இந்தியா பெண்களுக்கு ஆபத்தான தேசம்: இந்த ஆய்வை எப்படி எடுத்துக்கொள்வது?
- எழுதியவர், ஜாக்கியா சோமன்
- பதவி, பெண்ணுரிமை செயல்பாட்டாளர்
இந்தியாதான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று கூறும் தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வில் நானும் கலந்துகொண்டேன். இது இந்தியாவுக்கு எந்த இடம் கிடைத்துள்ளது என்பது முக்கியமல்ல.

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் மீதான வெறுப்பும், ஆணாதிக்கமும் இந்த சமூகத்தை ஆள்கிறது. ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆறு பெண்களின் பிரச்சனைகளிலும் இந்தியா மிகவும் மோசமான நிலையிலுள்ளது.
இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது என்று ஊடகங்களில் வந்ததும் நமது விவாதம் மாறிவிடுகிறது.
இது நமது நாட்டுக்கு எதிரான புள்ளிவிவரம் என்று கூறுவதை விடுத்து, இந்தியச் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அவர்கள் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய விவாதத்தை தூண்டுவதன் மூலம் இந்த ஆய்வு நன்மையே செய்துள்ளது.
அரசு மட்டுமே இதற்கு பொறுப்பு என்று நான் கூறவில்லை. குடிமைச் சமூகத்துக்கும், இந்திய மக்களுக்கும் இதில் பங்குள்ளது.
எல்லா விதமான வர்க்கப் பின்னணியும் உடைய, எல்லா சமூகக் குழுக்கள் இடையிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களை இரண்டாம் தரமானவர்களாக நடத்தும் புறக்கணிப்பு நிகழ்கிறது.
அதிக வருமானம் உடைய, நன்கு படித்தவர்கள் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் குடும்ப வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலான பெண்கள் எல்லா மட்டத்திலும் பாரபட்சத்தை சந்திக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2013லேயே பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எத்தனை பெண்களுக்குத் தெரியும்?
இந்தியா ஒரு மக்களாட்சியைப் பின்பற்றும் நாடாக உள்ளபோதிலும், இந்தியப் பெண்களில் ஒரு பகுதியினர் முன்னேற்றம் அடைந்துவரும் சூழலிலும், ஆணாதிக்கம் தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது.
மக்களாட்சி உள்ள இந்தியா மக்களாட்சி இல்லாத அரசுகள் உள்ள நாடுகளுடன் இந்த ஆய்வில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தக் கேள்வி எழுவது இயல்பானதுதான். சிரியா, ஆப்கானிஸ்தான், சௌதி அரேபியா, சோமாலியா ஆகிய நாடுகள் போரால் பாதிக்கப்பட்ட, பழமைவாதம் அதிகமாக உள்ள நாடுகள்.
அந்த நாடுகளில் வாழும் பெண்கள் எளிய வாழ்க்கை வாழ்வார்கள் என்று யாரும் எதிரிபார்க்கவில்லை. அந்த நாட்டுப் பெண்கள் அதிக அளவிலான இன்னல்களுக்கு ஆளானவர்கள்.
ஆனால், இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நிகராக இருந்திருக்க வேண்டும். அந்த நாடுகளின் சட்டதிட்டங்கள் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்குகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகளை சரியாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசமாக எங்கு தோல்வியடைந்துள்ளோம் என்பதை ஆராய வேண்டும்.
ஆளும் கட்சி மட்டுமல்லாது எதிர்க்கட்சிகள் கூட, பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவை குறித்து முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

காவல்துறை உள்ளிட்ட அரசின் துறைகளும் இன்னும் அதிகமாக உணர்ந்து செயல்பட வேண்டும். காரணம், பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது இங்கு மிகவும் இயல்பானதாகப் பார்க்கப்படுகிறது.
வரதட்சணைக்காக கணவன் மனைவியை அடிப்பதுகூட இந்த சமூகத்தில் இன்னும் முழுமையாக விலக்கி வைக்கப்பட்டதாகவில்லை. ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளும் பெண்கள் உரிமை மற்றும் சமத்துவத்தை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்த சமூக ஆய்வை கண்டிப்பதைவிட, நமது சமூகத்தில் நிலவும் சூழலைக் குறிப்பிடும் ஒன்றாகவே இதை அணுக வேண்டும். இந்தியாவை அவமானப்படுத்துவதாக இந்த ஆய்வை கண்டித்தால், ஆணாதிக்க சமூகத்தை பொறுத்துக்கொள்கிறோம் என்றே பொருள்.
ஜாக்கியா சோமன் பாரதிய முஸ்லிம் மகிலா அந்தோலன் அமைப்பின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













