வீட்டில் பிரசவம் பார்ப்பது ஏன் ஆபத்தானது?

வீட்டில் பிரசவம் பார்ப்பது ஏன் ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் கடந்தவாரம் யூ டியூப் காணொளிகளை கொண்டு வீட்டில் பிரசவம் பார்த்ததில் இளம்பெண் இறந்தசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, இயற்கைவழி பிரசவம் தொடர்பாக பயிற்சிக்கூட்டம் நடத்த முற்பட்ட 'ஹீலர்' பாஸ்கர் கைதானார். தொடர்ந்து தேனியில் வீட்டுப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, சிகிச்சை அளிக்க முற்பட்ட அரசு அதிகாரிகளை தடுத்த குற்றச்சாட்டிற்காக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபோன்ற தொடர் கைதுகளும், அரசின் அறிக்கைகளும், வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்தானதா, அறிவியல்பூர்வமானதா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்-சேய் இறப்பைக் குறைத்த தமிழகம்

முக்கிய வாதங்களாக, வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டப்படி தடை உள்ளதா? மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தை பிறக்கவேண்டும் என இளம் தலைமுறையினர் விரும்புகின்றனரா? பயிற்சி இல்லாத நபர்கள் இயற்கை வழி பிரசவத்தை வியாபாரமாக்குகிறார்களா? இயற்கை வழி பிரசவத்தில் குழந்தை பெறவிரும்பினால் அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு வசதி செய்துள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவமனையில் நடப்பதாகவும், பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதும் தமிழகத்தில் எனவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்திய அளவில் குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மரணங்களைப் பொறுத்தவரை, ஒரு லட்சம் தாய்மார்களில் 160 பேர் இறக்கும் சூழல் நிலவுகிறது, ஆனால் தமிழகத்தில் அந்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு 62ஆக உள்ளது.

வீட்டுப்பிரசவங்களைக் கண்காணிக்க முடிவு

இந்த சூழலில் திருப்பூர் மற்றும் தேனியில் நடந்த வீட்டுப் பிரசவங்கள் அரசின் கவனத்தை பெற்றுள்ளன. வீட்டில் பிரசவங்கள் நடத்துவது பற்றி பயிற்சி இல்லாதவர்கள் கூட்டங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், தாய் மற்றும் குழந்தையின் உயிரை பாதிக்கும் வகையில் வீட்டில் பிரசவம் நடப்பது தெரியவந்தால் அதை தடுக்கவேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

குழந்தைபேறு

பட மூலாதாரம், Getty Images

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பேறுகால உதவி அளிக்க, எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பயிற்சியற்றவர்கள் பிரசவம் பார்த்தால், புகார் அளிக்க உதவி எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

வீட்டில் பிரசவம் பார்த்தல் சட்டத்துக்கு புறம்பானதா?

வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டத்திற்கு புறம்பானதா, என சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ''வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை. ஆனால் அரசின் பதிவு பெறாத நபர்கள் பிரசவம் பார்ப்பது குற்றம். பயிற்சியில்லாத நபர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மருத்துவம் என்று கூறி பிரசாரம் செய்வது குற்றம். தாய், குழந்தையின் உயிர் சம்பந்தப்பட்ட முக்கிய நேரத்தில் மருத்துவ பயிற்சி இல்லாத நபர்கள், குடும்ப உறவுகளாக இருந்தாலும், பிரசவம் பார்க்க முயல்வது குற்றம். சமூக ஊடகங்களில் வரும் தகவலைக் கொண்டு, பாதுகாப்பற்ற சிகிச்சை அளிப்பது ஆகியவை குற்றம் என்கிறோம்,'' என பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் தேனியில் நடந்ததுபோல பிரசவத்தின்போது உதவவரும் அரசு அதிகாரிகளை தடுப்பது குற்றம் என்றும் அவர் கூறினார்.

இயற்கை பிரசவத்தை விரும்பும் இளையதலைமுறை?

வீட்டில் நடக்கும் பிரசவங்களை தீவிர கண்காணிப்புக்கு அரசு உட்படுத்தியுள்ள வேளையில், மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்ன என்றும், மருத்துவமனைக்குப் போகாமல், வீட்டில் குழந்தை பிறக்கவேண்டும் என ஏன் பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்றும் இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் நபர்களிடம் கேட்டோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் பிறந்த தன்னுடைய ஆண் குழந்தையின் ஆரோக்கியம் சீராக உள்ளதாக கூறுகிறார் இயற்கை ஆர்வலர் கலாநிதி.

''திருப்பூரில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எங்கள் குழந்தை இயற்கைமுறையில்தான் பிறந்தது. ஆனால் பிரசவத்தின் போது, அரசு பதிவு பெற்ற செவிலியர் ஒருவர் எங்களுடன் இருந்தார். என் மனைவி கவிதாவுக்கு எந்த மருந்துகளும் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு கொடுக்கும் உணவில் கவனம் எடுத்துக்கொண்டேன். சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது அவருக்கு கடுமையான வலியோ,அதன் பிறகு உடல்உபாதைகளோ ஏற்படவில்லை. மகனும்,மனைவியும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்,'' என்கிறார் கலாநிதி.

இயற்கை முறையில் தனக்கு குழந்தை பிறந்தது குறித்து புத்தகம் எழுதியுள்ள கலாநிதி, வீட்டில் பிரசவம் என்பதை விரும்புபவர்கள், பிரசவத்தின்போது பயிற்சி பெற்ற நபர் ஒருவரை வீட்டில் வைத்துக்கொள்வது அவசியம் என்கிறார். ''குழந்தை இயற்கையாகப் பிறக்கவேண்டும் என்பது பெற்றோரின் இயல்பான விருப்பம். பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகப்பிரசவங்கள் நடக்கின்றன. வீட்டில் நடக்கும்போது முறையான வழிகாட்டுதல் என்பது தேவை. அனுபவம் மிக்கவர் ஒருவர் குழந்தை பிறக்கும்போது இருக்கவேண்டும்,'' என்கிறார் கலாநிதி.

சிசேரியன் பயத்தில் தாய்மார்கள்

மருத்துவமனைக்குச் சென்றால் சிசேரியன் செய்வார்கள் என்ற பயமும், மருந்துகள் இல்லாமல் இயற்கை முறையில் குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும்தான் வீட்டில் குழந்தை பிறக்கவேண்டும் என இந்த தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என்கிறார் செம்மைவனம் என்ற மரபுவழி அமைப்பை தஞ்சாவூரில் நடத்திவரும் செந்தமிழன்.

செந்தமிழன்

''திருப்பூரில் நடந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. அனுபவம் உடையவர்கள் இல்லாமல் யூட்யூப் காணொளியை வைத்துக்கொண்டு பிரசவம் நடத்தியது தவறு. ஆனால் அலோபதி மருந்துகள் இல்லாமல் வீட்டில் இயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் பெண்ணின் முடிவை அரசு எப்படி பார்க்கிறது என்பதை சிந்திக்கவேண்டும். அலோபதி மருத்துவம் இல்லாமல் சுகப்பிரசவம் நடக்கவேண்டும் என்று விரும்பும் ஒருவருக்கு என்ன வசதிகளை அரசு செய்துள்ளது, அவ்வாறான வசதிகள் இருந்தால் அதை பயன்படுத்திக்கொள்பவர்கள் இருப்பார்கள்'' என வீட்டுப்பிரசவத்தை விரும்புவதற்கான காரணங்களை விளக்கினார் செந்தமிழன்.

அமெரிக்கா, இங்கிலாந்து என மேலைநாடுகளில் கூட வீட்டுப் பிரசவம் அனுமதிக்கப்படுகிறது என்றும் மருத்துவமனையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்கிறார் செந்தமிழன்.

''உரிய மருத்துவ பயிற்சி இல்லாதவர்கள் மருத்துவம் பார்ப்பது ஆபத்து. அதேசமயம்,வீட்டில் பிரசவம் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு பேறுகால உதவியாளர்களை பற்றி அரசு விளம்பரப்படுத்தலாம். ஆங்கில மருந்துகள் இல்லாமல் குழந்தையை பிரசவிக்கவும், பாதுகாப்பான பிரசவத்தை நடத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தற்போது அச்ச உணர்வு ஊட்டும்முறையில், கட்டாயமாக அனைவரும் மருத்துவமனைக்கு வரவேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை,'' என்கிறார் செந்தமிழன்.

அச்சத்தை அரசு போக்கவேண்டும்

அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிசேரியன் செய்யப்படுகிறது என்றாலும், தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு இருக்கும் அச்சத்தையும் இந்த நேரத்தில் கணக்கில்கொள்ள வேண்டும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசுபதிவு பெற்ற அக்குபஞ்சர் ஹீலர் டிஎஸ் கணேசன்.

''அரசின் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால்கூட முப்பது சதவீதம் மக்கள் தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்கள். அவர்களில் சிலருக்கு, கட்டணத்தை வசூலிக்கவேண்டும் என்பதற்காக அலோபதி மருத்துவர்கள் தங்களுக்கு அறுவைசிகிச்சை செய்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கலாம். என்னிடம் சிகிச்சைக்கு வந்தவர்கள் பலரும், தனியார் அலோபதி மருத்துவமனைகளுக்கு முன்பு சென்றவர்கள். குழந்தை பெற்றுக்கொள்வது என்பது அதிகமாக காசு செலவாகும் நடைமுறையாக மாறிவிட்டது என்று அவர்கள் நம்புகிறார்கள். இதனை சரிபடுத்த, பக்கவிளைவுகள் இல்லாமல் குழந்தை பிறக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு, அரசு இயற்கை மருத்துவமனைகள் இருகின்றன என்றும், அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தவேண்டும்,'' என்கிறார் கணேசன்.

சிசேரியன் செய்வதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில்தான் பிரசவத்தின்போது இறக்கும் தாய்மார்களின் விகிதம் மிகவும் குறைவு

தமிழகத்தில் எழுபது சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடக்கின்றன என்றும் மருத்துவமனைக்கு வந்தவர்கள் எல்லோருக்கும் சிசேரியன் நடக்கும் என்ற நிலை இல்லை என்றும் வாதிடுகிறார் எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையின் நிலைய மருத்து அதிகாரி(Resident Medical Officer) கீதா.

''தமிழகத்தில் பழமையான தாய்சேய் மருத்துவமனை எழும்பூர் மருத்துவமனை. இங்கு ஒரு நாளில் குறைந்தது அறுபது பிரசவங்கள் நடக்கின்றன. ஒரு ஆண்டுக்கு 16,000 பிரசவங்கள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் இருந்து அதிக ஆபத்து நிறைந்த பிரசவத்தை சந்திப்பார்கள் என்று கருதப்படும் தாய்மார்கள் இங்குவந்து குழந்தையை பெற்றுக்கொள்கிறார்கள். தாய், சேய் இரண்டு உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அறுவைசிகிச்சை செய்யப்படும். முடிந்தவரையில் சுகப்பிரசவம் நடக்க முயற்சிகள் செய்வோம். சுகப்பிரசவத்தை விட சிசேரியன் செய்வதில் எங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும்,” என்கிறார் மருத்துவர் கீதா.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் நடக்கும் மொத்த பிரசவங்களில், சிசேரியன் பிரசவங்கள் 17.2 சதவீதமாக உள்ளது; தமிழகத்தில் அது 34.1சதவீதமாகவும், அண்டை மாநிலங்களான கேரளாவில் 35 சதவீதமாகவும், ஆந்திராவில் 40.1 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அறுவைசிகிச்சைகள் அதிகரிக்கின்றதா?

குழந்தைபேறு

சிசேரியன் பிரசவங்கள் அதிக அளவில் நடைபெறக் காரணங்கள் என்ன என்று கேட்டபோது இரண்டு விதமான விளக்கங்களை மருத்துவர் கீதா கொடுத்தார்.

''முதலில் ஆபத்து நிறைந்த சமயத்தில் குழந்தை மற்றும் தாயை காப்பாற்றவேண்டும் என்ற நிலையில்தான் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்படும். திடீரென தாய்க்கு ரத்தப்போக்கு கட்டுப்படுத்தமுடியாத அளவு வந்தால், தாயின் இடுப்பு எலும்பு குறுகலாகவும், குழந்தையின் அளவு பெரிதாகவும் இருந்தால் அறுவைசிகிச்சைதான் ஒரே வழி. தாயாக இருப்பவர் இதயநோயாளியாக இருந்தால் அல்லது அவருக்கு சீராகாத உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அவரை காப்பாற்ற வேண்டும், குழந்தையும் நல்ல முறையில் பிறக்கவேண்டும் என்னும்போது அறுவை சிகிச்சை செய்வோம்,'' என முக்கிய காரணங்களை அடுக்கினார்.

மேலும் தற்போதுள்ள வாழ்க்கைமுறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களின் ஆரோக்கியத்தில் உள்ள பின்னடைவு சிசேரியன் பிரசவத்திற்கு மற்றொரு முக்கிய காரணம் என்கிறார். ''உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, மனஉளைச்சல் என பல சிக்கல்களைச் சந்திக்கும் இளம்தாய்மார்களுக்கு இயற்கை முறையில் குழந்தை பெறுவது என்பது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது. இயற்கை பிரசவம் என்பது மருத்துவமனையில் சாத்தியம்தான். வீட்டில் பிரசவம் நடந்தால், உடனடி மருத்துவ உதவிகள் கிடைக்காது என்பதற்காக மருத்துவமனைக்கு கட்டாயம் வரவேண்டும் என்று சொல்கிறோம். இழப்பு ஏற்பாட்டால் அதை சரிசெய்யமுடியாது என்பதற்காக மருத்துவமனைக்கு வரச் சொல்கிறோம்,'' என்றார் கீதா.

காணொளிக் குறிப்பு, குழந்தை பிறந்தால் குளிக்கக்கூடாது - மரபை மாற்றும் சீனப் பெண்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :