ஹரியானா: பாலியல் வழக்கில் சிக்கினால் ஓட்டுநர் உரிமம் ரத்து

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகள், தலையங்கம் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை

பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுதங்கள் வைத்துக்கொள்வதற்கான உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.

முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை ஆகியவற்றைப் பெறுவதில் இருந்தும் அவர்கள் தடை செய்யப்படுவார்கள் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது.

தினமணி - மருத்துவ மாணவர் சேர்க்கை தற்காலிக நிறுத்தம்

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மொழிபெயர்ப்பு தவறாக இருந்த அனைத்து கேள்விகளுக்கும் சேர்த்து 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நிர்வாக இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அகில இந்திய இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஓரினச்சேர்க்கை மன நோய் அல்ல'

ஓரினச்சேர்க்கை என்பது 'மாறுபாடு தானே ஒழிய, மன நோய்' அல்ல என்று, ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்கக் கோரும் மனுக்களை விசாரணை செய்யும்போது உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான பாரபட்சம் மற்றும் தடைகள் ஆகியவற்றால் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

தி இந்து ஆங்கிலம் - பணவீக்கம் அதிகரிப்பு

இந்தியாவின் பண வீக்கம் ஐந்து மாதங்களில் அதிகபட்சமாக, ஜூன் மாதம் 5% ஆக உள்ளது. இதற்கு முன்பு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 5.07% ஆக இருந்தது.

மே மாதம் 3.1%ஆக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், ஜூனில் 2.91%ஆகக் குறைந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :