You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உறங்கிய ரயில்வே ஊழியர், ஸ்தம்பித்து நின்ற ரயில்கள்: அச்சம் பரவிய நிமிடங்கள்
மேற்கு உத்தர பிரதேசத்தின் பிஜ்னொர் மாவட்டத்தில் உள்ள முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் உறங்கியதால் அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய பல ரயில்களின் பயணங்கள் தடைபட்டன.
ஏன் எதற்காக ரயில்கள் நிற்கின்றன என்று தெரியாததால் பயணிகள் மத்தியில் அச்சம் பரவியது.
மதுபோதை?
முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் தீப் சிங் மதுபானம் அருந்தி மயக்க நிலையில் உறங்கியதாக கூறுகிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
முர்ஸத்பூர் ரயில்வே நிலையத்தின் கண்காணிப்பாளர் சுக்லா, "பணி நேரத்தில் ரயில்வே மாஸ்டர் உறங்கியதால் அவர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை சார்ந்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆங்காங்கே நின்ற ரயில்கள்
வெள்ளிக்கிழமை இரவு முர்ஸத்பூர் ரயில் நிலையத்தில் தீப் சிங்குக்கு பணி. ஆனால், அன்று இரவு அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய எந்த தொடர்வண்டிகளுக்கும் சிக்னல் கிடைக்கவில்லை.
இதனால், ரயில்வே ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். ரயில்களும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
"அந்த மார்க்கத்தில் செல்ல வேண்டிய எந்த தொடர்வண்டிக்கும் சிக்னல் கிடைக்காததால் நாங்கள் கவலை அடைந்தோம். நாங்கள் முர்ஸத்பூர் ரயில் நிலையத்தை தொடர்புக் கொள்ள முயற்சித்தோம். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை. நான் முர்ஸத்பூர் ரயில் நிலையத்துக்கு விரைந்தேன். அங்கு சென்று பார்த்தபோது, தீப் சிங் அங்குள்ள ஒரு பலகையில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் மது அருந்தியது கண்டறியப்பட்டது" என்கிறார் ரயில்வே கண்காணிப்பாளர் சுக்லா.
ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்த தகவல்களை உடனே பகிர்ந்ததாக கூறுகிறார் அவர்.
பல மணி நேர தாமதத்திற்கு பின்பு, அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய ரயில்கள் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டன.
மது அருந்தவில்லை... உடல்நிலை சரியில்லை
ரயில்வே துறை தீப் சிங் மீது நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்திருந்தாலும், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார்.
"எனக்கு தொடர் இருமல். அதற்கான மருந்தை எடுத்து வருகிறேன். அன்று எனக்கு இருமல் அதிகமாக இருந்ததால் இருமல் சிரப்பை அதிகமாக அருந்திவிட்டேன். இதன் காரணமாக உறங்கிவிட்டேன். மது அருந்தவில்லை" என்கிறார் தீப் சிங்.
பிற செய்திகள்:
- தாய்லாந்து குகை: 4 சிறுவர்கள் மீட்பு, மற்றவர்ளை மீட்க ஆயத்தமாகும் குழு
- யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வலுக்கும் எதிர்ப்பு
- ஜப்பான் கனமழையால் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை
- லோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா?
- தென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்