கிராஜுட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது? எப்போது வழங்கப்படும்?
தொடர்ந்து பல ஆண்டுகள் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளருக்கு வழங்கப்படும் பணி ஓய்வுத்தொகையே கிராஜுட்டி எனப்படும் பணிக்கொடை.

பட மூலாதாரம், Getty Images
"பணிக்கொடை, கிராஜுட்டி என்பது, பல ஆண்டுகள் பணி புரிந்த ஊழியருக்கு அவர் பணி ஓய்வு பெறும்போதோ அல்லது வேலையில் இருந்து விலகும் போதோ நிறுவனம் அல்லது முதலாளியால் கொடுக்கப்படுவது"
தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள், துறைமுகங்கள், ரயில்வே நிறுவனங்கள், தோட்டங்கள் போன்ற தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாளர்களின் நன்மைக்காக, 1972இல் பணிக்கொடை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின் கீழ், பணியாளர்கள் சில விதிமுறைகளை பூர்த்தி செய்தால், அவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டியது அவசியமாகிறது. இது பணியாளர், நிறுவனம் என இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
பத்து மற்றும் அதற்கு அதிகமானவர் பணியாற்றும் நிறுவனங்களுக்கு இந்த பணிக்கொடை சட்டம் பொருந்தும்.
அதாவது, பணிக்கொடை வரம்பிற்குள் வந்த நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கை நாளடைவில் பத்து என்பதைவிடக் குறைந்து போனாலும், அந்த நிறுவனம் பணியாளர்களுக்கு பணிக்கொடையை வழங்க வேண்டியது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களே பணிக்கொடை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள். அரசின் ஓய்வூதிய வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஆண்டு ஊதியத்தில் 15 நாட்களுக்கான அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படிக்கு சமமாக ஒரு ஆண்டின் பணிக்கொடை இருக்கும்."
"பணிக்கொடை இரண்டு விஷயங்களைப் அடிப்படையாக கொண்டது. ஊதியம் மற்றும் பணியாற்றிய ஆண்டுகள். பணிக்கொடையை கணக்கிடும் சூத்திரம் மிகவும் கடினமானது அல்ல.
பணிக்கொடை = (கடைசி மாதம் பெற்ற சம்பளத்தின் அடிப்படை ஊதியம் +அகவிலைப் படி) x 15 x பணியாற்றிய வருடங்கள்)) /26
ஒரு நிறுவனத்தில் 21 ஆண்டுகள் 11 மாதங்கள் வேலை செய்த ஒருவரின் பணிக்கொடை 22 ஆண்டுகளுக்கு கணக்கிடப்படும். ஆறு மாதத்திற்கு அதிகமான காலம் ஒரு வருடமாக கணக்கிடப்படும். (அதுவே 21 ஆண்டுகள் 5 மாதம் பணிபுரிந்திருந்தால், அது 21 ஆண்டுகளாகவே கருதப்படும்).
ஒருவரின் அடிப்படை சம்பளம் 24 ஆயிரம் ரூபாய், அகவிலைப்படி 26 ஆயிரம் ரூபாய் என்றால் அவரது மொத்த சம்பளம் 24,000+26,000 = 50,000. இதை 15ஆல் பெருக்கினால் கிடைக்கும் 7,50,000த்தை 22ஆல் பெருக்கினால் கிடைக்கும் தொகை 16,500,000. அதை 26ஆல் வகுத்தால் கிடைக்கும் 6 லட்சத்து 34 ஆயிரத்து 615 ரூபாய் பணிக்கொடையாக கிடைக்கும்.
பணிக்கொடைக்கு குறைந்தபட்ச வரம்பு இல்லை என்றாலும், அதிகபட்ச வரம்பு 20 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு வரிவிலக்கு கிடைக்கும்.
பணியாளர் எதிர்பாராமல் இறந்துபோனால், பணிபுரிந்த மொத்த ஆண்டுகளின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படும்.
பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விடப் போகிறீர்களா? தொழில் தொடங்கும் திட்டம் உள்ளதா?அல்லது வெறுமனே இடம் அல்லது வேலை மாறுதலா? வேலையில் இருந்து விலகும் பணியாளர், 30 நாட்களுக்குள் பணிக்கொடை பெற விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனம் அல்லது முதலாளி பணிக்கொடை வழங்க மறுத்தாலோ அல்லது உரிய தொகையை குறைத்து கொடுத்தால் உதவி மையத்தை அணுகலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














