‘தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால்’ - மிரட்டும் அழகிரி
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தினத்தந்தி: ‘தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால்’

பட மூலாதாரம், Getty Images
தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால், பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி கூறினார் தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"கட்சி தொண்டர்களின் விருப்பப்படி சென்னையில் 5-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். கருணாநிதி இல்லை என்பதால் தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம். தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்" என்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
'இஸ்ரோ உதவி: ரூ.5½ கோடி கொள்ளையில் துப்பு துலங்கியது'

பட மூலாதாரம், Getty Images
ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5½ கோடி கொள்ளையில் துப்பு துலங்கி உள்ளது. 'இஸ்ரோ' வழங்கிய செயற்கைகோள் படங்கள் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று கிழிந்து போன பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டது. ரயில் பெட்டியின் கூரையில் துளைபோட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. ஓடும் ரயிலில் இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. ரூ.500, ரூ.1,000 கிழிந்த நோட்டுகள் ரூ.325 கோடியளவில் அந்த ரயிலில் கொண்டுவரப்பட்டது. தனி ரயில் பெட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அந்த பணம் கொண்டுவரப்பட்டது.
பாதுகாப்பு வளையத்தையும் மீறி கொள்ளையர்கள் பணத்தை அள்ளி சென்றுவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்டமாக இந்த கொள்ளை வழக்கை சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசாரும், பாதுகாப்பு படை போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினார்கள். 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான 'நாசா' அளித்த தகவலின் அடிப்படையில், இந்த ரயில் கொள்ளை வழக்கில் துப்பு துலங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், இந்த தகவலை மறுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வழங்கிய படங்கள் அடிப்படையில்தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.
ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த திருச்சி ராமஜெயம் கொலைவழக்கு, சென்னையில் மின்சார ரயில் கடத்தி செல்லப்பட்டு விபத்துக்குள்ளான வழக்கு போன்ற பெரிய சம்பவங்களில் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது இந்த ரெயில் கொள்ளை வழக்கிலாவது குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்துவிட வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக உள்ளனர். இந்த வழக்காவது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'பேராசை விளைவித்த பேரழிவு'
ஒவ்வொரு பேரழிவும் கற்றுக்கொள்வதற்கும் திருத்தியமைப்பதற்குமான பல அனுபவப் பாடங்களை வழங்குகிறது. ஆனால், ஆட்சியாளர்கள் எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்வதில்லை. கேரளத்தில் வரலாறு காணாத பெருமழை வரப்போகிறது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை, ஐதராபாத் இன்கோயிஸ், இஸ்ரோ, குஸாட் என ஐந்து நிறுவனங்கள் தொடர்ச்சியாக முன்னெச்சரிக்கை விடுத்தன. முன்னமே போதுமான அளவில் நீரை வெளியேற்றி, அணைகளின் நீர்மட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்க முடியும். அது நடக்காததற்கு அதிகாரிகளின் பணத்தாசை மட்டுமே காரணம். ஒவ்வொரு துளித் தண்ணீரும் அவர்களுக்கு மின்சாரம். ஒவ்வொரு யூனிட் மின்சாரமும் அவர்களுக்குப் பணம். அறிவின்மையும் அகந்தையும் பேராசையும் ஒன்று சேர்ந்தபோது உருவெடுத்த இந்தப் பெருவெள்ளம் முற்றிலும் மனித உருவாக்கமே என்கிறது இந்து தமிழ் நடுப்பக்க கட்டுரை.

பட மூலாதாரம், Getty Images
"அணைகளைத் திறந்துவிடுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) அறிவிக்கப்பட்டு, நீரில் மூழ்க வாய்ப்பிருக்கும் பகுதிகளை வரையறுத்து, அங்கிருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே கடைப்பிடிக்கப்படவில்லை. கேரளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம், அணைகள் பாதுகாப்பு ஆணையம் போன்ற அமைப்புகள் முற்றிலும் பொறுப்பில்லாமலேயே இயங்கின. அறிவியல் அடிப்படையிலான பெருவெள்ள மேலாண்மைத் திட்டம் ஒன்றை அவர்கள் இதுவரையில் உருவாக்கவில்லை. இந்தியாவில் மொத்தம் 184 வெள்ள முன்னெச்சரிக்கை நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால், அதில் ஒன்றுகூட கேரளத்தில் இல்லை. மத்திய நீர் ஆணைக் குழுவின் சட்டங்கள் எதையும் கேரள அரசு இன்றளவும் கடைப்பிடிக்க வில்லை." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் கட்டுரை.


தினமணி: 'மீண்டும் வாக்குச்சீட்டு முறை: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்'
"2019 மக்களவைத் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என தில்லியில் நடைபெற்ற தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக, தேமுதிக, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. நாடு முழுவதும் ஒரே நேர தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது." என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள், 51 மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடைபெறுவதாகவும், ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) இயந்திரத்தில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகள் தொடர்பாகவும் கவலை தெரிவித்தன.
மீண்டும் வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. மேலும், நாடு முழுவதும் ஒரே நேர தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக பிரதிநிதிகள், நீண்ட கால ஜனநாயகத்துக்கு இது உதவும்' என்று தெரிவித்தனர் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ' கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்: அமித் ஷா கலந்துக்கொள்கிறாரா?- முடிவுக்கு வந்த குழப்பம்'
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கலந்து கொள்வாரா என்று நிலவிவந்த குழப்பம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. அவருக்கு பதிலாக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், பா.ஜ.க தேசிய பொது செயலாளர் பி முரளிதர் ராவும் கலந்து கொள்வார்கள் என விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












