'இணைய சமநிலை' பரிந்துரைகள் ஏற்பு: உங்களுக்கு என்ன லாபம்?

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவிலுள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி இணையதள சேவையை வழங்கும் "இணைய சமநிலை" குறித்த டிராயின் (இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம்) பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் இணைய சமநிலை குறித்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், சுமார் 500 மில்லியன் இணையதள பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்தியாவில் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள "இணைய சமநிலை" குறித்த பரிந்துரைகள், உலகளவில் வலுவானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இணைய சமநிலை என்றால் என்ன?

இணையதள சேவை நிறுவனமும், அரசாங்கமும் சட்டப்பூர்வமாக நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து இணையதளங்களையும் எவ்வித பாகுபாடுமின்றி பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதை உறுதிசெய்வதே இணைய சமநிலை அல்லது நெட் நியூட்ராலிட்டி எனப்படும்.

அதாவது, இணைய சமநிலை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடுகளில் இணையதள சேவை நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி அதன் பயன்பாட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிடுவதை முடக்கவோ, அதன் வேகத்தை குறைக்கவோ அல்லது மற்றவற்றைவிட அதிகப்படுத்தவோ, நாடு அல்லது இடம் சார்ந்து அதிக கட்டணத்தை வசூலிப்பதையோ அல்லது சில இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டும் இலவசமாக அளிப்பதையோ மேற்கொள்ள முடியாது.

உதாரணத்திற்கு, இணையதளத்தையும், ஒரு தேசிய நெடுஞ்சாலையையும் வைத்துக்கொள்ளுங்கள். இணையதள சமநிலை என்றால், அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒரே வேகத்தில், பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படும். இதுவே, இணைய சமநிலையற்ற நிலை என்றால், வேகமாக செல்ல வேண்டுமென்று நினைக்கும் வாகனங்கள் சுங்க கட்டணத்தை கொடுத்தால்தான் அவ்வாறு செல்ல முடியும். மேலும், சுங்க கட்டணம் கொடுக்க விரும்பாத வாகனங்கள் ஒன்று மெதுவாக செல்ல நேரிடலாம் அல்லது அந்த சாலையில் செல்வதற்கே அனுமதிக்கப்படாது என்று கூறலாம்.

இணைய சமநிலையற்ற நிலையால் யாருக்கு லாபம்?

தங்களது வருமானத்தை பெருக்குவதற்கான வழிகளை தேடும் இணையதள சேவை நிறுவனங்களும், இணையதளங்களும் இணைய சமநிலையற்ற நிலையை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் முயற்சித்து வருகின்றன.

அதாவது, இணைய சமநிலையற்ற சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் இணையதள சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட சில இணையதளங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றை மட்டும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேகமாக அளிக்கலாம். இதன் மூலம், ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் இணையதளங்களை ஒருவர் பார்க்க முற்பட்டால், ஒன்று அது மெதுவாக செயல்படலாம் அல்லது முடக்கப்படலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் இணையதள சேவையை பயன்படுத்துகிறீர்கள் என்றும் உங்களுக்கு இணையதளத்தில் ஷாப்பிங் செய்வது மிகவும் பிடித்த விடயம் என்றும் வைத்துக்கொள்வோம். ஒருவேளை, இந்த இணைய சமநிலை பரிந்துரைகள் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், ஏர்டெல் நிறுவனமும் அமேசான் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்று செய்திருக்கும். அதன் மூலம், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மற்ற இணையதள சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை விட அமேசான் இணையதளத்தை அதிவேகமாக பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஏர்டெல் வாடிக்கையாளர்களால் பிளிஃப்கார்ட், ஈபே போன்ற தளங்களை அதே வேகத்தில் பார்வையிட முடியாத நிலையோ அல்லது சீரான வேகத்தை பெறுவதற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்தும் நிலையோ ஏற்பட்டிருக்கலாம்.

இதனால் ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு குறிப்பிட்ட இணையதள நிறுவனத்திடமிருந்து நேரடியான வருமானமும், அதன் காரணமாக அதிகரிக்கும் வாடிக்கையாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் வியாபாரத்தின் மூலமாக அந்த குறிப்பிட்ட இணையதள நிறுவனத்துக்கும் வருமானம் கிடைக்கும்.

இந்தியாவில் இந்த பிரச்சனை எப்போது எழுந்தது?

இணைய சமநிலை குறித்த விவாதம் இந்தியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு உருவானதாக தொழில்நுட்ப ஆய்வாளரான பிரசாந்தோ கூறுகிறார்.

இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கும் ஏர்டெலின் திட்டம் தொடக்கத்திலேயே நிறுத்தப்பட்டது. மேலும், சில இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகளை மட்டும் இலவசமாக வழங்கும் ஏர்டெலின் மற்றொரு திட்டமான 'ஏர்டெல் ஜீரோ'வும் முடக்கப்பட்டது.

சில இணையதளங்கள் அல்லது செயலிகளை மட்டும் இலவசமாக வழங்கும் 'ஜீரோ ரேட்டிங்' என்றழைக்கப்படும் இதுபோன்ற திட்டங்களை இந்தியாவில் செயற்படுத்திய கூகுள், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் சேவைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இணையதள சமநிலையை வலியுறுத்தி காணொளிகள், புகைப்படங்கள், மீம்ஸ்கள், சமூக ஊடகங்கள், இணையதளங்கள், கையெழுத்து இயக்கங்கள் மூலமாக கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

இந்த பரிந்துரைகளை யார் அளித்தது?

இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இணைய சமநிலையை வலியுறுத்தி எழுந்த குரல்களை பதிவு செய்த மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசிடம் தனது பரிந்துரைகளை அளித்திருந்தது.

இந்நிலையில், டிராய் அளித்திருந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய தொலைத்தொடர்புத்துறையின் செயலாளரான அருணா சுந்தரராஜன், "உடனடியாக அமலுக்கு வரும் இணைய சமநிலை சார்ந்த விதிகளை மீறி செயல்படும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்" என்று கூறினார்.

அடுத்தது என்ன?

இதன்படி, இந்தியாவிலுள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் எவ்வித பாகுபாடுமின்றி ஒரே வேகத்தில், எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இணையதள சேவையை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயமாகிறது.

கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்கு இணையதளத்தை கொண்டு சேர்க்கிறோம் என்ற பெயரில் இலவச சேவைகளை குறிப்பிட்ட சில இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு மட்டும் வழங்க முடியாது.

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் அமெரிக்காவிலேயே இணைய சமநிலை குறித்த விவாதங்கள் இன்னும் தெளிவான முடிவை அடையாத நிலையில், இந்தியாவில் இதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உலகளவில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

"இணைய சமநிலை குறித்த விவகாரத்தில் அமெரிக்காவே திணறிக்கொண்டிருக்கும்போது, இந்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் கொள்கை ரீதியிலான இந்த வலுவான முடிவை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினால்தான் இதுகுறித்த நீண்டகால நம்பிக்கை ஏற்படும்" என்று கூறுகிறார் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான மணி மணிவண்ணன்.

2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணைய சமநிலை குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு வேறுவிதமாக காணப்பட்டது குறித்து அவரிடம் கேட்டபோது, "வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்றாக இணையதளம் உள்ளது. நாட்டின் மூலை முடுக்குகளில் வாழும் ஒருவர் கூட உலகமெங்கும் வியாபாரம் செய்வதற்கு இணையதளமே காரணமாக உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறார்.

"சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜியோ நிறுவனத்தின் கைபேசியில் வாட்ஸ்ஆப், யூடியூப் போன்ற குறிப்பிட்ட சில செயலிகளை மட்டுந்தான் பயன்படுத்த முடியும் என்று அறிவித்திருப்பது இணைய சமநிலை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :