You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்?
- எழுதியவர், விக்னேஷ். அ
- பதவி, பிபிசி தமிழ்
(தென்னிந்திய மாநிலங்களுக்கு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவதற்கான காரணங்கள், தொழிலாளர்கள் உள்நாட்டுக்குள்ளேயே குடிபெயர்வதற்கான தேவை, அதனால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்டவை குறித்த பிபிசி தமிழின் கட்டுரைத் தொடரின் இரண்டாவது பாகம்.)
வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொழில் நகரான திருப்பூரில் ஜூலை 2016இல் ஓர் அதிர்ச்சியான செய்தி பரவியது.
திருப்பூரில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கிப் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முகமது மொஷிருதீன் எனும் நபர் தனது சொந்த மாநிலத்துக்குத் திரும்பியபோது, ஒரு ரயில் நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தவர்கள் மேற்கு வங்கக் காவல்துறையின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர். அவர் மீதான குற்றச்சாட்டு இணையதளம் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது.
- முதல் பகுதி:
- மூன்றாம் பகுதி:
பெற்றோரின் அனுமதி இல்லாமல் தன் காதலியைத் திருமணம் செய்துகொண்டு, திருப்பூருக்கு பிழைப்புத் தேடி வந்து தன் மனைவி மற்றும் இரு இளம் வயது மகள்களுடன் வசித்து வந்த மொஷிருதீனை அவர் வசித்து வந்த பகுதியினருக்கு ஒரு மளிகைக் கடைக்காரராக மட்டுமே தெரியும். ஒரு சர்வதேச தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டது அந்தக் காலகட்டத்தில், அங்கு வடமாநிலத் தொழிலாளர்களின் நம்பகத்தன்மை மீது பொதுச் சமூகத்தில் ஓர் அவநம்பிக்கையை உண்டாக்கியது.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு குற்றச் சம்பவத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படும்போதும், தேடப்படுவதாக செய்திகள் வெளியாகும்போதும், தமிழகத்தில் வந்து தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மீது ஒரு சந்தேகப் பார்வை விழுகிறது.
தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் நெரிசல் மிகுந்த அறைகளிலோ, அல்லது குழுவாக வேறு இடங்களிலோதான் அவர்கள் ஒன்றாகத் தங்குவதைப் பார்க்க முடிகிறது. பொதுச் சமூகம் வசிக்கும் குடியிருப்புகளில் அவர்கள் தங்குவது குறைந்த அளவிலேயே உள்ளது.
"எல்லா சமூகங்களிலும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் 1-2%தான் இருப்பார்கள். வடமாநில தொழிலாளர்களிலும் அந்த 1-2% இருப்பார்கள். அதற்காக நல்லவர்களாக உள்ள 90%க்கும் அதிகமான பிறரை சந்தேகிக்கக் கூடாது," என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன்.
வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மாநிலத்தில் குற்றம் செய்தால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பேசிய அவர், "அவர்களின் சொந்த மாநில காவல் துறையிடம் அவர்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். ஆனால், வேறு மாநிலத்தில் அவர்கள் குற்றம் செய்தபின் அவர்களின் காணொளி அல்லது புகைப்படம் கிடைத்தாலும், அவர்கள் உள்ளூரில் பரிட்சயம் இல்லாதவர்கள் என்பதால் அவர்களை பொதுமக்களால் அடையாளம் காட்டக் கூட முடியாது," என்றார்.
அதையும் மீறி அவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் சொந்த மாநிலத்துக்கே சென்றாலும் அவர்களைக் கைது செய்ய முடியாது என்று தன் சொந்த அனுபவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
"2014இல் கொலை செய்துவிட்டு, தான் வேலை செய்த நகைப் பட்டறையில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஒரு நபரைத் தேடி, ராஜஸ்தான் மாநிலம் பாத்மேர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குச் சென்றோம். அப்போது உள்ளூர் காவல் துறையைச் சேர்ந்த ஒரு நபரும் எங்களுடன் வந்திருந்தார். ஆனால், குற்றவாளியைக் கைது செய்வது குறித்து விசாரித்ததால், அவர் பெண்கள் தனியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி அவரைத் தாக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். இன்றுவரை அந்தக் குற்றவாளியைக் கைது செய்ய முடியவில்லை," என்றார்.
வேறு மாநிலங்களில் இருந்து வந்து குற்றம் செய்துவிட்டு தப்பிக்கும் நபர்களைப் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என்று இன்னொரு நபரின் கதையையும் சொன்னார் ராமச்சந்திரன்.
"நாசிக்கிலிருந்து ஒரு நபர் விமானம் மூலம் வேறு மாநிலங்களுக்குச் செல்வார். விமானப் பயணச் சீட்டுகளை இணையப் பரிமாற்றம் மூலமோ, ஏ.டி.எம் அல்லது கடன் அட்டைகள் மூலமோ அவர் வாங்க மாட்டார். பணத்தை ரொக்கமாகக் கொடுத்துதான் வாங்குவார்."
"விமானம் மூலம் தான் வந்து இறங்கும் ஊரில் ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுப்பார். ஒரு இடத்துக்குப் போகச் சொல்லிவிட்டு, போகும் வழியில் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்கு வண்டியைத் திருப்பச் சொல்வார். அது பெரும்பாலும் வெளி நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இல்லாத பிற்பகல் நேரமாகத்தான் இருக்கும்."
"பெரும் மருத்துவமனைகளில் எல்லா ஊழியர்களுக்கும் எல்லா மருத்துவப் பணியாளரையும் தெரியாது. எனவே அவர்களிடம் தன்னை ஓர் மருத்துவர் என்று பிறரிடம் அறிமுகம் செய்துகொள்வார். கழுத்தில் தான் கொண்டு வந்திருக்கும் ஸ்டெதஸ்கோப்பை அணிந்து கொள்வார். வெளிநோயாளிகள் பிரிவில் அப்போது இருக்கும் மருத்துவ உதவியாளரை ஏதேனும் மருத்துவ ஆவணங்களை வாங்கி வருமாறு எங்காவது அனுப்பிவிடுவார்."
"அந்த நேரத்தில் வெளியே காத்திருக்கும் பெண் நோயாளிகளில் அதிக நகைகள் அணிந்திருப்பவரை உள்ளே அழைப்பார். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது நகைகள் தடையாக இருப்பதாகக் கூறி, நகையைக் கழட்டச் சொல்வார். அவர்களுக்கு ஊசி போட திரும்பிப் படுக்குமாறு கூறி, அந்த நேரத்தில் நகைகளை லாவகமாகத் திருடிச் சென்றுவிடுவார்."
"பல கட்டத் தேடலுக்குப் பிறகு 2014இல் அந்த நபர் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கைது செய்யப்பட்டு தண்டனையும் வாங்கிக் கொடுக்கப்பட்டது. அவர் விடுதலையான சில மாதங்களிலேயே, அவரைத் தேடி கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து காவல் துறையினர் தமிழகம் வந்தனர்."
"நீண்ட நாட்கள் வந்து தங்கிப் பணியாற்றுபவர்கள் திட்டமிட்டு குற்றச்சம்பவங்கள் எதிலும் ஈடுபட அதிக அளவில் வாய்ப்பில்லை. குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அவர்கள் குற்றம் செய்யும் மாநிலத்துக்கு வந்துவிட்டு உடனே திரும்பி விடுவார்கள். நீண்டகாலம் தங்கிப் பணியாற்றுபவர்கள் குற்றம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் உள்ளிட்ட காரணங்களால் உணர்ச்சிவயப்பட்டு குற்றம் செய்தவர்களாக இருப்பார்கள்," என்கிறார் ராமச்சந்திரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :