You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு வகை காட்டு வாழை மரம்
'ஒண்ணு இங்க இருக்கு... இன்னொன்னு எங்க?' - கரகாட்டக்காரன் திரைப்படத்தில் வரும் வாழைப்பழ நகைச்சுவையை அனைத்து வயதினரும் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். ஆனால், இப்போது வாழைப்பழம் குறித்து வரும் தகவல் ரசிக்கும்படி இல்லை. ஆம், அழியும் தருவாயில் உள்ளது ஒரு வகை காட்டு வாழை மரம்.
மடகாஸ்கரில் மட்டுமே உள்ள இந்த வகை வாழைமரம், பெரும்பாலும் அழிந்துவிட்டது. இன்னும் ஐந்து மரங்கள் மட்டுமே காட்டில் மிச்சம் இருப்பதாக கூறுகிறது தரவு ஒன்று.
இந்த வகை வாழை மரத்தை காக்க வேண்டும் என்று சொல்லும் அறிவியலறிஞர்கள், "எதிர்காலத்தில் வாழைப் பழம் என்ற பழ வகை அழிந்துவிடாமல் இருப்பது இந்த வகை வாழை மரத்தை காப்பதில்தான் இருக்கிறது" என்கிறார்கள்.
உலகெங்கும் அதிகம் நுகரப்படும் வாழைப்பழமானது கவென்டிஷ் (Cavendish) வகையை சார்ந்தது. இது சுலபமாக பூச்சிகளால் தாக்கப்படும்.
ஆனால் இந்த மடகாஸ்கர் வாழைப்பழமானது அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுலபமாக பூச்சிகளால் தாக்கப்படாது
கிவ்வில் உள்ள ராயல் பொடானிக்கல் கார்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஏலென், இந்த வகை வாழைப்பழத்திற்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நோய் மற்றும் வறட்சியை தாண்டி வளரும் என்கிறார்.
ஏன் இந்த வாழைப்பழ மர வகை காக்கப்பட வேண்டும்?
இந்த வகை வாழைப்பழ மரம் அழிவது ஒட்டுமொத்த வாழைப்பழ இனத்தின் அழிவுக்கு வழிவகை செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இது குறித்து விரிவாக விளக்கும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஹெலினா ரலிமனானா, மடகாஸ்கர் தீவின் இயற்கை பாரம்பரியத்திற்கு இந்த வகை வாழை மரமும் ஒரு காரணம் என்கிறார்.
அண்மையில், சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் இந்த வகை வாழை மரத்தையும் சேர்த்து இருக்கிறது
ஹெலினா, "இந்த வகை வாழை மரத்தினை காப்பதன் மூலம், அதன் மரபணுவை கொண்டு பல ஆய்வுகளில் ஈடுபட்டு, நோய் தாக்குதலிலிருந்து பிற வாழை வகைகளையும் காக்க முடியும்" என்கிறார்.
ஏன் வாழை சுலபமாக நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது?
ஒரு சீப்பில் உள்ள ஒரு வாழைப்பழத்தை ஏதேனும் ஒரு பூச்சி தாக்கி நோய் ஏற்பட்டால் அது சுலபமாக பிற பழங்களுக்கும் பரவும். அதனால்தான் வாழைப்பழங்கள் சுலபமாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்