கடல் உயிர்களை அழிக்கும் எலிகள் - எப்படி?

    • எழுதியவர், விக்டோரியா கில்
    • பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்

எலிகளின் பெருக்கத்தால் லட்சகணக்கானோரின் வாழ்வாதாரம் சிதையலாம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வாழ்வாதாரம் எப்படி சிதையும் என்பதை தெரிந்துகொள்ள, பவளப்பாறைகள், அதற்கும் கடல் பறவைகளுக்கும் உள்ள தொடர்பு என சூழலியலின் பல அடுக்குகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பவளப் பாறைகளும், எலிகளும்

பவளப்பாறைகளின் அழிவுக்கும் எலிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

வெப்பமண்டலத் தீவுகளில் உள்ள பவளப்பாறைகளின் அழிவுக்கும் இந்த எலிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறார்கள் அவர்கள்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள செகோஸ் தீவை ஆக்கிரமித்த எலிகள், அந்தத் தீவில் உள்ள பவளப் பாறைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன என்கிறர்கள் அத்தீவில் ஆய்வினை மேற்கொண்டுள்ள ஆராய்ச்சியாளர்கள்.

வலைப் பின்னல்

இயற்கை ஒரு வலைப் பின்னல், இங்கு ஓர் இழையில் ஏற்படும் பாதிப்பு மற்றொன்றையும் பாதிக்கும் என்பது பொதுவிதி. எலிகள் நேரடியாக பவளப் பாறைகளை அழிக்கவில்லை.

எலிகள் கடல் பறவைகளை அழிக்கின்றன. கடல் பறவைகளின் கழிவுதான், பவளப் பாறைகளுக்கு உரமாக இருக்கின்றன. ஆக, கடல் பறவைகள் அழிய அழிய பவளப் பாறைகளும் அழிகின்றன.

இந்த தீவில் மனிதர்கள் யாரும் இல்லை. அவ்வபோது வரும் கப்பல்களால் இந்த தீவில் எலிகள் ஊடுருவி உள்ளன என்று சொல்லும் ஆய்வாளர்கள், இந்த பகுதிகளில் உள்ள மற்ற சிறு தீவுகளில் எலிகள் இல்லை என்கிறார்கள்.

லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக் கிரகாம் தலைமையிலான குழுதான் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. அவர், "எலிகள் வருவதற்கு முன்பு இருந்த தீவின் பவளப் பாறையின் வளத்திற்கும், இப்போதுள்ள நிலைக்கும் பெரும் வித்தியாசம் தெரிகிறது," என்கிறார்.

கடல் பறவைகளை அழித்து மொத்த சூழலியலையும் மிக மோசமாக எலிகள் கெடுத்துவிட்டன என்று சொல்லும் அவர், எலிகள் இல்லாத தீவுகளில் இந்த கடல் பறவைகள் பல மைல் பயணித்து பவளப் பாறைகளுக்கு உரமிடுகின்றன.

ஏன் பவளப் பாறைகளை காக்க வேண்டும்?

பெருங்கடல் பரப்பில் மொத்தமே 0.1 சதவீதம் மட்டுமே உள்ள பவளப்பாறைகள், பெருங்கடல் உயிரி பன்மைத்துவத்திற்கு முதன்மை காரணியாக இருக்கிறது.

ஒருவர் பல்லுயிர் பெருக்கத்தை விரும்புவாராயின் அவர் நிச்சயம் பவளப் பாறைகள் அழிந்து வருவது குறித்து கவலை கொள்ள வேண்டும் என்கிறார் நிக்.

மேலும் அவர், "பவளைப் பாறைகள் கடலின் பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. அதனால், கடல்வளம் சிறப்பாக இருக்கிறது. பவளப் பாறைகள் அழிந்தால் கடல் வளம் சிதையும், கடலை நம்பி இருக்கிற லட்சல்கணக்கானோரின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை இது செலுத்தும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :