ARUNKUMARSUBASUNDARAM

    • எழுதியவர், புதிய பரிதி
    • பதவி, ஊடகவியலாளர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இன்னும் ஓராண்டில் பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து 70வது ஆண்டு பிறக்கப் போகிறது. 1949 செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாளில் நடந்தேறிய இந்த நிகழ்வு திராவிட , தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது.பெரியாரும் அண்ணாவும் பிரிந்தது ஏன்? என்கிற கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் தன் வயதில் பாதி வயதே ஆன மணியம்மையை, பெரியார் திருமணம் செய்து கொண்டார். அதனை ஏற்காமல் திகவில் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கினார் அண்ணா என்று பதில் தரப்படும்.உண்மையில் அதுதான் காரணமா?

1949-ல் திமுகவினர் பெரியார் மீது வைத்த இந்த விமர்சனம் இன்றளவும் அவதூறாக அவர் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெரியார், மணியம்மையை திருமணம் செய்வதற்கு பதிலாக அவரை தத்தெடுத்து இருந்தால் இந்த பிரிவினை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது.பெரியாரால் மணியம்மையை தத்தெடுத்திருக்கவே முடியாது என்கிறது அது. பெரியார் இந்து மதத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் எதிர்த்த போதும் அவர் அம்மதத்தில் இருந்து வெளியேறவில்லை. (அதற்கான காரணங்களை விளக்கினால் இந்தக் கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பிவிடும்).

இந்து சிவில் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் கிடையாது. தத்துப்போகும் உரிமையும் கிடையாது. அவ்வாறு இருக்க தனக்கு பின்னால் தன்னுடைய கழகத்தையும் அதன் சொத்துக்களையும் நிர்வகிக்க மணியம்மையை தேர்ந்தெடுத்த பெரியாருக்கு அவரைத் திருமணம் செய்வதைத் தவிர வேறு சட்டப்பூர்வ வழி இருந்திருக்கவில்லை.

மணியம்மையை திருமணம் செய்வதற்காக பெரியார் விமர்சிக்கப்படுவாராயின் அந்த விமர்சனங்கள் அனைத்தும் பெண்களை சமமாக நடத்தாத, பிற்போக்கான இந்து மத சட்டத்தின் மேல் வைக்கப்படவேண்டியவை. இந்த நடைமுறை சிக்கல் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு தெரியாதது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் பேரறிஞர் என்று போற்றப்படும் அண்ணாவிற்கும் தெரியாமல் இருந்ததா? என்கிற கேள்வி எழுகிறது.

அண்ணா - பொதுப்புத்தி

கிழவர் ஒருவர் இளம்பெண்ணை மணந்தால் பொதுமக்கள் மத்தியில் கழகத்தின் பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்று அண்ணா கருதியதாகவும் விளக்கம் சொல்லப்படுகிறது. மக்களின் பொதுப் புத்திக்கு எல்லாம் அச்சப்படுவதாக இருந்தால் திராவிட இயக்கத்தின் சாதனைகளாக நாம் கருதும் பலவற்றை இன்று செய்திருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே சமயம் தொடக்ககாலத்தில் இருந்தே பெரியார் மக்களின் பொதுப்புத்தியில் வெறுக்கும் விசயங்களை புகுத்தும் போதெல்லாம் அண்ணா தனது எதிர்ப்பை பதிவு செய்தே வைத்திருக்கிறார் என்பதையும் கவனிக்கவேண்டியுள்ளது.

அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

கருஞ்சட்டை விவகாரம் அதற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு. திராவிட விடுதலைக்காக போராட அமைக்கப்பட்ட திராவிட விடுதலைப் படையை கருஞ்சட்டை தொண்டர்கள் படையாக மாற்றினார் பெரியார். இதில் உடன்பாடு இல்லாத போதும் அதனை ஆதரித்தே பேசிவந்தார் அண்ணா. ஆனால் கருஞ்சட்டைப் படையினர் மட்டுமல்ல அனைவரும் கருப்புச்சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் கூறிய போது எதிர்த்தார். தமிழர்களின் உடை வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை எனும் போது இது மக்களிடம் இருந்து கழகத்தை விலகச் செய்துவிடும் என்றார்.

இந்த ஒருவிவகாரத்தில் மட்டுமல்ல மக்களின் பொதுபுத்திக்கு எதிராக வேலை செய்வதில் அண்ணாவுக்கு எப்போதும் தயக்கம் இருந்து வருவதை அவரது வாழ்வையும் எழுத்தையும் கூர்ந்து நோக்கினால் பார்க்க முடிகிறது. கம்ப ராமாயணத்தை எரிக்க வேண்டும் என்று பேசி வந்த அண்ணா பின்னாளில் கம்பருக்கு சிலை வைத்ததையும், பெரியார் தீவிரமாக பகுத்தறிவு பேசி வந்த நிலையில் 1947 ஆம் ஆண்டு அவரை விட்டு பிரிவதற்கு முன்பாகவே தனது வேலைக்காரி நாடகத்தில் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என பிரகடனம் செய்ததையும் அந்த வரிசையிலேயே சேர்க்கவேண்டியிருக்கிறது.

வேலைக்காரி நாடகம் மட்டுமல்ல அதற்கு முன்பு வெளியான ஓர் இரவு நாடகம் கூட அண்ணாவின் முந்தைய நாடகங்களில் இருப்பது போன்ற நேரடி பார்ப்பன எதிர்ப்பு குறைந்ததிருந்தது. அவரது நாடகங்களிலும் படங்களிலும் ஜமீன்தார்களே வில்லன்களாக மாறியிருந்தனர். ஏனெனில் பார்ப்பன எதிர்ப்பை விட தங்களை நேரடியாக ஒடுக்கும் ஜமீன்தார்கள், பண்ணையார்கள் எதிர்ப்பே பிற்படுத்தப்பட்ட, மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகம் பிடித்திருந்தது.

இந்த சர்ச்சைகளுக்கு முன்பாகவே அண்ணாவுக்கும் பெரியாருக்கும் நாடகம் மற்றும் சினிமா தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது. மக்களை அதிகமாக சென்று சேர்வதற்கு நாடகம், சினிமா ஒரு எளிய வழி என்று நினைத்தார் அண்ணா. பெரியாருக்கு அதில் நம்பிக்கை இல்லை. மக்களை அவை மழுங்கடிக்கும் என்றே அவர் கணித்தார். இந்நிலையில்தான் 1944 பிப்ரவரி மாதம் பிரபல நாடகக் குழுவான டி.கே.சண்முகம் குழுவினர் முயற்சியால் "தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு" கூட்டப்பட்டது.

அண்ணா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார். ஆனால் பெரும்பாலும் பக்தி நாடகங்களையே நடத்தும் நாடக் குழுக்களின் இந்த மாநாடு உள்நோக்கமுடையது என்பது பெரியார் கருத்து. மாநாட்டிற்கு முன்பாகவே அதனை எதிர்த்து குடியரசு பத்திரிகை செய்தி வெளியிட்டு வந்த நிலையில் மாநாடு முடிந்த பின் மாநாடு படுதோல்வி என்று எழுதியது. ஆனால் அண்ணாவின் திராவிட நாடு இதழில் மாநாடு வெற்றி என செய்தி வந்திருந்தது.

அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

பட மூலாதாரம், FACEBOOK/DRAVIDARKAZHAGAM

ஆம் இருவரும் ஒரே கழகத்தின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் இருந்த போதும் இருவேறு பத்திரிகைகள் நடத்தி வந்தனர். காரணம், அண்ணா பெரியாருடன் இணைந்த காலம் தொட்டே இருவருக்கும் இடையில் சின்ன சின்ன சண்டைகள் நடந்து வந்தன.

கட்டுரைகளில் இருக்கும் கருத்துகள் தொடர்பாக ஏற்படும் சண்டையால் அண்ணா பெரியாரிடம் கோபித்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றுவிடுவார். பெரியார் கடிதம் எழுதி அழைத்தபிறகு வந்து சேர்ந்து கொள்வார். இந்தக் காலகட்டங்களில்தான் 1942 ஆம் ஆண்டில் தனியாக திராவிட நாடு பத்திரிகையைத் தொடங்கினார் அண்ணா. தனது கருத்துக்களை சொல்ல அவருக்கு தனிப்பத்திரிகை தேவைப்பட்டது என்பதே குடியரசு பத்திரிகையில் அவருக்கு போதுமான இடம் கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

இந்திய சுதந்திரம், இந்தியா-பாகிஸ்தான் பிளவை மட்டுமல்ல அண்ணா பெரியார் பிளவையும் ஏற்படுத்தியது. இருவரும் வெவ்வேறு கருத்துகளை தங்களது ஏடுகளில் சொல்லி வந்தாலும் இந்த விவகாரத்தில் சர்ச்சை உச்சம் தொட்டது. . "1947ஆகஸ்ட்15ஆம் தேதி சுதந்திரம் கிடைக்கவில்லை. வெள்ளைக்காரன் கையில் இருந்து கொள்ளைக்காரர்களான பிராமணர்கள் கையில் செல்கிறது" என்பது பெரியாரின் நிலைப்பாடு. ஆகையால் அதனை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் கூறினார். பொதுச் செயலாளர் அண்ணாவின் கருத்தைக் கேட்காமலேயே கழகத்தின் சார்பாக துக்க நாள் என அறிவித்தார்.

ஆனால் அண்ணாவோ இரண்டு எதிரிகளில் ஒருவர் ஒழிந்தார் என்பதால் அது இன்பநாள் என எழுதினார். காரணம் பிரிட்டிஷுக்கு ஆதரவானவர்கள் என்கிற பழி விழுந்துவிடக் கூடாதில் அவர் தெளிவாக இருந்தார்.

இதற்காக கட்சியை விட்டு என்னை நீக்கினாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆக, அப்போதே திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறத் தயாராகிவிட்டார் அண்ணா. ஆனால் கழகத்தில் இருபிரிவினர் உருவாகியிருந்தனர். இருந்தும் பெரியாரே தன்னை வெளியேற்றட்டும் எனக் காத்திருந்தார் அண்ணா. பெரியார் வெளியேற்றவில்லை. இருவருக்குள்ளும் இருந்த கருத்து வேறுபாடும் தீரவில்லை. அதே ஆண்டு அண்ணா கலந்து கொள்ளாத திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் அவரை மறைமுகமாக தாக்கிப் பேசப்பட்டது. அண்ணாவும் தனது சிறுகதைகள் மூலம் பெரியாருக்கு பதில் கூறி வந்தார்.

ஏன் மணியம்மை?

1948 ல் ஈரோடு மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான் தலைவர் என தெரிவித்து பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று கூறிய பெரியார், தனக்குப் பிறகு அண்ணா, தேர்தல் பாதையை தேர்ந்தெடுத்து சமரசத்திற்கு ஆட்பட்டுவிடுவார் என்கிற எண்ணம் உறுதியாகவே அம்முடிவைக் கைவிட்டார். இதன் பிறகு தனது வாரிசாக ஈவெகி சம்பத்தை நியமிக்க முயற்சித்து, அவரை தத்து எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் சம்பத்தும் அண்ணாவின் சீடராக இருப்பதைக் கண்டு அதையும் பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

பட மூலாதாரம், ARUNSUBASUNDARAM

இதுதவிர ஏற்கனவே அர்ஜுனன் என்பவரை தத்தெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் அவர் 1946 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டிருந்தார். இதனையடுத்து அவருக்கு மணியம்மையைத் தவிர வேறு நபர்கள் யாரும் நம்பிக்கைக்கு உரியவர்களாக தெரியவில்லை. ஆகையால் அவர் மணியம்மையைத் தேர்ந்தெடுத்தார். அண்ணா அதையே காரணம் காட்டி தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

பெரியாரும் அண்ணாவும் சமூக நீதியையும், சமத்துவத்தையுமே தங்கள் கொள்கைகளாக வடித்துக் கொண்டவர்கள் என்ற போதும் தொடக்கத்தில் இருந்தே இருவேறு வழிமுறைகளில் நம்பிக்கை உடையவர்களாக இருந்திருக்கின்றனர். பெரியாருக்கு தேசம், மொழி, இனம் என எதிலுமே பற்றில்லை. இவற்றில் எது மனித உயர்வுக்கு சுமையாக இருப்பது போல் தோன்றினாலும் அதனை சுக்குநூறாக உடைக்கவும் அவர் தயங்கியதில்லை. மாறாக அண்ணாவோ தேசியம், மொழி, இனம் ஆகியவற்றில் பற்றுடன் இருந்தார். இவற்றை முன்வைத்து மக்களை முன்னேற்ற முடியும் என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

ஆக, மணியம்மையை பெரியார் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாலும் அண்ணா விலகியிருப்பார் என்பதே வரலாறு நமக்குத் தரும் முடிவு. ஆனால் பெரியார் அண்ணா பிளவில் மிக முக்கிய பங்காற்றிய ஒன்று இருக்கிறது. மாற்றத்திற்கான சிறந்த வழி எது? தேர்தல் அரசியலா ? இயக்க அரசியலா? என்கிற கேள்வி.

பெரியார் அண்ணாவைப் பிரித்த தேர்தல்!

பெரியாரும் அண்ணாவும் பிரிந்ததற்கு அணுகுமுறை மோதல் முக்கிய காரணம் என்ற போதும் அந்த அணுகுமுறை மோதல்கள் கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களோடு நின்றுவிடவில்லை. அரசியல் தளத்திலும் எதிரொலித்தது.

இயக்க அரசியலா? தேர்தல் அரசியலா?

பிரிட்டிஷ் இந்தியாவோ, சுதந்திர இந்தியாவோ தேர்தல் ஜனநாயகத்தின் மீது பெரியாருக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. அவர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது கூட பெரும் ஆபத்தை தவிர்க்கும் நோக்கிலே அன்றி மாற்றங்களைக் கொண்டு வரமுடியும் என்கிற எண்ணத்தில் அல்ல. ஆனால் அண்ணாவோ தேர்தல் ஜனநாயகம் வழியாக தான் படைக்க விரும்பும் பொன்னுலகத்தை அடையமுடியும் எனக் கருதினார். பெரியாரின் சீடராக மாறுவதற்கு முன்பே அதற்கான முயற்சியிலும் அண்ணா ஈடுபட்டிருக்கிறார்.

அவருடைய அரசியல் வாழ்வே தேர்தலுடன் தான் தொடங்கியிருக்கிறது என்று கூட சொல்லமுடியும். 1934-ம் ஆண்டிலே பெரியாரின் அறிமுகம் அண்ணாவிற்கு கிடைத்திருந்த போதிலும் 1935ஆம் ஆண்டு தனது 26வது வயதில் சென்னை நகரசபை தேர்தலுக்கு நீதிக் கட்சியின் சார்பாக போட்டியிட்டார் அண்ணா. அதில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை.இதன் பிறகே 1937 ஆம் ஆண்டு சுய மரியாதை இயக்கத்திற்குள்ளும் பெரியார் நடத்தி வந்த குடியரசு பத்திரிகையிலும் தன்னைத் தீவிரமாக பிணைத்துக் கொண்டார். ஆக தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் தேர்தல் பாதையை நீக்கி செயல்பட்டுக் கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் அண்ணா.

ஆனால் பெரியாரோ தேர்தலில் போட்டியிட்டு வந்த நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நீதிக்கட்சியையே தேர்தல் பாதையில் இருந்து வெளியேற்றுகிறார். அதனை திராவிடர் கழகமாக மாற்றுகிறார். இந்த மாற்றத்தை அவர் அண்ணா மூலம் கொண்டு வந்ததுதான் வரலாற்று முரண். 1944 ஆம் ஆண்டு சேலம் மாநாட்டில் அண்ணா முன்மொழிந்த தீர்மானங்கள் அடிப்படையிலேயே நீதிக்கட்சி தேர்தல் பாதையை விடுத்து அரசியல் இயக்கமாக மாறியது. ஆனால் அப்போது அண்ணாவுக்கு தேர்தல் ஆசை இருந்ததா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.ஆனால் நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மாறிய பின் அவருக்கு தேர்தல் பாதையின் மீது நாட்டம் இருந்தது என்பதைக் காண முடிகிறது.

அண்ணாவும் பெரியாரும் பிரிய மணியம்மைதான் காரணமா?

பட மூலாதாரம், TWITTER

சுதந்திர தினம் இன்ப நாள் என விளக்கி எழுதிய கட்டுரையில் முஸ்லீம் லீக்கிற்கு பாகிஸ்தான் கிடைக்க காரணம் அது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்ததால்தான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் திராவிட கழகத்தார் தேர்தலில் பங்கெடுக்காமல் பலத்தை நிரூபிக்காமல் எப்படி திராவிட நாடு பெறமுடியும் என்கிற தொணியும் அதில் இருந்தது.

அப்போது மட்டுமல்ல 1948 ஆம் ஆண்டில் காங்கிரஸை எதிர்த்துப் பேசிய அண்ணா , "இந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி இல்லை என இறுமாந்துள்ளனர்…. சட்டசபையிலேயே தூங்குபவர்களை தட்டி எழுப்பக் கூட ஆள் இல்லை " என்று வெற்றிடத்தை சுட்டிக் காட்டினார்.

ஈரோடு பெட்டிச் சாவி மாநாட்டில் குத்தூசியார் தேர்தலுக்கு ஆதரவாக பேசிய போது, அதை மறுத்துதான் பேசினார் அண்ணா. அவர் மறுத்து பேசியதிலேயே தேர்தல் வெற்றி ஒன்றும் எட்டாக் கனி அல்ல என்கிற அர்த்தம் பொதிந்திருந்தது. இதற்குப் பிறகு பேசிய பெரியார், அண்ணா தலைவராகி பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உரைத்தது கூட தேர்தல் அரசியலைக் குறித்துதான் என்பது வரலாற்று நோக்காளர்களுக்குப் புரியும்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

மாநாடு நிகழ்ந்து ஓராண்டுக்குள்ளாகவே திக உடைந்து திமுக உருவானது. திக போல இயக்க அரசியலை மட்டுமே முன்னெடுக்கும் என்று சொன்னது. ஆனால் பெரியார் சொன்னதுதான் நிகழ்ந்தது. கட்சி தொடங்கிய நான்கே ஆண்டுகளில் தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுத்தது திமுக.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணா நினைத்தது போலவே பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் சட்டமாகின. பெரியார் எச்சரித்தது போலவே தேர்தல் அரசியல் காரணமாக பல சமூக நீதிக் கொள்கைகளில் நிறைய சமரசம் செய்துகொள்ள திமுக தள்ளப்பட்டது. இன்றைய தேதியில் இருந்து அலசி ஆராய்ந்தால் கூட இரு பெரும் ஆளுமைகளில் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்று அறுதியிட்டுக் கூறுவது கடினம்.

இந்தக் கட்டுரையில் அண்ணா, தேர்தல் வெற்றிக்காக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்திக் கொண்டவர் என்று அவருடைய பரந்த நோக்கத்தையும் ஆளுமையையும் சுருக்கிப் பார்க்கும் அபாயம் இருக்கிறது. சுதந்திரம் கிடைத்து இந்தியா ஜனநாயகக் குடியரசை ஏற்றுக் கொண்ட பிறகு தேர்தல் பாதையே சிறந்த பாதை என்கிற முடிவெடுத்தார் அண்ணா. அது சரியான முடிவும் கூட. காரணம். அண்ணா தேர்தல் பாதைக்கு வந்திராவிட்டால் தமிழகம் இவ்வளவு வேகமாக சமூகநீதி பாதையில் நடைபோட்டு இருக்காது. எளிதாகக் கிடைத்த பல சமூகநீதி சட்டங்களைப் போராடி பெற்று இருக்கவேண்டிய நிலை இருந்திருக்கும்.

அண்ணா

பட மூலாதாரம், FACEBOOK

அப்படி என்றால் தேர்தல் பாதை தேவையில்லாத பாதை என்று பெரியார் சுட்டிக்காட்டிய இயக்கவழி அவசியமற்றதா என்று கேள்வி எழலாம். அதற்கும் ஆம் என்று பதிலளிக்க முடியவில்லை.காரணம் தேர்தல் சாராத இயக்கங்களே இன்றளவும் பல முக்கிய போராட்டங்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் பொருத்தவரை இந்த அரசு இயந்திரம் சுரண்டலின் வழிமுறையோடு இயங்குகிறது, அது எப்போதும் சாதி, வர்க்க அடிப்படையில் மேல்தட்டில் இருப்பவர்களின் நலனுக்காகவே இருக்கிறது, ஆகையால் இந்த அரசால் சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்களுக்கு எதுவும் நன்மை செய்யமுடியாது என்கிற கருத்தைக் கொண்டிருந்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

அது எந்தளவுக்கு உண்மை என்பது நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் கவனித்தாலே புரியும். இப்படி இருக்க அண்ணா நோக்கியது போல் தேர்தலையும் அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தையும் ஒரு ஆயுதமாக பெரியார் கருதவில்லை. ஆனால் அதே சமயம் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதன் மூலம் அவரைப் பொருத்தவரையில் மோசமான அரசு ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்திருப்பது நமக்கு புரிகிறது .மொத்தத்தில் தேர்தலை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் மோசமான ஒன்று நிகழ்வதைத் தடுப்பதற்கான கேடயமாகப் பயன்படுத்தினார்.

மொத்தத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் சமூகநீதி காவலர்களுக்கு அண்ணாவின் பாதை கைத்தடி. ஒவ்வொரு அடியாக முன்னகர மிகவும் தேவைப்படுகிறது. பெரியாரின் பாதை ஒளிவிளக்கு. காலுக்கு கீழ் மட்டுமல்ல அடுத்த பத்தடிகளுக்கும் வழிகாட்டுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :