You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை: 'மாணவியை பலி கொண்ட பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அனுமதி பெறவில்லை'
கோவையில் உள்ள கல்லூரியில் பயிற்சியாளர் கீழே தள்ளியதில் தடுமாறி விழுந்த மாணவி பலியான, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பி.பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்தார் 19 வயதான லோகஸ்வரி.
இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாலை 4 மணியளவில் அனைவரும் இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
லோகேஸ்வரியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய பயிற்சியாளர் ஆறுமுகம் அவரை கீழே தள்ளியுள்ளார். அப்போது நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது.
உடனடியாக லோகேஸ்வரிக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
அனுமதி இல்லை
இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தபோது கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற தற்காப்பு பயிற்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"இது முழுக்க முழுக்க சட்டவிரோதமான ஒரு செயல். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இது போன்ற தற்காப்பு பயிற்சிகளை அரசின் அனுமதியோடு மாவட்ட நிர்வாகம் மட்டுமே மேற்கொள்ளும். கலைமகள் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு பயிற்சி தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்காப்பு பயிற்சியை நடத்தி மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த விபத்து துரதிர்ஷ்ட வசமானது என்று அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தங்கள் அனுமதியுடன் இந்த ஒத்திகை நடத்தப்படவில்லை என்றும், அந்தப் பயிற்சியாளர் முறையாக பயிற்சி பெற்றவரல்ல என்றும் கூறியுள்ளது. போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாத இத்தகைய ஒத்திகைகளை நடத்த தாங்கள் ஒப்புதல் அளிப்பதில்லை என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.
தெளிவான விதிமுறைகள் இல்லை
2017ஆம் ஆண்டு அக்டோபரில் பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்தச் சுற்றறிக்கையில், உயர் கல்வி வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் மாணவர்களுக்கு நிலநடுக்கம், குண்டுவெடிப்பு, தாக்குதல். துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதத் தாக்குதல், இயற்கைப் பேரிடர் ஆகியவற்றை எதிர்கொள்ள கட்டாய வகுப்புகளை நடத்த வேண்டுமெனக் கூறியிருந்தது.
மாநில கல்வித் துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டபோது, பல்கலைக் கழக மானியக் குழு பயிற்சி அளிக்க வேண்டுமெனக் கூறியிருந்தாலும் இதற்கென ஒரு நடைமுறை தற்போதுவரை இருப்பதாகத் தெரியவில்லை என்றே தெரிவித்தனர். இம்மாதிரி ஒரு பயிற்சியில் என்னென்ன பயிற்சிகள் இடம்பெற வேண்டும், யாரை வைத்துப் பயிற்சியளிக்க வேண்டும், யாரிடமெல்லாம் அனுமதி பெறவேண்டும் என்பது குறித்து அரசுத் தரப்பிலிருந்து தெளிவான குறிப்புகள் ஏதும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரியவில்லை.
ஆகவே, இம்மாதிரி பயிற்சிகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே, தங்களுக்குத் தெரிந்த வகையில் நடத்திவருகின்றன.
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் பேசிய மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ, "தேசியப் பேரிடர் மேலாண்மை அமைப்பின் கவனத்திற்கு இதைக் கொண்டுசென்றிருக்கிறோம். தேசியப் பேரிடர் முகமையின் ஆலோசனைப் படி, இதை எப்படி நடத்துவது என்பது குறித்து தரப்படுத்தப்பட்ட செயல் முறைகளை (Standard Operating Prodedure) கொண்டுவருவோம்" என்று தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால், தற்போது இந்தப் பயிற்சிகளுக்கென தரப்படுத்தப்பட்ட செயல்முறைகள் வகுக்கப்படவில்லை என்பது தெரிகிறது.
"தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை நடத்த வேண்டுமென யுஜிசியிடமிருந்து கடிதம் வந்தது உண்மைதான். ஆனால், அதற்கான விதிமுறை ஏதும் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கெனத் தெளிவான விதிகளை வகுக்க வேண்டும். தற்போதைய சம்பவத்தில் அந்தப் பயிற்சியாளர், அசட்டையாக நடந்துகொண்டிருக்கிறார். இந்த மரணம் நடந்திருக்காவிட்டால், இந்த விவகாரமே பெரிதாகியிருக்காது" என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான டாக்டர் கலாநிதி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்